Published : 28 Feb 2019 09:16 PM
Last Updated : 28 Feb 2019 09:16 PM
உயிர் போகும் அளவுக்கு மரணத்தின் எல்லையைத் தொட்டு மீண்டதால் அபிநந்தன் அனைவரின் மதிப்பிற்குரிய வீரனாகிப் போனார். அவரது விடுதலையை, வரவை நாடே எதிர்பார்க்கிறது.
இந்தியா வீரத்திருமகன்களை அளித்த நாடு. வீரர்களைப் போற்றும் நாடு இந்தியா. வாய்ப்பு கிடைத்தால் தங்கள் வீரத்தை வெளிப்படுத்த அநேக வீரர்கள் எல்லைகளில் உள்ளனர். அவர்களில் ஒருவர் அபிநந்தன்.
போரை யாரும் விரும்பவில்லை. எதிரிகளிடம் பிடிபட்ட நமது விமானி அபிநந்தன் நலமாகத் திரும்ப வேண்டும் என ஒவ்வொரு இதயமும் துடித்தது. சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம், விமானி சிக்கினார் என்ற செய்தி கேட்டு ஒட்டுமொத்த இந்தியாவே பதைபதைத்து.
பாக். ராணுவத்தின் கையில் சிக்கி அந்த வீரன் அடிபட்டபோது தன் வீட்டில் ஒருவர் அடிபடுவதுபோன்று ஒவ்வொருவரும் உருகினார்கள். எதிரிகளிடம் சிக்கினாலும் நிலைகுலையவில்லை, கதறி அழவில்லை. தாக்குதலை சகித்துக்கொண்டான் அந்த வீரன். தனது ஆவணங்களையும் அழித்துவிட்டான் என கேள்விப்பட்டோம்.
எதிரியின் பாசறையில் கலங்காது தேநீர் அருந்தியபடி பாகிஸ்தான் மேஜரின் கேள்விக்குப் பதிலளித்தப்படி அவர்களது பண்பையும் பாராட்டி, இதை உனக்காக சொல்லவில்லை. என் இந்தியாவுக்குச் சென்றாலும் சொல்வேன் என நம்பிக்கையுடன் பேசிய மன தைரியம், தனது அடையாளம், விமானத்தின் வகையைக் கேட்டபோது சாரி மேஜர் என மறுக்கும் ராணுவ வீரனின் உள உறுதி பாராட்டத்தக்கது.
மூன்று நாட்களுக்கு முன் அபிநந்தன் ஒரு விமானப்படை வீரன், இன்று இந்தியாவின் திருமகன், அனைவரது வீட்டின் தலைமகன். அவரை விடுவிப்பதாக அறிவித்து இம்ரான் கான் இரண்டு கைகளை உயர்த்தி தோளைக் குலுக்கியபோது, பாகிஸ்தானின் ஒட்டுமொத்த கரவொலி அதை அங்கீகரித்தபோது இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் தனது வீட்டின் மூத்தமகன் விடுதலை ஆனதாக குதூகலித்தார்கள்.
ஒட்டுமொத்த இந்திய மக்களின் தவப்புதல்வனாக மாறிவிட்ட அபிநந்தன் இந்தியாவுக்குத் திரும்புவதையும், தாய் மண்ணை மிதிப்பதையும் தேசமே ஆவலோடு எதிர்பார்க்கிறது.
அபிநந்தனே வா தேசம் காத்திருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT