Published : 04 Feb 2019 10:47 AM
Last Updated : 04 Feb 2019 10:47 AM
மதுரையில் கொஞ்சம் சோறு, கொஞ்சம் குழம்பு, காய்கறிகள் என்ற வகையில் எடை அளவில் குறைந்த விலையில் கடையொன்றில் உணவு விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
இன்றைய சூழலில் பல குடும்பங்களில் கணவன், மனைவி இருவரும் பணிக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. தினமும் அவசர அவசரமாக ஒரே வகையான உணவுகளையே திரும்பத் திரும்ப சமைப்பதால் சலித்துப்போகும் குடும்பத்தினர் பலர் விடுமுறை நாட்களில் ஓட்டல்களை நோக்கி படையெடுக்கும் போக்கு சமீப காலமாக அதிகரித்து வருகிறது. அவர்களின் விருப்பத்துக்கேற்ப ஓட்டல்களும் புதுப்பது விதங்களில் சாப்பாடு வகைகளை அறிமுகப்படுத்துகின்றன. சில ஓட்டல்கள் உணவு தயாரிப்பதில் மட்டுமல்ல, உணவு விநியோகத்திலும் சில புதுமைகளை புகுத்துகின்றன.
அந்த வகையில் மதுரையில் கொஞ்சம் சோறு, கொஞ்சம் சாம்பார், காய்கறி என தனித்தனியாக எடை போட்டு தேவைக்கற்ற அளவுகளில் வாடிக்கையாளர்கள் வாங்கிக்கொள்ளும் வசதி அண்ணாநகர் யானைக்குழாய் அருகில் உள்ள ‘அண்ணாச்சி விலாஸ்’ கடையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இந்த கடையில் இட்லி மாவு மட்டுமே விற்பனை செய்யப்பட்டது. பின்னர் அதனோடு, இரவில் மட்டும் இட்லி தயாரித்து எடையளவில் தரத் தொடங்கினர். தற்போது காலை 11 மணி முதல் பிற்பகல் 2 வரை சோறு, சாம்பார், காய்கறி உள்ளிட்டவற்றையும் எடை அளவில் விற்பனை செய்து வரு கின்றனர். பெரும்பாலான ஓட்டல்களில் நிர்ண யிக்கப்பட்ட விலையில், நிர்ணயிக்கப்பட்ட அளவில் சாப்பாட்டை வாங்க வேண்டும் என்ற முறையே உள்ளது. ஆனால், அண்ணாச்சி விலாஸில் தேவைக்கேற்ப உணவு வாங்கிக்கொள்ளலாம் என்பதால், செலவு குறைவாக உள்ளது. ரசம் மட்டும் வேண்டு மென்றாலும், அதை மட்டும் எடை போட்டு பாக்கெட்டில் வாங்கிக் கொள்ளும் வசதி உள்ளது.
இது குறித்து கடையின் மேலாளர் ஆர்.தங்கக்கண்ணன் கூறியதாவது:பொதுவாக ஒருவேளைக்கு ஒருவர் காய்கறிகள் உட்பட 300 கிராம் சோறுக்கு மேல் சாப்பிட முடியாது. பெரிய ஓட்டல்களில் அதிக பணம் செலவிட்டு உணவை வீணாக்குவதைத் தவிர்க்க, தேவைக்கேற்ப சோறு, காய்கறி, குழம்பு வகைகளை வாங்கிக்கொள்ளும் வசதியை ஏற்படுத்தியுள்ளோம். 500 கிராம் சோறு ரூ.15-க்கும், 200 கிராம் சாம்பார், 200 கிராம் வத்தல் குழம்பு, 150 கிராம் ரசம், 150 கிராம் மோர், 100 கிராம் கீரை கூட்டு ஆகியவை தலா ரூ.5-க்கும், அப்பளம் ஒன்று ரூ.3, 100 கிராம் பாயாசம் ரூ.7-க்கும் விற்கிறோம். கீரை உட்பட 4 வகை காய்கறிகளை தினமும் தயாரிக்கிறோம். இது தவிர ரூ.25 விலையில் 300 கிராம் எடையில் வெரைட்டி ரைஸ் தருகிறோம்.
சிலர் சோறு மட்டும் வாங்கிச்செல்வர். சிலர் காய்கறி, சாம்பாரை மட்டும் வாங்கிச் செல்கின்றனர். தினமும் 60 முதல் 70 கிலோ சோறு விற்பனையாகிறது. அஜினமோட்டோ உள்ளிட்ட எந்தவிதமான ரசாயன சுவையூட்டிகளையும் சமையலில் நாங்கள் பயன்படுத்துவதில்லை. தரமான பொருட்கள் மூலம் உணவு தயாரிக்கிறோம் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT