Published : 21 Feb 2019 03:45 PM
Last Updated : 21 Feb 2019 03:45 PM
மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு கடந்த சில ஆண்டாக பக்தர்கள் வருகை குறைந்துள்ளது.
உலக பிரசித்திப்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில், முக்கிய வழிப்பாட்டு ஸ்தலமாகவும், கட்டிட கலையின் பொக்கிஷமாகவும் திகழ்கிறது. இந்த கோயிலில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடக்கும். குறிப்பாக ஆண்டில் 240 நாட்கள் உற்சவ விழாக்கள் நடத்தப்படும்.
இந்த கோயிலுக்கு தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதால் 24 மணி நேரமும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய போலீஸார் ‘சிப்ட்’ முறையில் கோயிலின் ஐந்து கோபுர வாசல்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பக்தர்கள், சுற்றுலாப்பயணிகள் மெட்டல் டிடெக்டர் பரிசோதனைக்கு பின்னரே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
கோயிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல அனுமதி கிடையாது. அதற்காக ஒவ்வொரு கோபுர வாசல் அருகேயும் தனியாக காலணிகள் பாதுகாப்பு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளதுபோல், செல்போன் காப்பகமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மீனாட்சியம்மன் கோயிலில் இலவச தரிசனம், ரூ.100, ரூ.50 கட்டணத்தில் சிறப்பு நுழை தரிசனம், ரூ.20 நுழைவுக்கட்டணம் தரிசனத்தில் பக்தர்கள் கோயிலுக்கு செல்கின்றனர்.
தமிழகத்திற்கு வெளிநாடுகள், வடமாநிலங்கள் மற்றும் கேரளா, கர்நாடகா, ஆந்திராவில் இருந்து வரும் பக்தர்கள், ஆன்மீக சுற்றுலா வருவோர், கண்டிப்பாக மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வந்து செல்வார்கள்.
அதனால், மீனாட்சிம்மன் கோயிலில் நடை திறந்ததும் தினமும் காலையில் பக்தர்கள் கூட்டம், மீனாட்சியம்மனையும், சுந்தரேஸ்வரரையும் காண நீண்ட வரிசையில் காத்திருப்பார்கள். ஆண்டுக்கு சராசரியாக 50 லட்சத்திற்கு மேலான பக்தர்கள், சுற்றுலாப்பயணிகள் மீனாட்சியம்மன் கோயிலுக்கு வருவார்கள்.
ஆனால், கடந்த ஆண்டு பக்தர்கள் குறைந்ததாக கூறப்படுகிறது. கடந்த 2013-14ம் ஆண்டில் 57 லட்சத்து 31 ஆயிரத்து 650 பேரும், 2014-15ம் ஆண்டில் 59 லட்சத்து 26 ஆயிரத்து 72 பேரும், 62 லட்சத்து 99 ஆயிரத்து 30 பேரும் மீனாட்சியம்மன் கோயிலுக்கு வந்துள்ளனர். ஆனால், 2016-17ம் ஆண்டில் 45 லட்சத்து 4 ஆயிரத்து 824 பேராகவும், 2017-18ம் ஆண்டில் 41 லட்சத்து 15 ஆயிரத்து 758 பேராகவும் பக்தர்கள் வருகை குறைந்தது.
மீனாட்சியம்மன் கோயிலை மையமாக கொண்டே மதுரையின் வளர்ச்சி அமைந்துள்ளது. பக்தர்கள் வருகை குறைவால் ஒட்டுமொத்த மதுரையின் வளர்ச்சியும் குறைய வாய்ப்புள்ளது.
இதுகுறித்து கோயில் இணை ஆணையர் நடராஜனிடம் கேட்டபோது, ‘‘இந்த ஆண்டு ஜனவரி வரை, 21 லட்சத்து 34 ஆயிரத்து 218 பேர் வந்துள்ளனர். குறைந்ததாக சொல்ல முடியாது. பக்தர்கள் வருகை அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. சபரிமலை சீசன் நேரத்தில் மீனாட்சியம்மன் கோயிலில் பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும்.
சபரிமலையில் ஏற்பட்ட இயல்புநிலை பாதித்தால் கடந்த ஆண்டு மீனாட்சியம்மன் கோயிலுக்கு வருவார் கொஞ்சம் குறைந்தது. செல்போன் தடையால் பக்தர்கள் வருகை குறைந்ததாக சொல்ல முடியாது. செல்போன் தடையால் பக்தர்கள் தற்போது கோயிலுக்குள் எந்த தொந்தரவும் இல்லாமல் நிம்மதியாக சாமிதரிசனம் செய்து செல்கின்றனர், ’’ என்றார்.
உள்ளூர் பக்தர்கள் வருகை குறைவு ஒரு காரணமா?
மதுரையில் முன்பு சாதாரணமாக அன்றாட வேலையுடன் உள்ளூர் மக்கள் நகரப்பகுதியில் வந்தால் கூட மீனாட்சியம்மன் கோயிலுக்குள் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
அதுபோல், நகரப்பகுதியில் குடும்பமாகவும், வெளியூர்களில் இருந்து மதுரைக்கு வீட்டிற்கு தேவையான பொருட்கள், புத்தாடைகள் வாங்க வருபவர்கள் மீனாட்சியம்மன் கோயிலுக்கு செல்வார்கள்.
சுபநிகழ்ச்சிக்கு செல்பவர்கள் கட்டாயமாக மீனாட்சியம்மன் கோயிலுக்கு சென்று வந்தனர். தற்போது பாதுகாப்பு கெடுபிடி மட்டுமில்லாது, செல்போன்களுக்கு தடை விதிக்கப்பட்டதால் தங்கள் பல்வேறு ஆவணங்களையும், தனிப்பட்ட ரகசியங்களையும், பணபரிமாற்றங்களையும் கொண்டுள்ள செல்போன்களை கோயிலுக்கு வெளியே வைத்து செல்ல மனமில்லாமல் கடைசியில் கோயிலுக்கு வருவதையே உள்ளூர் மக்கள் பெருமளவு தவிர்த்துவிட்டதாக கூறப்படுகிறது.
அதனாலே, மீனாட்சிம்மன் கோயிலுக்கு பக்தர்கள் வருகை குறைந்ததாக கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT