Published : 04 Feb 2019 07:55 AM
Last Updated : 04 Feb 2019 07:55 AM

திருப்பதி கோவிந்தராஜர் கோயிலில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள 3 தங்க கிரீடங்கள் கொள்ளை: சிசிடிவி கேமரா பதிவு உதவியுடன் போலீஸார் தீவிர விசாரணை

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் உள்ள திருப்பதி கோவிந்தராஜர் கோயிலில் நேற்று முன் தினம் இரவு ரூ. 50 லட்சம் மதிப்புள்ள 3 தங்க கிரீடங்கள் கொள்ளை போயின. இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

திருப்பதி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது கோவிந்தராஜர் கோயில். உயர்ந்த ராஜகோபுரத்துடன் கம்பீரமாக காட்சியளிக்கும் இக்கோயில், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. திருப்பதி ரயில் நிலையம் அருகே உள்ள இக்கோயிலில், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலைப்போன்றே இங்கும் ஆகம விதிகளின்படி தினசரி, வாராந்திர, மாத, வருடாந்திர பூஜைகள், விழாக்கள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், இங்குள்ள மூலவர் சன்னதிக்கு அருகே ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வரர் சன்னதியில் உள்ள உற்சவர்களின் 3 தங்க கிரீடங்கள் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) இரவு திருடுபோயின. இதுகுறித்து அறிந்த அர்ச்சகர்கள், இரவு 11 மணியளவில் தங்களது மேலதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், திருப்பதி தேவஸ்தான இணை நிர்வாக அதிகாரி போலா பாஸ்கர், தலைமை பாதுகாப்பு அதிகாரி கோபிநாத் ஜெட்டி, திருப்பதி எஸ்பி அன்புராஜன் மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் இரவு முழுவதும் கோயிலில் ஆய்வு மேற்கொண்டனர். இக்கோயிலுக்குள் உள்ள 15 கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டன.

இந்த சம்பவம் குறித்து நேற்று காலை திருமலை திருப்பதி தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி அனில்குமார் சிங்கால் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘கோவிந்தராஜர் சன்னதிக்கு அருகே உள்ள ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வரர் சன்னதியில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் கல்யாண வெங்கடேஸ்வரருக்கு அணிவிக்கும் 3 தங்க கிரீடங்கள் மாயமானது குறித்து போலீஸில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

இவை பழமையான தங்க கிரீடங்கள் ஆகும். 1351 கிராம் எடையுள்ள இந்த 3 கிரீடங்களின் மதிப்பு சுமார் ரூ. 50 லட்சம் என கூறப்படுகிறது. கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன’’ என்றார். இந்த கிரீடங்களை பக்தர்கள் யாராவது எடுத்து சென்றனரா? அல்லது கோயில் ஊழியர்கள் யாராவது அபகரித்து சென்றனரா? ஆகிய கோணங்களில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x