Published : 14 Feb 2019 10:16 AM
Last Updated : 14 Feb 2019 10:16 AM
கடந்த 11 ஆண்டுகளாக வேளச்சேரி - பரங்கிமலை இடையே நடக்கும் பறக்கும் ரயில் திட்டப் பணிகள் அடுத்த 6 மாதங்களில் முடிக்கப்படவுள்ளன. இதற்கான கட்டுமான நிறுவனத்தைத் தேர்வு செய்ய, தெற்கு ரயில்வே விரைவில் டெண்டர் வெளியிடவுள்ளது.
சென்னையில் ரயில் போக்குவரத்து வசதியைப் பெறவும், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் முதல்கட்டமாக சென்னை கடற்கரை - மயிலாப்பூர் இடையே 9 கிமீ தூரத்துக்கு பறக்கும் ரயில் திட்டப்பணி ரூ.266 கோடியில் மேற்கொள்ளப்பட்டு 1997-ம் ஆண்டுநிறைவடைந்தது. 2-வது கட்டமாக மயிலாப்பூர் - வேளச்சேரி இடையே பறக்கும் ரயில் திட்டப்பணி ரூ.877 கோடியே 59 லட்சம் செலவில் 2007-ம் ஆண்டு முடிக்கப்பட்டது.
இதையடுத்து, வேளச்சேரி - பரங்கிமலை இடையே இந்த ரயில்சேவையை இணைத்தால் மக்கள் கூட்டம் அதிகரிக்கும் என திட்டமிட்ட ரயில்வே, வேளச்சேரி - பரங்கிமலையை இணைக்கும் பறக்கும் ரயில் திட்டப்பணியை ரூ.495 கோடியில் கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கியது.
நீதிமன்றம் மூலம் தீர்வு
மொத்தமுள்ள ஐந்து கிமீ தூரத்தில் 4.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு 167 தூண்களுடன் ரயில்பாதைகள் வேகமாக அமைக்கப்பட்டன. ஆதம்பாக்கம், தில்லை கங்கா நகர் பகுதியில் சிலர் எதிர்ப்புத் தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனால், எஞ்சியுள்ள 500 மீட்டர் தூரத்துக்கான திட்டப்பணிகள் பல ஆண்டுகளாக கிடப்பில் இருந்தன.
2010-ல் முடிக்கப்பட வேண்டிய பணிகளில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டது. இதற்கான திட்ட மதிப்பீடும் ரூ.450 கோடியில் இருந்து சுமார் ரூ.900 கோடியாக உயர்ந்தது. இதற்கிடையே, நிலம் கையகப்படுத்தும் பிரச்சினைக்கு நீதிமன்றம் மூலம் சமீபத்தில் தீர்வு கிடைத்து விட்டது. இதனால், இந்தப் பணியை தீவிரப்படுத்த தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறும்போது,‘‘வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டத்தால் பாதிக்கப்படுவதாக சிலர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நீதிமன்றம் மூலம் தற்போது நல்ல தீர்வு கிடைத்துள்ளது.
எனவே, எஞ்சியுள்ள 500 மீட்டர் இணைப்புக்கான கட்டுமானப் பணியை விரைவில் தொடங்க டெண்டர் வெளியிடவுள்ளோம். அடுத்த 6 மாதங்களில் இந்தப்பணியை முடிக்கத் திட்டமிட்டுள்ளோம். இந்தப் பணி முடியும்போது வேளச்சேரி, விமான நிலையம், தாம்பரம், பிராட்வே, சென்ட்ரல் போன்ற முக்கியமான பகுதிகளை ரயில்சேவை மூலம் இணைக்க முடியும். மேலும், சென்ட்ரல், எழும்பூரில் இருப்பது போல், பரங்கிமலையிலும் பேருந்து, மின்சார ரயில், மெட்ரோ என ஒருங்கிணைந்த போக்குவரத்து சேவையைப் பெற முடியும்’’ என்றனர்.
அறிக்கை சமர்ப்பிப்பு
பறக்கும் ரயில்சேவையை மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் இணைப்பது குறித்து ஒரு குழுஅமைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு ரயில்வே வாரியத்திடம் அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் இணைக்க ஒரு தரப்பு அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
பறக்கும் ரயில் நிலையங்களை மேம்படுத்தி பரங்கிமலை வரையில் ரயில்சேவை இணைக்கப்பட்டால், தெற்கு ரயில்வேக்கு மேலும் வருவாய் கிடைக்கும் என கருத்து தெரிவித்துள்ளனர். இதனால், பறக்கும் ரயில்சேவையுடன், மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் இணைப்பதில் சிக்கல் நீட்டித்து வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT