Published : 28 Feb 2019 04:34 PM
Last Updated : 28 Feb 2019 04:34 PM

தமிழக அரசின் ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்தில் குழப்பம்: பொதுமக்களிடம் அதிமுகவினர் விண்ணப்பங்களை பெறுவதால் சிக்கல்

மதுரை மாநகராட்சிப் பகுதியில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வசித்த மக்கள் 60 சதவீதத்தினரை காணவில்லை. இதனால், தமிழக அரசின் ரூ.2000 நிதியுதவி வழங்கும் திட்டத்தில், அனைத்துத் தரப்பினரையும் அதிமுகவினர் பயனாளிகள் பட்டியலில் சேர்ப் பதால் குளறுபடி ஏற்பட்டுள்ளது.

வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் ஏழைகளுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. இதில் பயன்பெறும் பயனாளிகளுக்குச் சொந்த வீடு இருக்கக்கூடாது, ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் மட்டுமே குடும்ப வருமானமாக இருக்க வேண்டும், உடல் உழைப்பு தினக்கூலியாக இருக்க வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

மதுரை மாநகராட்சியில் 2004-ம் ஆண்டு கணக்கெடுப்புப் படி வறுமைக் கோட்டுக்குக் கீழ் 1.20 லட்சம் குடும்பத்தினர் வசித்தனர். அவர்களை வீடு, வீடாகச் சென்று ஆய்வு செய்தபோது வெறும் 15 ஆயிரம் பேர் மட்டுமே தற்போதுள்ள முகவரியில் வசிப்பது தெரிய வந்தது. மற்றவர்களைக் காணவில்லை. அவர்கள் எங்கு வசிக்கிறார்கள் என்பதையும் அதிகாரிகளால் அடையாளம் காண முடியவில்லை. அதனால், பயனாளிகள் பட்டியலைத் தயாரிக்க முடியவில்லை.

மக்களவைத்தேர்தல் நெருங்கும் நேரத்தில் அடித்தட்டு மக்களுடைய வாக்கு வங்கியைக் குறி வைத்தே இந்தத் திட்டத்தை அதிமுக அரசு அறிவித்தது. வறுமை கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களை அதிகளவில் இந்தத் திட்டத்தில் சேர்க்க முடியாததால் அதிர்ச்சியடைந்த அதிமுக அரசு, தற்போது இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்கும் அனைவருக்குமே ரூ.2 ஆயிரம் வழங்க முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால், உற்சாகமடைந்த அதிமுக கிளை செயலாளர்கள், முன்னாள் கவுன்சிலர்கள் வார்டு தோறும் முகாமிட்டு பொது மக்களிடம் விண்ணப்பங்களைப் பெற்று பூர்த்தி செய்து மாநகரா ட்சியில் ஒப்படைத்து வருகின்றனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘2004-ல் வறுமை கோட்டுக்குக் கீழ் வாழும் மக்கள் கணக்கெடுப்பை சுய உதவிக் குழுவினர்தான் மேற்கொண்டனர். அவர்கள் சரியாக கணக்கெடுக்கவில்லை. மேலும், சொந்த வீடு இல்லாதவர்களே வறுமைக் கோட்டுக்குக் கீழ் வசிக்கும் பட்டியலில் இடம் பெற்றனர். அவர்கள் தற்போது வெவ்வெறு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்துவிட்டனர். அவர்களின் தற்போதைய முகவரியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால், தமிழக அரசு அறிவித்த வறுமை கோட்டுக்குக் கீழ் வாழும் ஏழைகளுக்கு திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், இத்திட்டத்தில் அதிமுகவினர் அனைவரையுமே சேர்த்து வருகின்றனர். பார பட்சமின்றி பயனாளிகள் பட்டியல் தயாராகிறது. இதில் யாருக்கு ரூ.2 ஆயிரம் கிடைக்கும், கிடைக்காது என்பது தெரியவில்லை,’’ என்றனர்.

அதிமுகவினரின் வீடுகளில் அலைமோதும் கூட்டம்

ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்துக்கான விண்ணப்பங்கள், அனைத்து மண்டல அலுவலகங்களிலும் இலவசமாக வழங்கப்பட்டது. மேலும், தமிழக அரசின் www.tnrd.gov.in என்ற இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆனால், பொதுமக்கள் அனைவருமே மாநகராட்சி அலுவலகங்களில் குவிந்ததால் விண்ணப்பங்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது. அதனால், விண்ணப்பங்களை நகல் எடுத்து கடைகளில் ரூ.10-க்கு விற்பனை செய்கின்றனர். விண்ணப்பத்தில் 160 கேள்விகள் உள்ளன. விண்ணப்பத்தைப் படித்து புரிந்து கொள்வதற்கே ஒரு மணி நேரமாகும். அதனால், விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்வதற்கு தனியாக ரூ.30 வாங்குகின்றனர். இந்த திட்டத்தில் பயனாளிகளை அதிமுகவினரே சேர்ப்பதால் அந்தந்த வார்டு அதிமுக கிளை செயலாளர், முன்னாள் கவுன்சிலர் வீடுகளில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுக்க மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x