Published : 20 Feb 2019 04:00 PM
Last Updated : 20 Feb 2019 04:00 PM

குழப்பத்தில் ஜி.கே.வாசன்: திமுகவா? அதிமுகவா?- திடீர் அறிக்கையின் பின்னணி

அதிமுக கூட்டணியா? திமுக கூட்டணியா என்கிற தடுமாற்றத்தில் ஜி.கே.வாசன் இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. இதன் விளைவே கூட்டணி குறித்த அவரது அறிக்கை என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2019 நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் களை கட்டி வருகின்றன. சிறிய கட்சிகள்தானே என ஒதுக்கிய பெரிய கட்சிகள் தேடிச் சென்று கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளை வெல்வதை விட 21 சட்டப்பேரவை தொகுதிகளை வென்று ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதை நோக்கமாக அதிமுக தலைமை கருதுவதால் அதற்கு ஏற்ப சமரசமும் நடக்கிறது.

அதிமுக கூட்டணியில் இணைவார் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் குறித்த பேச்சு அடிபட்டது. பொதுவாக அரசியலில் பொறுப்பான, நிதானமான தலைவர் என பெயரெடுத்த ஜி.கே.வாசனுக்கு தமிழகத்தில் குறிப்பிட்ட செல்வாக்கு உள்ளது. அவர் அதிமுகவுக்கு எதிராகவும், பாஜகவுக்கு எதிராகவும் பல போராட்டங்களை நடத்தியுள்ளார்.

கடந்த 2016 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுடன் நல்ல இணக்கத்திலிருந்த வாசன் அதில் கூடுதல் தொகுதிகளுடன் நிற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதில் பிரச்சினை ஏற்பட்டது. பின்னர் ஸ்டாலினைச் சந்தித்து திமுக கூட்டணியில் இணைவதாக பொருள்படும்படி ஸ்டாலின் வீட்டு வாசலில் பேட்டி அளித்து வீட்டுக்குச் செல்வதற்குள் அறிவாலயத்தில் கருணாநிதியைச் சந்தித்த காங்கிரசார் திமுக கூட்டணியில் தாங்கள் இருப்பதாக அறிவித்து முட்டுக்கட்டை போட்டனர்.

இதனிடையே வேறு வழியில்லாமல் மக்கள் நலக்கூட்டணியில் இணைந்தார். இதில் பீட்டர் அல்போன்ஸ் போன்றவர்கள் தமாகாவிலிருந்து விலகினர். இதனால் நாடாளுமன்றத் தேர்தலில் கட்சியை வழிநடத்திச் செல்ல மிகக்கவனமாக முடிவெடுத்து பேச்சுவார்த்தையில் ஜி.கே.வாசனே நேரடியாக ஈடுபட்டு வருவதாக தமாகா கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் திமுகவில் இணைய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், மயிலாடுதுறை தொகுதியை வாசன்  கேட்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதே தொகுதியை காங்கிரஸின் மணி சங்கர அய்யருக்காக காங்கிரஸ் கேட்கும். அதே நேரம் அதிமுகவில் இரண்டு தொகுதிகள் வரை தர ஒப்புக்கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் திடீரென விடியல் சேகர் அமைச்சர் தங்கமணியைச் சந்தித்ததும் அவர் பேச்சு வார்த்தைக்காகச் செல்கிறார் என்ற தகவல் ஊடகங்களில் பரவவே பேச்சுவார்த்தையில் இது முட்டுக்கட்டை போடும் என்பதால் ஜி.கே.வாசன்தான் பேச்சுவார்த்தை நடத்தும் பொறுப்பு உள்ளவர் என விடியல் சேகரை அறிக்கைவிட வைத்துள்ளதாக தமாகா வட்டாரத்தில் பேசப்படுகிறது.

ஆகவே, மயிலாடுதுறை கிடைத்தால் திமுக அணியில் தமாகா  நிற்கும் என தமாகா தொண்டர்கள் மத்தியில் பேச்சு அடிபடுகிறது. ஸ்டாலினுடன் நல்ல நட்பில் உள்ளதால் காங்கிரஸின் ஆட்சேபனையும் அங்கு எடுபட வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.

ஆனால் மற்றொருபுறம் திமுக கூட்டணியில் நின்றால் காங்கிரஸுடன் இணைந்து தமாகா தொண்டர்கள் வேலை பார்க்க வேண்டி இருக்கும். இதனால் தனது கட்சித்தொண்டர்கள் காங்கிரஸுக்கு தாவும் நிலை ஏற்படலாம். இதனால் கட்சிக்குச் சிக்கல் வரலாம் என சில மூத்த நிர்வாகிகள் ஜி.கே.வாசனுக்கு ஆலோசனை கொடுத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

மோடி மீது நெருடல் இருந்தாலும் கட்சியைக் காப்பாற்ற வேண்டுமானால் அதிமுக பக்கம் போனால் நல்லது என அவர்கள் வாசனுக்கு ஆலோசனை கூறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கூட்டணியில் தமாகாவின் முதல் சாய்ஸ் திமுகவா? அதிமுகவா? என குழப்பத்தில் வாசன் உள்ளதாகத் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x