Published : 06 Feb 2019 10:29 AM
Last Updated : 06 Feb 2019 10:29 AM

சுருங்கும் அபாயத்தில் மதுரை வைகை ஆறு: ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் ஆற்றுக்குள் சாலை அமைக்க எதிர்ப்பு

‘ஸ்மார்ட் சிட்டி’ பணிகள் போர் வையில் மதுரை வைகை ஆற்றின் நீர் வழிப்பாதையை மறித்து பாலம், சாலை அமைக்க ஆற்றுக்குள் குழி தோண்டப்படுவதால் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

மதுரை ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் ரூ.81.41 கோடியில் வைகை ஆறு கலாச்சார மைய மாக மாற்றப்படுகிறது. நாட்டிலேயே ‘ஸ்மார்ட் சிட்டி’யில் ஒரு ஆற்றை வண்ணமயமாக்கும் திட்டம், மதுரை மாநகரில் நடப்பதாக மாநகராட்சி பெருமை கொள்கிறது. தற்போது அதற்கான முதற்கட்டப் பணிகள் வைகை ஆற்றில் தொடங்கப் பட்டுள்ளன.

‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் வைகை ஆற்றின் கரையோ ரங்களில் மட்டுமே பூங்காக்கள், சாலைகள் அமைப்பதாக கூறப் பட்டது. ஆனால், தற்போது சாலை, பாலம் அமைப்பதற்காக ஆற்றுக்குள் குழிகள் தோண்டப் படுவதாக குற்றச்சாட்டு எழுந் துள்ளது.

ஆற்றில் கான்கிரீட்

இதுகுறித்து வைகை நதி மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் ராஜன் கூறியதாவது:

செல்லூர் அருகே எல்ஐசி பாலத்துக்குக் கீழே பொதுப் பணித்துறையின் அனுமதி பெறாமலேயே கடந்த சில வாரங்களுக்கு முன் சாலை அமைக்க ஆற்றுக்குள்ளேயே நீர் வழிப்பாதையை மறித்து குழி தோண்டினர். இந்தப் பகுதியில் வைகை ஆறு 285 மீட்டர் அகலமே உள்ளது. இப்பகுதியில் ஆற்றுக்குள் 10 அடியில் ஆழம் தோண்டினர்.

ஆற்றில் சுமார் 15 அடிக்கு கான்கிரீட் அமைத்தனர். இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் செய்தோம். ஆட்சியர் அழைத்து பொதுப்பணித்துறையினரிடம் பேசி, தற்போது அந்தப் பணி நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது கீழ அண்ணா தோப்பு, மேல அண்ணா தோப்பு சந்திப்பு அருகே வைகை ஆற்றில் பாலம், சாலை அமைக்க ஆற்றுக்குள்ளே குழி தோண்டப்படுகிறது.

ஆட்சி யரின் சொல்லை மீறி, அத்துமீறி மீண்டும் ஆற்றுக்குள் பணி நடக் கிறது. ஆற்றுக்குள் பணி மேற்கொள்ள பொதுப்பணித்துறை எப்படி அனும திக்கிறது என்றே தெரியவில்லை. ஆற்றை மாநகராட்சி பராமரிக்கிறது என்றாலும், பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில்தான் ஆறு உள்ளது. ஆனால், பொதுப்பணித்துறை கை கட்டி வேடிக்கை பார்க்கிறது.

வைகை ஆற்றுக்குள் பணி நடந்தால் ஆற்றின் அகலம் சுருங்கும். இதனால், வெள்ளக் காலத்தில் ஆபத்தாக முடியும். ஆற்றங்கரையில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. ஆற்றின் அகலம் குறையும்போது வெள்ளக் காலத்தில் தண்ணீர் நகர் பகுதிக்குள்ளும், குடியிருப்புப் பகுதிகளுக்குள்ளும் புகும் அபாயம் உள்ளது. அதனால், ‘ஸ்மார்ட் சிட்டி’ பணிகள் ஆற்றுக்குள் நடக்காமல் கரைப்பகுதியில் மேற்கொள்ள வேண்டும் என வழக்குத் தொடர உள்ளோம். இவ்வாறு அவர் கூறி னார்.

“எங்களிடம் அனுமதி பெறவில்லை”

வைகை ஆற்றுக்குள் நடக்கும் பணிகள் குறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘வைகை ஆற்றில் ‘ஸ்மார்ட் சிட்டி’ பணி மேற்கொள்ள மாநகராட்சி இதுவரை எங்களிடம் அனுமதி பெறவில்லை. நாங்களும் இதற்கு முன் புகார் வந்து எல்ஐசி பாலம் அருகே ஓரிடத்தில் ஆற்றில் குழி தோண்டும்போது பணியை நிறுத்தினோம். மீண்டும் சில நாட்களுக்கு முன் மற்றொரு இடத்தில் பணிகள் நடந்தன. அதையும் நிறுத்திவிட்டோம். ஆற்றுக்குள் தற்போது தண்ணீர் போய் கொண்டிருக்கிறது. நீர் வழித்தடத்தை தடுத்தால் அது யாராக இருந்தாலும் விடமாட்டோம், ’’ என்றார்.

‘ஸ்மார்ட் சிட்டி’ விஷயத்தில் மாநகராட்சி, வரைபடத்தில் ஒன்றை காட்டிவிட்டு, பணிகளை மற்றொரு விதமாக மேற்கொள்வதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x