Last Updated : 08 Feb, 2019 11:23 AM

 

Published : 08 Feb 2019 11:23 AM
Last Updated : 08 Feb 2019 11:23 AM

சென்னை துணை நடிகை கொலையைப் போல் ஊட்டியில் 23 ஆண்டுகளுக்கு முன் நடந்த ஆண் நண்பர் கொலை சம்பவம்: வழக்கை விசாரித்த ஓய்வுபெற்ற காவல் உதவி ஆணையர் பேட்டி

சென்னையில் துணை நடிகை சந்தியாவை அவரது கணவர் பாலகிருஷ்ணன் கொலை செய்து, உடலை துண்டு துண்டுகளாக்கி பல்வேறு இடங்களில் வீசிய சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதேபோன்று கடந்த 23 ஆண்டுகளுக்கு முன் பரபரப்பாகப் பேசப்பட்ட கொலை சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. கேரள பெண் மருத்துவர் ஓமனா என்பவர், தனது ஆண் நண்பரை கொலை செய்து உடலை துண்டுதுண்டாக வெட்டி பல்வேறு இடங்களில் வீசிச் சென்று தப்ப முயன்றபோது போலீஸாரிடம் சிக்கினார்.

அந்த வழக்கை விசாரித்த அப்போதைய கொடைக்கானல் காவல் ஆய்வாளரும், பின்னர் மதுரையில் காவல் உதவி ஆணையராகப் பணியாற்றி தற்போது ஓய்வுபெற்றவருமான கலைமோகன் கூறியதாவது:

1996-ல் கொடைக்கானல் காவல் ஆய்வாளராகப் பணிபுரிந்தேன். அப்போது இந்த சவாலான வழக்கை விசாரித்தேன். கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த ஓமனா என்ற பெண் மருத்துவருக்கும், அப்பகுதியில் கட்டிடப் பணிக்கு வந்த பொறியாளரான கொல்லத்தைச் சேர்ந்த முரளிதரன் என்பவருக்கும் தொடர்பு ஏற்பட்டது. முரளிதரன் ஏற்கெனவே திருமணமானவர்.

இதற்கிடையே மலேசியாவில் அரசு மருத்துவராகப் பணியாற்றச் சென்றார் ஓமனா. ஆனால், அவரை தொடர்ந்து தொந்தரவு செய்தார் முரளிதரன். இதனால் ஓமனாவின் மனநலம் பாதிக்கப்பட்டது. இந்நிலையில், மனநலம் பாதிக்கப்பட்டவர் மருத்துவராக இருப்பது தொடர்பாக மலேசிய அரசுக்கு முரளிதரன் புகார் கடிதம் அனுப்பினார். இதனால் ஏற்பட்ட நெருக்கடியால் வேலையை ராஜினாமா செய்த ஓமனா, இந்தியா திரும்பினார்.

தனக்கு தொடர்ந்து தொந்தரவு செய்து வரும் முரளிதரனை கொலை செய்ய திட்டமிட்ட ஓமனா, அவரை ஊட்டிக்கு அழைத்துச் சென்றார். அங்கு தங்கும் விடுதியில் விஷ ஊசி செலுத்தி முரளிதரனை ஓமனா கொலை செய்தார். பின்னர் உடலை துண்டு துண்டாக்கி பிளாஸ்டிக் பைகளில் கட்டி சூட்கேஸ்களில் வைத்து காரில் எடுத்துக் கொண்டு கொடைக்கானல் சென்றார். அங்கு சூசைட் பாயிண்டில் வீசுவதற்காக சென்ற நிலையில், சூட்கேஸில் இருந்து துர்நாற்றம் வீசியதை அறிந்த ஓட்டுநர் ரகசியமாகப் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து ஓமனாவை கைது செய்தோம். அவரை ஊட்டி போலீஸாரிடம் ஒப்படைத்தோம். பிறகு அந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்தனர். 23 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது அதே போன்ற சம்பவம் சென்னையில் நடந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x