Published : 27 Feb 2019 11:14 AM
Last Updated : 27 Feb 2019 11:14 AM
அண்மையில் மேற்குத் தொடர்ச்சி மலையைப் பாதுகாப்பதற்காக கோவையில் சர்வதேச மாநாடு நடைபெற்றது. அதில், அனைவரையும் கவர்ந்தது புகைப்படக்கண்காட்சி. இயற்கை, சுற்றுச்சூழல், பறவைகள், விலங்குகள் என அரிய புகைப்படங்கள். இந்தப் படங்களை எடுத்தது யார் என்று அங்கிருந்த `ஓசை` காளிதாசனிடம் விசாரித்தபோது, "இதுல நிறைய படங்கள எடுத்தது கௌரவ் ராம்நாராயணன். கோயம்புத்தூர் பையன். 21 வயசுதான். இப்ப மட்டுமில்ல. கடந்த 10 வருஷத்துக்கு மேலாகவே இயற்கை, சுற்றுச்சூழல் கண்காட்சிகள்ல அவர் எடுத்த அரிய பறவைகள், விலங்குகள், இயற்கை அமைப்புனு நிறைய படங்களை வெச்சிருக்கோம். சர்வதேச அளவுல சிறந்த போட்டோகிராபருங்க" என்று வாய் நிறையப் பாராட்டினார்.
வியப்புடன் கௌரவ் ராம்நாராயணனைத் தேடிப் புறப்பட்டோம். குழந்தைத் தனம் மாறாத முகம். இன்னும் கல்லூரிப் பருவத்தையே முடிக்கவில்லை. ஆனால், அவரது சாதனைகளும், மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே ஒரு சர்வதேச சுற்றுலா நிறுவனத்தை தொடங்கி, உலகம் முழுக்க பயணித்துக் கொண்டிருப்பதையும் கொஞ்சம் தயக்கத்துடன் அவர் விவரித்தபோது, ஆச்சரியத்தின் அளவு அதிகரித்துக்கொண்டே போனது.
"கோவை ரெட்பீல்ட்ஸ்-ல வசிக்கிறேன். அப்பா ராம் நாராயணன். வியாபாரம் செய்யறாரு. அம்மா சசி. நான் விவேகாலயா ஸ்கூல்ல 10-வது வரைக்கும் படிச்சேன். பிளஸ் 1, பிளஸ் 2 ஜி.டி. மெட்ரிக். பள்ளி. இப்ப பி.எஸ்.ஜி. கலை, அறிவியல் கல்லூரியில பி.காம். இறுதியாண்டு படிக்கிறேன்.என்னோட தாத்தாவுக்கு புகைப்படக் கலையில ரொம்ப ஆர்வம். அதே ஆர்வம் எங்க அப்பாவையும் தொத்திக்கிடுச்சி. 2001-ல எனக்கு மூணு வயசு இருக்கும்போதே எங்கிட்டயும் கேமராவைக் கொடுத்து, படமெடுக்கப் பழக்கிவிட்டாரு அப்பா. அது ஃபிலிம் கேமரா. ஆரம்பத்துல வீட்டுல இருந்தவங்களையும், செல்லப்பிராணிகளையும் படமெடுத்தேன். எங்களுக்கு ஊட்டி மசினக்குடியில ஒரு வீடு இருக்கு. லீவுல அங்க போயி, அங்க இருக்கற மரம், செடி, பொருட்கள், கண்ணுல தெரியற பிராணிங்களை படமெடுக்க ஆரம்பிச்சேன். அப்பத்திலிருந்தே வைல்டுலைஃப் போட்டோகிராபில ஆர்வம் வந்துடுச்சு. பிலிம் கேமராவுல படம் எடுக்கும்போது, அப்பர்ச்சர், ஷட்டர்ஸ்பீடு, ஃபிரேமிங், லைட்டிங் எல்லாம் கத்துக்கிட்டேன். இதனால, டிஜிட்டல் கேமராவைப் பயன்படுத்தறது ரொம்ப சுலபமா இருந்தது.
எல்லா விடுமுறைகளிலும் போட்டோதான்...
2008-லதான் டிஜிட்டல் கேமராவுக்கு மாறினேன். அப்ப நான் 4-வது படிக்கிறேன். ஊட்டி, முதுமலை, நாகர்கொளே, பெரியாறு, பந்திப்பூர்னு நிறைய இடங்களுக்குப் போய் பறவைங்க, விலங்குகளை படமெடுக்கத் தொடங்கினேன். சனி, ஞாயிறு விடுமுறை, காலாண்டு, அரையாண்டு விடுமுறை, கோடை விடுமுறைனு எல்லா விடுமுறைகளிலும் விலங்கு, பறவை, இயற்கை அமைப்புகளை படமெடுக்கப் போயிடுவேன். 2009 வரைக்கும் தென் மாநிலங்கள்ல பல இடங்களுக்கு அப்பாவோடபோய் படமெடுத்தேன். 2010-லதான் முதல்முறையா வட இந்தியாவுக்குப் போனேன்.
சில நண்பர்களோட சேர்ந்து 2010 கோடை விடுமுறையில கோயம்புத்தூர்ல இருந்து கிளம்பி, வட இந்தியாவுல இருக்கற புலிகள் சரணாலயத்துக்குப் போகத் திட்டமிட்டோம். 15 நாள்ல கிட்டத்தட்ட 4,500 கிலோமீட்டர் சுத்தினோம். மத்தியப் பிரதேச மாநிலத்துல இருக்கற கண்ஹா மற்றும் பந்தவ்கார்ஹ் புலிகள் சரணாலயங்களுக்குப் போயி படமெடுத்தேன். அதுக்கப்புறம் வருஷத்துல குறைஞ்சது ரெண்டு முறையாவது வட இந்தியாவுக்குப் போயிடுவேன். ராஜஸ்தான் மாநிலத்துல இருக்கற ரந்தம்பூர் தேசியப் பூங்காவுல புலிகள், சிறுத்தைகள், மான்களை நிறைய படமெடுத்திருக்கேன். அது எனக்கு ரொம்ப பிடிச்ச பகுதி.
அதுக்கப்புறம் இலங்கை, தான்சானியா, ஃபின்லாந்து, நியூசிலாந்து, கம்போடியா, கிரீஸ், துருக்கினு பல நாடுகளுக்குப் போய் படமெடுத்தேன். இதுல ரொம்ப பிடிச்சது நியூசிலாந்துதான். அங்க நெறைய படமெடுத்திருக்கேன். அப்பா-அம்மாவோட ஊக்கம் ரொம்ப உதவியாக இருக்கு. படமெடுக்க எங்கவேனா போக முழு சுதந்திரம் கொடுத்திருக்காங்க. 2, 3-வது படிக்கற வரைக்கும்தான் படி படினு சொன்னாங்க. அதுக்கப்புறம் என்னோட போக்குலயே விட்டுட்டாங்க. கடந்த ஒன்றரை வருஷமா மக்களையும் படமெடுக்கிறேன். குறிப்பாக, வாரணாசி, அலகாபாத் கும்ப மேளா, ராஜஸ்தான், குஜராத்துல நடக்கற ஒட்டக கண்காட்சினு போய் படமெடுக்கிறேன். இந்தியாங்கறது பாரம்பரியம் மிக்க, பல வகையான கலாச்சாரம், நாகரிகம் நிறைந்த ஊரு.
வாரணாசியில கங்கைக் கரைக்குப் போய்ஏராளமான சாதுக்களை படமெடுத்தேன். உடம்புலதுணியே இல்லாம, வெறும் சாம்பலை மட்டுமே பூசிக்கிட்டிருக்கற சாதுக்களை, ஆபாசமில்லாம படமெடுத்தேன். 2016-ல பி.எஸ்.ஜி. காலேஜ்ல சேர்ந்தேன். இந்தியாமட்டுமில்லாமல், பல நாடுகளுக்கும் போயிருக்கறதால, தி வைல்டு சைடு-ங்கற சுற்றுலா மற்றும் போட்டோகிராபி நிறுவனத்தை அப்ப தொடங்கினேன்.
இந்தியா மட்டுமில்லா, பல வெளிநாடுகளுக்கும் சுற்றுலா ஏற்பாடு செய்யறேன். ஃபின்லாந்து நாட்டுக்கு நான்தான் பிரத்தியேக இந்திய சுற்றுலா ஏஜென்ட்னு தகுதி கொடுத்திருக்காங்க" என்றார் பெருமிதத்துடன். "பல மாநிலங்கள், நாடு களுக்குப் போகிறீர்கள். கல்லூரியில் விடுமுறை கொடுக்கிறார்களா?" என்று கேட்டதற்கு, ஒரு செமஸ்டருக்கு 23 நாள் லீவு உண்டு. அதை முழுமையா பயன்படுத்திக்கிறேன். அப்புறம், சனி, ஞாயிறு, கோடைவிடுமுறைனு நிறைய லீவு இருக்கே!" என்றார் சிரிப்புடன்.
குவிந்த விருதுகள்...
பள்ளிப் பருவத்தி லிருந்தே சிறந்த புகைப்படங்களுக்காக பல்வேறு விருதுகளைக் குவித்துள்ளார் கௌரவ் ராம் நாராயணன். "சிறந்த நடிப்புக்கு எப்படி ஆஸ்கார் விருது கொடுக்கறாங்களோ, அப்படி வைல்டுலைஃப் போட்டோகிராபிக்கும் பிபிசி நிறுவனம் சர்வதேச அளவிலான விருது கொடுக்கறாங்க. 2011-ல் லண்டன்ல நடந்த சர்வதேச வைல்டுலைஃப் போட்டோகிராபி போட்டிக்கு, 130 நாடுகள்ல இருந்து 40,000 போட்டோக்கள் வந்தன. அதுல, 11-14 வயசுப் பிரிவுல நான் எடுத்த போட்டோவுக்கு இரண்டாவது இடம் கிடச்சது. ராஜஸ்தான்ல இருக்கற கேவலாதேவ் தேசியப் பூங்கால, ரெண்டு நரிங்க ஆவேசமாக சண்டைப் போடற படம் அது. லண்டன் வரலாற்றுப்
பூங்காவுல நடந்த விழாவுல, விருது கொடுத்தாங்க. இதேபோல, 2014-ல சிங்கவால் குரங்கு படத்துக்கு சர்வதேச அளவுல 2-வது இடம் கிடச்சது. இந்தப் போட்டியில முதலிடம் வெல்ல தொடர்ந்து முயற்சி செஞ்சிட்டு வர்றேன்.
2016-ல சிறந்த பறவைபுகைப்படக்காரர் விருது, 2014-ல சர்வதேச அளவிலான சிறந்த இயற்கை புகைப்படக்காரர் விருது, 2015-ல அமெரிக்கால நடந்த சர்வதேச போட்டோகிராபி போட்டியில விருதுனு நிறைய விருதுங்க கிடைச்சிருக்கு. அதே போல, இந்தியா,சர்வதேச அளவிலான புகைப்படஇதழ்கள்ல என்னோட படத்தைப் பிரசுரிச்சிருக்காங்க" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT