Published : 28 Feb 2019 09:30 AM
Last Updated : 28 Feb 2019 09:30 AM
தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் ஆன்மா சாந்தியடையும் வகையில், இந்திய விமானப் படையின் தாக்குதல் அமைந்துள்ளதாக ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
புல்வாமா தாக்குதல் சம்பவத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய விமானப்படை நேற்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் தாக்குதல் நடத்தியது. இந்தத் துல்லிய தாக்குதல் குறித்து ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரியான லெப்டினென்ட் கர்னல் என்.தியாகராஜன், ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியதாவது:
தாக்குதல் என்பது 2 வகைப்படும். ஒன்று எதிரிகளை நாமேதிட்டமிட்டு தாக்குவது. மற்றொன்று,எதிரிகள் நம்மைத் தாக்கும்போது தற்காப்புக்காக தாக்குவது. புல்வாமா தாக்குதல் சம்பவத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்ததாக்குதல் நடந்துள்ளது. பொதுவாக, இத்தகைய தாக்குதல்களை நடத்துவதற்கு முன்பாக, நமது உளவுத் துறை மற்றும் ரேடார் மூலம் கண்காணிப்பு மேற்கொள்வது உள்ளிட்ட பணிகள் முடுக்கி விடப்படும். எதிரிகள் பதுங்கியுள்ள பகுதிகள் மற்றும் அவர்களின் நடமாட்டம் குறித்துஉளவுத் துறை அளிக்கும் தகவல்கள் மற்றும் ரேடார் கண்காணிப்பு கருவிகள் மூலம் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் தாக்குதல் மேற்கொள்ளப்படும்.
தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்பாக வீரர்கள், ஏவுகணைகள், பீரங்கிகள், போர் விமானங்கள் ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும். தாக்குதல் நடத்தும்போது, தீவிரவாதிகள் பதுங்கியுள்ள பகுதிகளில் அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில், தீவிரவாதிகளை மட்டும் குறி வைத்து தாக்குதல் நடத்தப்படும். இன்றைய தாக்குதலில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்களில் 3 ஆயிரம் கிலோ எடையுள்ள குண்டுகளை பயன்படுத்தி 21 நிமிடங்களில்விரைவான துல்லிய தாக்குதல்நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதற்காக, மிராஜ்-2000 ரக போர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இந்திய விமானப் படைக்கு எவ்வித சேதமும் இன்றி இந்த தாக்குதலை வெற்றிகரமாக நடத்தி திரும்பி வந்துள்ளனர். இந்திய ராணுவத்தின் திறமையையும், வலிமையையும் உலகுக்கு மீண்டும் ஒருமுறை பறைசாற்றும் வகையில் இந்த தாக்குதல் அமைந்துள்ளது. சரியான நேரத்தில் சரியான முறையில் நடத்தப்பட்ட இந்த பதிலடி தாக்குதல் மூலம் பாகிஸ்தானுக்கு மட்டுமின்றி உலக நாடுகளுக்கும் இந்தியா ஒரு வலிமையான செய்தியை உணர்த்தியுள்ளது.
காஷ்மீரில் இந்திய எல்லைப் பகுதியில் இருந்து 35 முதல் 40கி.மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள பாலகோட் பகுதி, சர்வதேச தீவிரவாதிகளின் முக்கிய முகாமாக இருந்து வந்தது. இங்குள்ள தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டிருப்பது இந்தியாவுக்கு மட்டுமின்றி ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கும் மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது. அங்குள்ள தீவிரவாதிகளால் இந்தியாவுக்கு மட்டுமின்றி ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பிற நாடுகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டு வந்தது.
கடந்த 1988-ம் ஆண்டு முதல் தீவிரவாதிகளின் தாக்குதல்கள் தொடங்கின. இதுவரை தீவிரவாத தாக்குதல்களில் சிக்கி இந்திய ராணுவ வீரர்கள், மத்திய ரிசர்வ் காவல் படையினர், எல்லைப் பாதுகாப்பு படையினர் என சுமார் 5,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த வீரர்களின் ஆன்மா சாந்தி அடையும் வகையில் இத்தாக்குதல் அமைந்துள்ளது.
இந்த தாக்குதல் மூலம் உலக நாடுகளின் ஆதரவு இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. மத்திய அரசு எடுத்துள்ள இந்த துணிச்சலான முடிவை அரசியல் கட்சிகள் தங்களது அரசியல் லாபத்துக்காக பயன்படுத்தக் கூடாது. அது நமது ராணுவத்தையும், ராணுவ வீரர்களின் தியாகத்தையும், வீரத்தையும் கொச்சைப்படுத்துவது போலாகும். இவ்வாறு தியாகராஜன் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT