Published : 28 Feb 2019 02:13 PM
Last Updated : 28 Feb 2019 02:13 PM
கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில், வெயிலுடன், மின்சாரவெட்டும் நம்மைப் பாடாய்ப்படுத்தும். இதனால் யு.பி.எஸ்.பயன்பாடு அதிகரிக்கும். இதை முறையாகப் பராமரித்தால், மின்கட்டணத்தை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்வதுடன், பயமில்லாமலும் இருக்கலாம் என்கிறார் கோவையைச் சேர்ந்த யு.பி.எஸ். விற்பனையாளர் எஸ்.டி.பாண்டியன்.
சில ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் நிலவிய கடும் மின் வெட்டுப் பிரச்சினை ஆட்சி மாற்றத்துக்கே வழிவகுத்தது. அதற்குப் பிறகு கொஞ்சம் நிலைமை சீரடைந்தது. ஆனாலும், மின் வெட்டுக்குப் பயந்து பல்வேறு தரப்பினரும் தடையின்றி மின்சாரம் வழங்கும் இயந்திரத்தை (யு.பி.எஸ்.) பயன்படுத்தத் தொடங்கினர். தற்போது பிப்ரவரி இறுதியிலேயே கடும் வெயில் அடிக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாய் மின் வெட்டுப் பிரச்சினையும் அடியெடுத்து வைத்துள்ளது. இனி வரும் நாட்களில்மின்சாரத்தின் பயன்பாடு அதிகரிக்கும்போது,மின்வெட்டுப் பிரச்சினை தலைதூக்கத்தொடங்கும். இதனால் வீடுகளில் யு.பி.எஸ். பயன்பாடு அதிகரித்து வருகிறது. எனினும், “யு.பி.எஸ். இயந்திரத்தை நாம் முறையாகப் பராமரிக்கிறோமா?, இதனால் மின்சாரக்கட்டணம் உயருமா? ஆபத்து உண்டா?” என்றெல்லாம் பல கேள்விகளுடன், கோவை யு.பி.எஸ்.அண்டு ஸ்டெபிலைசர்ஸ் சங்க செயற்குழு உறுப்பினரும், யு.பி.எஸ். விற்பனையாளருமான எஸ்.டி.பாண்டியனை(48) சந்தித்தோம்.
“எனக்கு சொந்த ஊர் திசையன்விளை. 1965-ல் பெற்றோர் சுந்தரபாண்டியன்-பொன்ராணி கோவை வந்துவிட்டனர். இங்கு தனியார் கல்லூரியில் டிப்ளமோ இன் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் முடித்துவிட்டு, 1990-ல் ஃபேக்ஸ் மற்றும் எலெக்ட்ரானிக் டைப்ரைட்டிங் சர்வீஸ் வேலையில் சேர்ந்தேன். 1994-ல் யு.பி.எஸ். நிறுவனத்தில் இணைந்தேன். இடையில் கம்ப்யூட்டர் உதிரிபாகங்கள் விற்கும் நிறுவனத்தில் தென்னிந்திய வணிக மேலாளராகப் பணிபுரிந்தேன். பின்னர், யு.பி.எஸ். நிறுவனத்தில் தமிழ்நாடு விற்பனை மேலாளராகப் பணியாற்றினேன். மின் தட்டுப்பாடு காரணமாக யு.பி.எஸ். தேவை அதிகரித்தது. இதையடுத்து, கோவையில் யு.பி.எஸ். நிறுவனத்தைத் தொடங்கினேன்.
3 வகை யு.பி.எஸ்.
யு.பி.எஸ். இயந்திரத்தை அதன் பயன்பாட்டைப் பொறுத்து, ஆன்லைன், ஆஃப் லைன் மற்றும் ஹோம் யு.பி.எஸ் என 3 வகைகளாகப் பிரிக்கலாம். ஆன்லைன் யு.பி.எஸ். என்பது மின் வாரியம் வழங்கும் மின்சாரத்தைப் பெற்றுக்கொண்டு, தனது சேமிப்பிலிருந்து 24 மணி நேரமும் இடைவிடாது மின்சாரம் வழங்கும் இயந்திரமாகும். மருத்துவ மனைகள், தொழிற்சாலைகள், 24 மணிநேரமும் இயங்கும் கம்ப்யூட்டர்கள் ஆகியவற்றில் இவற்றின் பயன்பாடு அதிகம். ஒரு விநாடிகூட மின்சாரம் போகாமல் இருக்கும்.
ஆஃப்லைன் யு.பி.எஸ். என்பது, மின் வாரியம் வழங்கும்மின்சாரம் துண்டிக்கப்படும் போது, பேட்டரியிலிருந்து மின்சாரம் வழங்கும் இயந்திரமாகும். மின்சாரம் துண்டிக்கப்பட்டவுடன் ஒரு விநாடிக்கும் மிகக்குறைந்த நேரத்தில் இது செயல்படத்தொடங்கிவிடும். வீட்டு உபயோகயு.பி.எஸ். என்பது, வீடுகளுக்காக பிரத்தியேக முறையில் தயாரிக்கப்படும் இன்வர்டர்களாகும். குறைந்த பட்சம் 240 வாட்ஸ் அளவிலிருந்து, 5 கேவிஏ, 7.5 கேவிஏ என நமதுதேவைக்கேற்ப யு.பி.எஸ். இயந்திரங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். உதாரணமாக, 600 வாட்ஸ் கொண்ட யு.பி.எஸ். இயந்திரம் மூலம், 100 ஏ.ஹெச். பேட்டரிகளைப் பயன்படுத்தி 4 லைட்டுகள், 4 ஃபேன்களை இரண்டு முதல் இரண்டரை மணி நேரத்துக்கு தொடர்ச்சியாக உபயோகப்படுத்த முடியும்” என்றார்.
“வீடுகளில் யு.பி.எஸ். இயந்திரத்தை நிறுவுவது எப்படி, முறையாகப் பராமரிப்பது எப்படி?” என்று கேட்டோம். “யு.பி.எஸ். வாங்குவதற்கு முன்பே, மின்சாரம் தடைபட்ட பிறகு, எவ்வளவு நேரத்துக்கு மாற்றுமின்சாரம் தேவைப்படுகிறது. எத்தனைஃபேன், லைட்டுகள் மற்றும் டிவி,கம்ப்யூட்டர், சார்ஜர், மிக்ஸி உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தப் போகிறோம் என்பதை முடிவுசெய்துகொள்ள வேண்டும். அதாவது, எந்த மாதிரியான பயன்பாடு, எவ்வளவு நேரத்துக்கு பயன்பாடு என்பதை தெளிவாக வரையறுத்துக்கொண்டு,அதற்கேற்றாற் போல யு.பி.எஸ்.ஐ வாங்க வேண்டும்.
யு.பி.எஸ். இயந்திரத்தை காற்றோட்டமான இடத்தில் வைக்கவேண்டும். படுக்கை அறையில் வைப்பது, உயரமான செஃல்ப் அல்லது பரண் மீது வைப்பது கூடாது. குறிப்பாக, ஈரப்பதம் மிகுந்த அல்லது தண்ணீர்க் குழாய் அருகில் வைப்பது போன்றவற்றை நிச்சயம் தவிர்க்க வேண்டும். மழைச் சாரல் அல்லது தண்ணீர்த் துளிகள் படும் இடத்தில் வைக்கவே கூடாது. முடிந்தால் தனி இடத்தை ஒதுக்கி, அந்த இடத்தில் வைக்க வேண்டும். அடுத்து, மின்சாரம் எடுக்கும் இடத்தில், எர்த்தும், நியூட்ரலும் சரியாக இருக்கிறதா என்பதை உறுதிசெய்ய வேண்டும். பேட்டரி மற்றும் யு.பி.எஸ்.ஐ இணைக்கும்போது, உறுதியான முறையில் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை கவனிக்க வேண்டும். யு.பி.எஸ். இயந்திரம் மீது அதிகம் தூசி சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
ஏனெனில், உள்ளேயிருக்கும் சர்க்யூட் போர்டு உள்ளிட்டவை மீது தூசி படிந்தால், செயல்திறன் குறைந்துவிடும்.
பேட்டரி பராமரிப்பு அவசியம்
யு.பி.எஸ்.-ன் பேட்டரிகளையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். பேட்டரியில் உள்ள ஆசிட்டின் அளவு சரியாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். ஆசிட் அளவு குறைந்ததாக இண்டிகேட் செய்தால், டிஸ்டில்டு தண்ணீரை மட்டுமே பேட்டரியில் ஊற்ற வேண்டும். ஏனெனில், டிஸ்டில்டு தண்ணீரில் மட்டுமே எந்தவிதமான தாதுக்களும் இருக்காது. முடிந்தவரை சர்வீஸ் இன்ஜினீயர் அல்லது யு.பி.எஸ். பராமரிப்பாளர்களைக் கொண்டு டிஎஸ்டில்டு தண்ணீர் ஊற்றுவது, பராமரிப்பது போன்ற பணிகளைச் செய்ய வேண்டும்.
பேட்டரியில் உள்ள 6 செல்களும் சுத்தமாக இருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும். இந்த பேட்டரிகளில் இருந்து சில சமயம் ரசாயன வாயு வெளியேறும். அதனால்தான் படுக்கை அறையில் யு.பி.எஸ். வைக்க வேண்டாமென வலியுறுத்துகிறோம்.
கோவையில் ஒரு குழந்தைக்கு தோல் பிரச்சினை ஏற்பட்டது. என்ன காரணமென்றே தெரியவில்லை. கடைசியில்தான் படுக்கை அறையில் உள்ள யு.பி.எஸ். கருவியிலிருந்து வெளியேறிய வாயுதான் பிரச்சினைக்குக் காரணம் எனத் தெரியவந்தது. யு.பி.எஸ்.-ல் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால், இன்ஜினீயர்கள் அல்லது பராமரிப்பாளர்களின்றி, தாமாகவே சரி செய்ய முற்படக் கூடாது.
வெயில் காலத்தில் திடீரென பேட்டரி சூடு அதிகமாகிறதா என்பதையும் கவனிக்க வேண்டும். தேவையற்ற சப்தம் வந்தாலோ, இண்டிகேட்டர் பிளிங்க் ஆனாலோ உடனடியாக இன்ஜினீயரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். இப்போதெல்லாம், பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் யு.பி.எஸ். கருவிகள்வந்துவிட்டன. எனினும், பேட்டரிகளை பொறுத்தவரை, 3, 4 வருடங்களாகிவிட்டால், அதன் செயல்திறன் குறையும். அப்போது மின்சார உபயோகம் அதிகரித்து, மின் கட்டணமும் அதிகரிக்கும். எனவே, நீண்டகாலம் வாரண்டி கொடுக்கும் பேட்டரிகளையே தேர்வுசெய்ய வேண்டும். யு.பி.எஸ்.களைப் பொறுத்தவரை 2 ஆண்டுகளும், பேட்டரிகளைப் பொறுத்தவரை 18 மாதங்கள்
முதல் 60 மாதங்கள் வரையிலும் வாரண்டி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது” என்றார். படங்கள்: ஜெ.மனோகரன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT