Published : 27 Feb 2019 07:38 PM
Last Updated : 27 Feb 2019 07:38 PM

பைலட் அபினந்தன் போர்க்குற்றவாளியா?- விடுதலை எப்படி இருக்கும்?- ஓய்வுபெற்ற பாதுகாப்பு அதிகாரியின் விளக்கம்

பாகிஸ்தான் படையிடம் சிக்கிய இந்திய விமானப்படை விமானி அபினந்தன் என்ன ஆவார்? போர்க்குற்றவாளியா? விடுதலைக்கான வாய்ப்பு குறித்து ஓய்வுபெற்ற பாதுகாப்புத்துறை அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.

புல்வாமா தாக்குதலை அடுத்து போர் பதற்றம் இருந்த நிலையில், நேற்று முன் தினம் இந்திய விமானங்கள் சர்ஜிக்கல் ஸ்டிரைக் எனப்படும் தாக்குதலை தீவிரவாத முகாம்கள் மீது நடத்தியதாகத் தகவல் வெளியானது.

இந்நிலையில் பதற்றம் அதிகரித்ததால் இன்று காலைமுதல் விரும்பத்தகாத நிகழ்வுகள் ஏற்பட்டன. பாக் விமானப்படை தாக்கியதாகவும் பின்னர் அதை துரத்திச் சென்று தாக்கியபோது பாகிஸ்தான் தாக்குதலில் நமது விமானம் வீழ்த்தப்பட்டது.

அதன் விமானி பாராசூட்டில் தப்பிக்க எடுத்த முயற்சி பலனளிக்காமல் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கினார். தமிழகத்தைச் சேர்ந்த விங் கமாண்டர் அபினந்தன்தான் அந்த விமானி எனத் தெரியவந்தது.

இந்திய பாதுகாப்புத்துறை அதிகாரிகளும் அதை உறுதிப்படுத்தினர். பாக். ராணுவமும் இதை உறுதிப்படுத்தி அவர் சிக்கிய காணொலிக் காட்சியையும் வெளியிட்டது. அபினந்தனை மீட்க வேண்டும் என்கிற குரல் இந்தியாவைத் தாண்டி உலகம் முழுவதும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.

அபினந்தன் பத்திரமாக மீட்கப்படவேண்டும், அவர் கவுரவமாக நடத்தப்படவேண்டும் என்ற குரல் பாகிஸ்தானிலும் எழுப்பப்பட்டுள்ளது. #Abhinandan, #SayNoToWar ,
#SaveAbinandhan  #BringBackAbhinandan போன்ற ஹேஷ்டேக்குகள் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் அபினந்தன் கவுரவமாக நடத்தப்படுவதாக பாகிஸ்தான் தரப்பில் காணொலி ஒன்று வெளியாகி உள்ளது. அதில் அபினந்தன் கையில் தேநீர்க்கோப்பையுடன் முகத்தில் எவ்விதக் கலவரமுமின்றி உரையாடும் காட்சி உள்ளது. தான் நல்லபடியாக நடத்தப்படுவதாக அதில் தெரிவிக்கிறார்.

ஆனாலும் கைதியாக இருக்கும் அபினந்தன் விடுவிக்கப்படவேண்டும், அவரது நிலை என்ன? எப்படி விடுதலை இருக்கும் போன்ற கேள்விகள் எழுந்துள்ளன.

இதுகுறித்து ஓய்வுபெற்ற பாதுகாப்பு அதிகாரி ஒருவரிடம் 'இந்து தமிழ் திசை' இணையதளம் சார்பில் கேட்டபோது அவர் கூறியதாவது:

அபினந்தன் நிலை என்ன? அவர் போர்க்குற்றவாளியா?

இப்போது அவரை நாம் போர்க்குற்றவாளி என்று எடுத்துக்கொள்ள முடியாது. தற்போது அபினந்தன் பாகிஸ்தான் கஸ்டடியில் உள்ளவர்தான். அவரை போர்க்குற்றவாளி என பாக். ராணுவம் அறிவிக்காது. போர் நடந்தால்தான் போர்க்குற்றவாளி என்று வரும். அப்படி போர் எதுவும் வரவில்லை.

அப்படியானால் அவர் எப்படி நடத்தப்படுவார்?

ராணுவ வார்த்தையில் சொல்வதென்றால் ‘engagement’ என்பார்கள்  'engaged with the pak air craft’  என்பார்கள். அதாவது பாகிஸ்தான் விமானம் இங்கு தாக்க கிளம்புகிறார்கள். அதை ராடாரில் பார்த்து நமது விமானம் துரத்துகிறது. இந்த தாக்குதலில் பாக். விமானம் வீழ்த்தப்படுகிறது.

இதில் எங்கிருந்தோ நமது விமானமும் தாக்கப்படுகிறது. அதுவும் கீழே விழுகிறது. அது பாகிஸ்தான் எல்லைக்குள் விழுகிறது. அப்போது விமானி எஜக்ட் ஆகி பாராசூட் மூலம் தப்புகிறார். தப்பினாலும் பாகிஸ்தானுக்குள்தானே விழ முடியும். அப்படி விழும்போது பாக். ராணுவத்தால் பிடிக்கப்படுகிறார்.

ஆகவே அவர் பாக். ராணுவத்தாரால் கைதியாக பிடிக்கப்பட்டவர் என்பதுதான் தற்போதைய நிலை ஆகும். போர்க்குற்றவாளி என்கிற வார்த்தை இப்போது வரக்கூடாது.

தற்போது அவரை விடுவிக்கும் நடைமுறை எப்படி நடக்கும்?

அதற்குத்தான் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் விடுவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்கள். பாக். பிரதமர் இம்ரானும் நாங்கள் போரை விரும்பவில்லை. பேச்சுவார்த்தை நடத்தலாம் என்கிறார். அவ்வாறு பேச்சுவார்த்தை இரு தரப்பிலும் நடக்கும்பட்சத்தில் முதல் கோரிக்கையாக எங்கள் விமானியை விடுவித்தால் பேசலாம் என்கிற கோரிக்கையை இந்தியா வைக்கும்.

போர் மூண்டால் என்ன ஆகும்?

போர் மூள வாய்ப்பு குறைவு அப்படி நடந்தால் அவர் நிலை அப்படியே இருக்கும். அதன் பின்னர் நடக்கும் நிகழ்வுகள் மூலம் அவரது விடுதலை அப்படியே இருக்கும் தள்ளிப்போகும். மற்ற பிரச்சினைகள் தொடரும்.

போர் மூளாமல் அமைதி வேண்டும் என பேச்சுவார்த்தைக்கு வந்தால் முதல் கண்டிஷன் எங்கள் பைலட்டைக் கொடுங்கள் என கேட்கும் போது அவர்களும் விடுவிக்கவே வாய்ப்பு உண்டு.

அதுவரை அவரது நிலை என்ன? அவரைத் தாக்கும் வீடியோ பார்த்தோம். கொடுமைகள் நடக்குமா?

அதுவரை அவர் கைதியாகத்தான் இருப்பார். ஆனால் ஆரம்பத்தில் அப்படித் தாக்கி இருக்கலாம். இப்போது அதுபோன்ற தாக்குதல் துன்புறுத்தல் நடக்காது. ஏனென்றால் இன்று அபினந்தன்மீது உலகப் பார்வை திரும்பியுள்ளது. ஆகவே அதுபோன்ற செயல்களில் இறங்கினால் பூமராங்காக அவர்களுக்கு எதிராக பிரச்சினை திரும்பும் என பாகிஸ்தானுக்கு நன்றாகத் தெரியும்.

தங்களிடம் விமானி பிடிபட்டுள்ளார் என அவர்கள் விளம்பரப்படுத்தி விட்டார்கள். இனி கொடுமைபடுத்துவதோ, துன்புறுத்துவதோ நடக்காது. நடந்தால் அது ஐ.நா. வரை எதிரொலிக்கும். அதற்காக ராஜ உபச்சாரமும் நடக்காது. கைதி கைதிதான், அப்படித்தான் நடத்துவார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x