Published : 27 Feb 2019 11:05 AM
Last Updated : 27 Feb 2019 11:05 AM

சுருள்பாசி வளர்ப்பில் எம்.சி.ஏ. பட்டதாரி

பல்வேறு நெருக்கடிகளிலும் விவசாயத்தை நேசிக்கும் கோடிக்கணக்கான விவசாயிகள் இந்தியாவில் இருக்கிறார்கள். அதேசமயம், என்ன செய்தால் இழப்பின்றி விவசாயம் செய்ய முடியும் என்று பல்வேறு முயற்சிகளையும்  மேற்கொண்டு வருகின்றனர். விவசாயத்துடன், சார்புத் தொழில்களான  கால்நடை வளர்ப்பு, கோழி வளர்ப்பு, பட்டுக்கூடு வளர்ப்பு, தேனீ வளர்ப்பு உள்ளிட்டவற்றிலும் ஈடுபட்டுள்ளனர்.

தற்போதெல்லாம்,  தகவல் தொழில்நுட்பம், பொறியியல், கணினி அறிவியல் பட்டதாரி இளைஞர்கள் பலரும், இயற்கை விவசாயத்தில் களமிறங்கியுள்ளனர். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் வட்டாரம் அயலூரைச் சேர்ந்த பொன்னுசாமியும் அவர்களில் ஒருவர். எம்.சி.ஏ. பட்டதாரியான பொன்னுசாமி, சென்னையில் மென்பொருள் நிறுவனத்தில் மூன்று ஆண்டுகள் பணியாற்றிவிட்டு, மீண்டும் ஊருக்கே திரும்பி வந்துவிட்டார். விவசாயக்  குடும்பத்தில் பிறந்த இவர் தேர்ந்தெடுத்த தொழில் ‘சுருள்பாசி’ வளர்ப்பு.

‘ஸ்பைருலினா’ என்றழைக்கப்படும் சுருள்பாசி, நீரில் வளரக்கூடிய, கண்ணுக்குத் தெரியாத சுருள்வடிவ நீலப்பச்சைப் பாசியாகும்.  முதன்முதலில் சூரிய ஒளியில் உணவு தயாரித்து வாழ்ந்த தாவரங்களில் இதுவும் ஒன்று. பல நூற்றாண்டுகளுக்கு முன்பே மெக்சிகோ நாட்டு மீனவர்கள், சுருள்பாசியை உணவாகக் கொண்டு, நல்ல உடல் வளத்துடன் இருந்துள்ளார்கள்.

அதேபோல, ஆப்பிரிக்காவில் பெரும் பஞ்சம் ஏற்பட்டபோது சுருள்பாசிதான் மக்களைக் காப்பாற்றியுள்ளது.  1884-ல் விட்ரெக் மற்றும் நார்சென்ரிக் என்ற அறிவியல் அறிஞர்கள் சுருள்பாசியை அறிமுகப்படுத்தினர். ஊட்டச்சத்துக் குறைபாடுகளை ஈடுகட்டவும், ரத்தசோகையைக் கட்டுப்படுத்தவும் இது பயன்படுத்தப்படுகிறது.

புரதம், கால்சியம், பொட்டாசியம், வைட்டமின்கள் உள்ளிட்ட எண்ணற்ற சத்துகளை மனிதர்களுக்கும், கோழி, மீன், இறால், கால்நடைகள் உள்ளிட்டவைகளுக்கும் வழங்கும் சுருள்பாசியின் எடையில் 70 சதவீதம் வரை புரதம் இருப்பது சிறப்புக்குரியது. இப்படி, வித்தியாசமான நீர்வாழ் பாசித் தாவரத்தைத்தான், நீர்ப்பாசன வசதி இல்லாத அயலூரில், ஆழ்குழாய்க் கிணற்றை நம்பி உற்பத்தி செய்து வருகிறார் பொன்னுசாமி.

சுருள்பாசி வளர்ப்பில் ஆர்வம் எப்படி வந்தது என்று விளக்கினார் பொன்னுசாமி. “மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றினாலும், விவசாயத்தை விட்டு விலகியிருப்பதை மனம் ஏற்கவில்லை. இதனால், கோழி, காளான் வளர்ப்பில் ஆர்வம் செலுத்தினேன். இந்த நிலையில், சுருள்பாசி வளர்ப்பு குறித்து ஒரு நண்பர் தெரிவித்தார். இதையடுத்து, சுருள்பாசி குறித்த பல்வேறு தகவல்களைத் திரட்டினேன்.

தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம்,  மைசூரில் உள்ள உணவு ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றில் சுருள்பாசி குறித்து பயிற்சி பெற்றேன். பின்னர், சுருள்பாசி வளர்ப்பைத் தொடங்கினேன்.

புரதச்சத்து மிகுந்த சுருள்பாசியை தினமும் 2 முதல் 6 கிராம் வரை நேரடியாகவும், உணவுப் பொருட்களுடனும் கலந்து சாப்பிடலாம்.  இதில் உள்ள குளோரோபில் ரத்தசோகையைக் கட்டுப்படுத்துகிறது. ‘பீட்டாகரோட்டின்’ பார்வைத் திறனை மேம்படுத்த உதவுகிறது.  கேரட்டை விட 25 மடங்கு சத்தும், பாலைவிட 7 மடங்கு கால்சியம், காய்கறி, பழங்களைவிட 10 மடங்கு பொட்டாசியம் மற்றும் அதிக அளவில் ஒமேகா-3  கொழுப்பு அமிலங்களும் உள்ளன.

கறவைமாடுகளுக்கு சுருள்பாசியைக் கொடுப்பதால், பால் அளவும், கொழுப்புச் சத்தும் அதிகரிப்பதும், கோழிகளுக்கு அளிப்பதால் மிருதுவான இறைச்சியும், புரதம் மிக்க முட்டையும் கிடைப்பதும், மீன் வகைகளுக்கு ஊட்ட உணவாகக் கொடுக்கும்போது எடை அதிகரிப்பதும் ஆய்வில்  உறுதி செய்யப்பட்டுள்ளது.  மேலும், `ஸ்பெருலினா’ இயற்கை நிறமியாகவும், அழகுசாதனப் பொருட்கள் தயாரிப்பிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது” என்றார் பொன்னுசாமி. இவரது மனைவி பரணி, சுருள்பாசி உற்பத்திக்கு உறுதுணையாக இருக்கிறார்.

சுருள்பாசி உற்பத்தி செய்வதற்கு,  பிரம்மாண்டமான தண்ணீர்த் தொட்டிகள் அமைக்கவும், தொடர்ந்து தண்ணீரை கலக்கி விடுதல், மூலப்பொருட்கள் இடுதல், நீரின் கார அமிலத் தன்மையைப் பராமரித்தல், துணிகள் மூலம் பாசியை வடிகட்டி, உலர்த்துதல் போன்ற நடைமுறைகளுக்கும் பல லட்சம் முதலீடு செய்ய வேண்டியுள்ளது.  மேலும், தொடர் செலவினங்களும் உள்ளதால், நிறைய பேர் இந்தத் தொழிலில் ஈடுபட முன்வருவதில்லை.

சென்னை, புதுச்சேரி, வேலூர், சிவகாசி, தூத்துக்குடி பகுதிகளில்,  40-க்கும் மேற்பட்ட இடங்களில் மட்டும் சுருள்பாசி தற்போது உற்பத்தி செய்யப்படுகிறது.

சுருள்பாசியை சந்தைப்படுத்துதல், ஏற்றுமதி வாய்ப்புகள் ஒரு சில மொத்த வணிகர்களை நம்பியே உள்ளதால்,  நல்ல விலை கிடைப்பதிலும் சிக்கல் நீடிக்கிறது. ஒரு கிலோ சுருள்பாசியை ரூ.1,000-க்கு மேல் விற்பனை செய்தால்தான் நஷ்டமின்றி இந்த தொழிலில் ஈடுபட முடியும் என்ற நிலையில், உள்ளூரில் சுருள்பாசி விற்பனைச் சந்தையை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது. இதன் உற்பத்தியில் உலக அளவில் சீனா, முதலிடத்தில் உள்ளது. மியான்மர், பிரான்ஸ் போன்ற நாடுகளில் சுருள்பாசி வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் அரசு மானியங்களை வழங்குகிறது.

இதுகுறித்து பொன்னுசாமி கூறும்போது, “சுருள்பாசி வளர்ப்புக்காக ரூ 60 லட்சம் முதலீடு செய்துள்ளேன். வங்கிக் கடனாக ரூ 10 லட்சம் பெற்றுள்ளேன். விவசாயிகளின் உபதொழிலாக மாறிவரும் சுருள்பாசி வளர்ப்புக்கு, மானியத்துடன் வங்கிக் கடன் வழங்கினால், நிறைய விவசாயிகள் இத்தொழிலில் ஈடுபட முடியும். மேலும், புரதச்சத்து அதிகமுள்ள சுருள்பாசியை, பள்ளிகளில் சத்துணவுடன் சேர்த்துக் கொடுக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சுருள்பாசியின் பாரம்பரியம், முக்கியத்துவம், உணவில் அதை சேர்ப்பது குறித்து அரசு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்” என்றார்.

குழந்தைகளுக்கு சத்துக் குறைபாடு ஏற்படக் கூடாது என்பதற்காக பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வரும் அரசு, பாரம்பரிய உணவுப்பொருளாகக் கருதப்படும் சுருள்பாசியின் பயன்பாட்டை அதிகரிக்க விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன்,  சந்தைப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பு.

சுருள்பாசி வளர்க்கும் முறை

சுருள்பாசி வளர்ப்பதற்கு, கார்பன் மூலப் பொருட்கள், தாதுக்கள், 8.5 முதல் 10 வரை பி.எச்.  (கார அமிலத்தன்மை) உள்ள தண்ணீர், நல்ல சூரிய ஒளி (27 டிகிரி செல்சியஸ் முதல் 35 செல்சியஸ் வரை) அத்தியாவசியத் தேவையாகும்.  ஜனவரி முதல் செப்டம்பர் வரை இது நன்கு வளரும் தன்மை கொண்டது.  ஸ்பைருலினா உற்பத்திக்கு தூய்மையான சுற்றுச் சூழல், தரிசு மற்றும் மானாவாரி இடமே போதுமானதாகும்.தொட்டியில் வளர்ப்பு:  ஸ்பைருலினா வளர்வதற்கு 20 செ.மீ. முதல் 30 செ.மீ. வரை உயரத்துக்கு தண்ணீர் நிரம்பிய தொட்டிகள் தேவை.  தொட்டியின் உயரம் 2 அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும்.  ஒரு சதுர அடிக்கு, ஒரு கிராம் உலர்ந்த பாசியை தினமும் அறுவடை

செய்யலாம் என்பதால், தேவைக்கேற்ப தண்ணீர்த் தொட்டிகளின் நீள, அகலத்தையும், எண்ணிக்கையையும் முடிவு செய்து கொள்ளலாம். ஸ்பைருலினா வளர்வதற்குத் தேவையான சத்துகளை உரிய விகிதத்தில் தொட்டியில் உள்ள நீரில் கலக்க வேண்டும். மூன்று மணி நேரம் கழித்து, தாய்ப்பாசி (விதை) ஒரு லிட்டர் நீருக்கு ஒரு கிராம் என்ற அளவில் நீரில் கலந்துவிட வேண்டும்.  பாசி நன்கு வளர்ந்து 10-வது நாளில் இருந்து அறுவடைக்குத் தயாராகிவிடும்.  இந்தப் பாசி நேரடியாக தண்ணீரில் மிதக்காமல், தண்ணீரில் கூழ்போன்று கலந்து, கரைந்து இருக்கும்.  அதனால் துணிகளில் வடிகட்டி, பாசி சேகரம் செய்யப்பட்டு, வெயிலிலும், செயற்கையாக வெப்பம் உருவாக்கியும் உலர்த்தி சந்தைக்கு அனுப்பப்படுகிறது. பொதுவாக 10 கிலோ ஈரப்பாசியில் இருந்து ஒரு கிலோ காய்ந்த பாசி கிடைக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x