Last Updated : 15 Feb, 2019 11:15 AM

 

Published : 15 Feb 2019 11:15 AM
Last Updated : 15 Feb 2019 11:15 AM

இடைக்கால நிர்வாகியை நியமிக்க ராஜ்நாத் சிங்குக்கு சபாநாயகர் கடிதம்: சட்டம் - ஒழுங்கு அறிக்கை பெற்ற கிரண்பேடி

தகுதியான இடைக்கால நிர்வாகியை நியமிக்க மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்குக்கு சபாநாயகர் வைத்திலிங்கம் கடிதம் அனுப்பியுள்ளார். 3-வது நாளாக ராஜ்நிவாஸ் எதிரே தர்ணாவில் முதல்வர், அமைச்சர்கள் ஈடுபட்டு வரும் சூழலில் சட்டம் ஒழுங்கு நிலவரம் தொடர்பான அறிக்கையை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி போலீஸாரிடம் கேட்டு பெற்றுள்ளார்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக முதல்வர் நாராயணசாமி தலைமையில் அமைச்சர்கள், காங்கிரஸ், திமுக எம்எல்ஏக்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) மூன்றாவது நாளாக ஆளுநர் மாளிகை எதிரே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ராஜ்நிவாஸ் வெளியே சாலையிலேயே இரவில் படுத்து தூங்குகின்றனர்.

மூன்றாவது நாளாக இன்று நடைபெறும் போராட்ட பகுதிக்கு செல்ல கடும் கட்டுப்பாட்டை மத்திய படையினர் விதித்துள்ளனர். காங்கிரஸ் மகளிர் பிரதிநிதிகள் அனுமதிக்கப்படாததால் திமுக எம்எல்ஏ சிவா, முதல்வரின் மகள் விஜயகுமாரி உள்ளிட்டோர் தர்ணாவில் ஈடுபட்டனர். அதேபோல் காங்கிரஸ் எம்எல்ஏவும், முதல்வரின் நாடாளுமன்ற செயலருமான லட்சுமி நாராயணனையும் அனுமதிக்காததால் போராட்டத்தில் ஈடுபட்டார். அமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான நமச்சிவாயம் போலீஸாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

நமச்சிவாயம் அதைத்தொடர்ந்து கூறுகையில், "போலீஸாரை தூண்டி போராட்டத்தை சீர்குலைக்க ஆளுநர் முயற்சிக்கிறார். போராட்டக் களத்துக்குள் நுழைய கடும் கட்டுபாடு விதிப்பதுடன், தண்ணீரை கூட அனுமதிக்க மறுப்பது தவறானது" என்றார். லட்சுமி நாராயணன் எம்எல்ஏ வர மறுத்து அங்கேயே அமர்ந்தார்.

ராஜ்நாத்சிங்குக்கு சபாநாயகர் கடிதம்:

புதுச்சேரியின் தற்போதைய அசாதாரண சூழலை எதிர்கொண்டு, நிர்வாகத்தை செம்மைப்படுத்த தகுதியான இடைக்கால நிர்வாகியை அனுப்ப வேண்டும் என சபாநாயகர் வைத்திலிங்கம் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

புதுச்சேரியில் இரு நாட்களுக்கு போராட்ட களத்துக்கு வந்து பார்த்த பிறகு இக்கடிதத்தை அனுப்பியுள்ளார். அக்கடித விவரம்:

ஆளுநர் விரும்பினால் இருதரப்புக்கும் இடையில் பேசி பிரச்னையை சுமூகமாக தீர்க்கலாம் என பத்திரிகைகள் வாயிலாக தெரிவித்தேன். ஆனால், அதற்கு ஆளுநரிடம் உரிய பதில் இல்லை. முதல்வர் மற்றும் அமைச்சர்கள் போராட்டம் நடத்தும் ஒரு அசாதாரண சூழலில் ஒரு நிர்வாகி அதை தீர்த்து வைக்க கவனம் செலுத்தாமல் வெளியூர் சென்றிருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது.

இச்சூழலில் மத்திய அரசு இதில் தலையிட வேண்டும் என கருதுகிறேன். மேலும் நீங்கள் உள்துறையை சேர்ந்த உயர் அதிகாரியை அனுப்பி பிரச்சினையை தீர்க்க முயல வேண்டும். அல்லது இச்சூழலை திறமையாக கையாண்டு, புதுவை நிர்வாகத்தை செம்மைப்படுத்தும் பொருட்டு தகுதியான இடைக்கால நிர்வாகியை அமர்த்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

சட்டம் - ஒழுங்கு அறிக்கை:

இச்சூழலில் வியாழக்கிழமை நள்ளிரவு எஸ்எஸ்பி அபூர்வாகுப்தாவிடம், சட்டம் ஒழுங்கு விவர அறிக்கையை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கேட்டுள்ளார். அதையடுத்து தலைமைச் செயலர் அஸ்வினி குமாரிடம் அந்த அறிக்கையை எஸ்எஸ்பி அளித்தார். இன்று காலை தனக்கு நேரடியாக அறிக்கை தர கிரண்பேடி உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து இன்று காலை ராஜ்நிவாஸில் சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் இருக்கிறது என்ற அறிக்கையை எஸ்எஸ்பி அபூர்வாகுப்தா அளித்துள்ளார். 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x