Published : 08 Feb 2019 11:02 AM
Last Updated : 08 Feb 2019 11:02 AM
அண்மையில் நாமக்கல்லில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் மாநாடு நடைபெற்றது. மாநாட்டு திடலில் விவசாயம் மற்றும் வேளாண்மை சார்ந்த பல்வேறு அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. அங்கு, புதிய டிராக்டர்கள் மற்றும் கார்கள் நிறுத்தப்பட்டிருந்தன. அருகிலேயே, பழங்காலத்து இருசக்கர வாகனங்களும் நிறுத்தப்பட்டிருந்தது, பார்வையாளர்களின் கவனத்தைக் கவர்ந்தது. அங்கிருந்த சிலர், "ஏனுங்கண்ணா, புது வண்டிய கொண்டு வந்திருந்தீங்கனா நாலு காசு பாத்திருக்கலாம். எல்லாம் அதரப் பழசான வண்டியா இருக்கே, இத யாருங்கண்ணா வாங்குவாங்க?" என்று கேட்டனர். லேசான புன்முறுவலுடன், "இது சேல்ஸுக்கு இல்லீங்கண்ணா, பழைய வாகன கண்காட்சிக்காக கொண்டுவந்தோம்" என்று பதில் அளித்தார் எஸ்.ரமேஷ்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் பள்ளபாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட கருமாண்டிபுதுாரைச் சேர்ந்தவர் இவர்.
"நான் டிப்ளமோ படிச்சிருக்கேன். ஆனா, விவசாயம் செய்யறதுல ஆர்வம் இருந்ததால, விவசாயத்துல ஈடுபட்டு வர்றேன். அப்பா கே.பி.சுப்பிரமணியம், டீசல் புல்லட் வைச்சிருந்தாரு. அதுல அப்பா உட்கார்ந்துகிட்டு போற அழகப் பாத்துக்கிட்டே இருக்கலாம். இதனால, சின்ன வயசிலிருந்தே புல்லட் மீது காதல். அந்த புல்லட்டை அப்பா வித்தவாட்டி, எனக்காக ரூ.5 ஆயிரத்துக்கு பழைய பெட்ரோல் புல்லட் வாங்கிக் கொடுத்தார். ரெண்டு வருஷம் அதை ஓட்டிட்டு, ரூ.2 ஆயிரத்துக்கு வித்தேன். ஒரு வருஷத்துக்கு அப்புறம், நான் புல்லட்ட வித்தவருக்கிட்ட போய், என் புல்லட்ட திருப்பிக் கொடுங்க, காசு கொடுத்துடறேன்னு சொன்னேன்.
ரூ.1.50 லட்சமா?
அப்ப அவரு ரூ.1.50 லட்சம் கேட்டாரு. பழைய வண்டிக்கு இவ்வளவு விலையானு திகைச்சுப் போனேன். அப்புறமா, பழைய வண்டிங்கள வாங்கத் தொடங்கினேன். 2000-மாவது வருஷத்துல இருந்து பழைய இருசக்கர வாகனங்களை விலைக்கு வாங்கி, சேகரித்து வர்றேன். முதல்ல சொந்தக்காரங்களோட வண்டிங்கள வாங்கினேன். அப்புறம், ஃபிரண்ட்ஸுங்க கிட்ட வாங்கினேன். இணையதளத்துல வந்த விளம்பரங்கள பாத்தும் வாங்க ஆரம்பிச்சேன்.
ஒரு கட்டத்தில், பழங்கால வண்டிங்களை மட்டும் வாங்கத் தொடங்கினேன். சில வண்டிங்களை கல்லூரி மாணவர்கள் விலைக்கு கேட்பாங்க. அந்த வண்டிங்களை வித்துடுவேன். அதிக லாபத்துக்கெல்லாம் விக்க மாட்டேன். கையக் கடிக்காத விலைக்கு கொடுத்துடுவேன். பழைய வண்டிங்களுக்கு இப்போ நிறைய கிராக்கி இருக்குது. ஏன்னா, இளைஞர்கள்கிட்ட பழைய வண்டிங்களுக்கான மோகம் அதிகரிச்சிருக்கு. அதனால்தான் என்பீல்ட் கம்பெனிக்காரங்க, தங்களோட வண்டிங்கள புதுவடிவில் விற்பனைக்கு கொண்டுவந்திருக்காங்க. இதுக்கு நிறைய வரவேற்பும் இருக்குது. இதேபோல, ஜாவா பைக்கும் சீக்கரத்துல, பழைமை மாறாம புது டிசைன்ல வர்றதா பேசிக்கிறாங்க.
40 பழைய வண்டிங்க...
இப்ப எங்கிட்ட 40 பழங்கால வண்டிங்க இருக்கு. சின்ன மொபெட்டுல இருந்து, புல்லட் வரைக்கும் வண்டிங்களை வெச்சிருக்கேன். 1985-ல வித்த, சினன `மாருதி 800` காரையும் வாங்கி, பத்திரமாக வெச்சிருக்கேன்.
1957, 1960 காலகட்டத்தில தயாரிக்கப்பட்ட புல்லட், ஜாவா, ராஜ்தூத் வண்டிங்களையும் வெச்சிருக்கேன். இந்த ராஜ்தூத் வண்டி, போலந்து நாட்டுல தயாரிச்சது. அந்த வண்டியை ரூ.35 ஆயிரத்துக்கு வாங்கினேன். அதே மாதிரி, இங்கிலாந்து நாட்டுலதயாரிச்ச ஜாவா வண்டியும் வெச்சிருக்கேன்.ஒரே ரகத்தில் கூடுதலான வண்டிங்க இருந்தா, அதை வித்துடுவேன். பழங்கால வண்டிங்கள வாங்கும்போது, அத எங்க தயாரிச்சாங்க, எவ்வளவு விலைனு எல்லா விவரங்களையும் தெரிஞ்சுக்குவேன்.
ஈரோட்டை சேர்ந்த எங்க மாமா மணி, புல்லட்மெக்கானிக்.புல்லட் வண்டியை மட்டும்தான்சரி செய்வாரு. அதே மாதிரி,பழங்கால, ரிப்பேரான வண்டியைக் கொடுத்தாலும், தயார் செஞ்சு கொடுத்துடுவாரு. அவருக்கு, தனியார் பைக் கம்பெனி, விருது கொடுத்து கவுரவிச்சது. நான் பழைய வண்டிங்கள வாங்கி சேகரிக்கறதுக்கு, இதுவும் ஒரு காரணம்.
இதுக்கு முன்னாடி ஈரோட்டுல தனியார் கல்லூரியில பழங்கால இருசக்கர வாகனக் கண்காட்சி நடத்தியிருக்கேன்.
இப்ப 200 சிசி, 250சிசினு அதிக திறன்கொண்ட வண்டிங்க வருது. ஆனா, அந்தக் காலத்தில் எந்த மாதிரியான வண்டிங்கள ஓட்டினோமுன்னுயாருக்கும் தெரியறதில்லை. அதனாலதான், பழங்கால வண்டிங்க கண்காட்சியை நடத்தி வர்றேன்" என்றார் பெருமிதத்துடன். "உங்கள் வீட்டில் உள்ளவர்கள், இது தொடர்பாக எதுவும் சொல்வதில்லையா?" என்று கேட்டதற்கு, "அதெல்லாம் ஒண்ணும் பிரச்சினை
யில்லீங்க. குடும்பத்துல இருக்கறவங்க ஒத்துழைப்பு கொடுக்கறதுனாலதான், வண்டி வாங்கறது சாத்தியமாகுது" என்றார்.
ஸ்பேர் பார்ட்ஸ் கிடைக்குமா?
"வாகனங்கள் பழுதடைந்தால் என்ன செய்வீர்கள். உதிரி பாகங்கள் கிடைக்கிறதா?" என்று கேட்டதற்கு, "பழைய வண்டிங்கள்ல பெரிய வேலை எதுவும் இருக்காது. வண்டிங்க ரிப்பேரானா, ஃபிரண்ட்ஸ்ஸுங்க, தெரிஞ்சவங்க மூலமா வெளி மாவட்டம் இல்லாட்டி வெளி மாநிலத்துல ஸ்பேர் பார்ட்ஸ் வாங்கிடுவேன். தொடர்ந்து, பல இடங்கள்லயும் பழங்கால வாகனகண்காட்சி நடத்தறதுதான் என் நோக்கம். இங்க இருக்கற எல்லா வண்டியும், ஓடற கண்டிஷன்லதான் இருக்கு. இப்ப வர்ற வண்டிங்க எல்லாம் கம்மி வெயிட்ல இருக்கு. பழைய வண்டிங்க வெயிட் ஜாஸ்தி. ஒருமுறை சரி செஞ்சா போதும். அதுபாட்டுக்கு ஓடிக்கிட்டே இருக்கும் என்ன இருந்தாலும் 'ஓல்டு ஈஸ் கோல்டுதானுங்க" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT