Last Updated : 12 Feb, 2019 10:42 AM

 

Published : 12 Feb 2019 10:42 AM
Last Updated : 12 Feb 2019 10:42 AM

நோயாளிகளுக்கு மூலிகை கஞ்சி!- அசத்தும் அகஸ்தியர் சன்மார்க்க சங்கத்தினர்

தானத்தில் சிறந்தது அன்னதானம்` என்பார்கள்.  அந்த வகையில் நாமக்கல் அகஸ்தியர் சன்மார்க்க சங்கத்தினர் நாள்தோறும் இயலாதவர்களைத்  தேடிச் சென்று, உணவு அளிக்கின்றனர். குறிப்பாக, நாமக்கல் அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு தினமும் காலையில் மூலிகை கஞ்சியும், மதிய உணவும் அளித்து வருகின்றனர்.

இதுகுறித்து அகஸ்தியர் சன்மார்க்க சங்கத்தின் நாமக்கல் கிளைப் பொறுப்பாளர் கே.பி.ரவிச்சந்திரன் கூறும்போது, "திருச்சி மாவட்டம் துறையூரில் ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகளின் அகஸ்தியர் சன்மார்க்க சங்க மடம் உள்ளது. அதன் நாமக்கல் கிளை சார்பில் பல்வேறு சேவையாற்றி வருகிறோம்.

அரசு மருத்துவமனைகளில் பொதுவாக ஏழை மக்களே சிகிச்சை பெறுகின்றனர். சிகிச்சைக்குப் பணமின்றி அரசு மருத்துவமனையில் அடைக்கலம் புகும் ஏழை மக்களுக்கு உணவளிக்கலாம் என முடிவு செய்தோம். இதன்படி,  கடந்த 4 ஆண்டுகளாக தினமும்  காலையில் மூலிகை கஞ்சி வழங்குகிறோம். மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெறும் 150 பேருக்கு கிடைக்கும் வகையில்,  இந்த கஞ்சி வழங்கப்படுகிறது.

அதேபோல, கடந்த இரு வாரமாக மதியமும் உணவளித்து வருகிறோம். வீட்டில் உணவு தயார் செய்து, இங்கு கொண்டு வந்து வழங்குகிறோம்" என்றார்.

"மருத்துவமனையிலேயே உணவு அளிக்கும் நிலையில், நீங்கள்எதற்காக உணவு அளிக்கிறீர்கள்?"  என்று கேட்டதற்கு, "மருத்துவமனையில் உணவு அளிக்கின்றனர். எனினும், அது போதுமானதாக இல்லாமல் இருக்கலாம். எனவேதான் நாங்களும் உணவு வழங்குகிறோம்.

அதேசமயம், காலையில் தரும்  கஞ்சியில், அரிசியுடன், மிளகு, இஞ்சி, பூண்டு, திப்பிலி என உடலுக்கு ஆரோக்கியம் தரும் பொருட்களைக் கொண்டு தயார் செய்து, மூலிகைக் கஞ்சியாக வழங்குகிறோம். இது உடலுக்கு ஆரோக்கியம் தரும்.

மதியம் சாப்பாடுடன், மூலிகை ரசமும் வழங்குகிறோம். மருத்துவமனையில் சிகிச்சை பெறும் உள்நோயாளிகளின் எண்ணிக்கையைக் கணக்கில் கொண்டுதான் மூலிகை கஞ்சியும், உணவும் கொண்டு வருகிறோம். எனினும், வெளி நபர்களும் வந்து, உணவு வாங்கிச் செல்கின்றனர்.  இதை தவிர்க்க இயலாது. உணவு கேட்டு கையேந்துபவர்களை ஒதுக்குவது நாகரிகமாக இருக்காது.

இந்த உணவு முழுவதும், மக்கள் அளிக்கும்நன்கொடை மூலமே வழங்கப்படுகிறது.  பிறந்த நாள், திருமண நாள் என நன்கொடை அளிப்பவர்கள் பணமாகவோ அல்லது  உணவு தயாரிப்பதற்கான பொருட்களாகவோ வழங்குவர்.  அதைக் கொண்டு உணவு தயாரித்து, வழங்குகிறோம்.

வேறு பகுதியில் உணவு வழங்குவதில்லை. இங்கு மட்டும் தான் வழங்கிறோம்.  தொடர்ந்து மருத்துவமனையில் உணவு வழங்க வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x