Last Updated : 03 Feb, 2019 09:05 AM

 

Published : 03 Feb 2019 09:05 AM
Last Updated : 03 Feb 2019 09:05 AM

நீதிமன்றத்தில் சாதகமான தீர்ப்பு வந்தால் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் பணி தொடங்கும்: ஜெம் நிறுவனம் நம்பிக்கை

நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வெளியானால் நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் பணிகள் தொடங்கும் என ஜெம் லேபராட்டரிஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்தை எதிர்த்து டெல்லியின் தேசிய பசுமை தீர்ப்பாயம், சென்னை உயர் நீதிமன்றம் ஆகியவற்றில் வழக்குகள் தொடுக்கப்பட்டன. இதில், தேசியப் பசுமை தீர்ப்பாயத்தில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்ததை போல் தமக்கும் அனுமதி கிடைக்கும் என ஜெம் நிறுவனம் எதிர்பார்க்கிறது.

இதுகுறித்து, ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் ஜெம் லேபராட்டரீஸ் நிறுவனத்தின் முதன்மை அதிகாரியான ஹரிபிரசாத் கூறியதாவது:இந்த வழக்குகளில் எங்களுக்கு நியாயம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். அதன் பிறகு, நெடுவாசலில் கைவிடப்பட்ட திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும். வழக்குகள் காரணமாக, தமிழக அரசும் நெடுவாசல் நிலத்தின் குத்தகையை எங்கள் பெயருக்கு மாற்ற முடியாமல் உள்ளது. இதில், நீதிமன்ற உத்தரவை பொறுத்து மாற்றங்கள் நிகழும். நிலம் கிடைத்த பின்னர், திட்டத்துக்கான சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல உரிமங்கள் பெற்று பணிகள் தொடங்கப்படும் என அவர் தெரிவித்தார்.

நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் நிலத்தை எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு (ஓஎன்ஜிசி) நிறுவனத்திற்கு தமிழக அரசு குத்தகைக்கு அளித்திருந்தது. இது, மத்திய எரிவாயு மற்றும் பெட்ரோலியத்துறை அமைச்சகத்தின் டிஜிஎச் (ஹைட்ரோ கார்பன் தலைமை இயங்குரகம்) சார்பில் கண்டுபிடிக்கப்பட்ட சிறிய வகை வயல்கள் பிரிவு ஒன்றின் (டிஎஸ்எப்-I) கீழ் ஏலம் விடப்பட்டிருந்தது.

இதனால், ஓஎன்ஜிசியின் குத்தகையை தமக்கு மாற்றித்தர நெடுவாசலில் ஏலம் எடுத்த கர்நாடகாவின் ஜெம் நிறுவனம், தமிழக அரசிடம் கோரி இருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அங்கு ஹைட்ரோகார்பன் எடுக்கக் கூடாது என்றும் தமிழகம் முழுவதிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

நெடுவாசலிலும் தொடர் போராட்டம் நடைபெற்றது. இதனால், அங்கு ஒரு அடி கூட தம்மால் எடுத்து வைக்க முடியவில்லை எனக்கூறி ஜெம் நிறுவனம் தனது நெடுவாசல் திட்டத்தை கைவிட முடிவு எடுத்தது.

நெடுவாசலுக்கு மாற்றாக வேறு இடத்தை டிஜிஎச்சிடம் கோர இருப்பதாகவும் அந்நிறுவன செய்தித் தொடர்பாளர் ஹரிபிரசாத் ‘இந்து தமிழ்’ நாளிதழுக்கு கடந்த ஆண்டு மே 10-ம் தேதி அளித்த பேட்டியில் முதன்முறையாக தெரிவித்திருந்தார்.

இதனிடையே, டிஎஸ்எப்-II வகை பிரிவில் ஹைட்ரோகார்பன் எடுக்க அறிவிக்கப்பட்ட ஏலஅறிவிப்பு ஜனவரி 30-ம் தேதியுடன் முடிவடைந்துள்ளது. இதில், நாடு முழுவதிலும் 145 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க 39 நிறுவனங்கள் மனு செய்துள்ளனர். இதில், தமிழகத்தில் எந்த இடமும் இடம்பெறவில்லை. 6 வெளிநாடு, ஜெம் நிறுவனம் உள்ளிட்ட 28 இந்திய தனியார் நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x