Published : 10 Feb 2019 11:16 AM
Last Updated : 10 Feb 2019 11:16 AM
பட்டு நூலின் விலை சரிவு, ஜிஎஸ்டி உள்ளிட்ட காரணங்களால் பட்டு நெசவுத்தொழில் ஏற்றம் பெற்றுள்ளது. பட்டுநெசவுத் தொழிலாளர்களுக்கான வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளதோடு, பட்டுப்புடவைகளின் விலையும் குறைந்துள்ளது.
ஈரோடு மாவட்டம் புன்செய் புளியம்பட்டி, சத்தியமங்கலம், தொட்டம்பாளையம், கள்ளிப்பட்டி, சாவக்காட்டுப்பாளையம், சதுமுகை, டி.ஜி.புதூர், கே.என்.பாளையம், கோணமலை உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள், நெசவுத்தொழிலை பிரதானமாகக் கொண்டவையாகும். ஆயிரக்கணக்கான தறிகள் இயங்கும் இந்த கிராம நெசவாளர்களின் கைகளால் தயாராகும் பட்டுப்புடவைகள் தமிழகத்தின் பிரபல ஜவுளிக்கடைகளில் தொடங்கி, உலகமெங்கும் பயணிக்கும் தனித்துவம் கொண்டதாகும்.
இப்பகுதியில் பட்டுப்புடவை தயாரிக்கும் நெசவாளர்களில் 90 சதவீதம் பேர் தனியாரிடம் ஒப்பந்தம் மற்றும் கூலி அடிப்படையிலும், 10 சதவீதம் பேர் கூட்டுறவு சங்கங்கள் வாயிலாகவும் பட்டுநெசவை மேற்கொண்டு வருகின்றனர்.
பட்டு நெசவுக்குத் தேவையான பட்டு நூல் பெங்களூரு போன்ற நகரங்களில் இருந்தும், சீனா போன்ற வெளிநாடுகளிலிருந்தும் இறக்குமதி செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு சீன பட்டு நூல் கிலோ ரூ.3600-ல் இருந்து அதிரடியாக ரூ.4900-க்கும், கர்நாடக பட்டுநூல் ரூ.3300-லிருந்து ரூ.4500-க்கும் உயர்ந்தது. பட்டு நெசவுக்கு ஆதாரமாக விளங்கும் நூலின் விலை உயர்ந்ததால், நெசவாளர்களின் வாழ்வில் புயல் வீசியது.
ஈரோடு மட்டுமல்லாது கோவை, திருப்பூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கைத்தறிகளைச் சார்ந்த நெசவாளர்கள் பரிதவிப்பிற்குள்ளானார்கள். பட்டு நூல் விலையேற்றத்தால் கைத்தறி நெசவாளர்கள், பாவுநூல் சாயமிடும் தொழிலாளிகள், பாவு வீசும் தொழிலாளர்கள், ஜக்கார்டு அட்டை அடிக்கும் தொழிலாளர்கள் உள்ளிட்ட பல லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டது. பட்டுநூல் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பட்டு நெசவாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்தனர்.
அரசின் நடவடிக்கை, சந்தை நிலவரத்தில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக பட்டுநூலின் விலை வெகுவாக குறைய தற்போது பட்டு நெசவாளர்களின் வாழ்வில் வசந்தம் வீசத் தொடங்கியுள்ளது. இதுகுறித்து பண்ணாரியம்மன் கைத்தறி பட்டுநூல் நெசவு மற்றும் வண்ணமிடுதல் சங்க செயலாளர் பி.கே. சண்முகம் கூறியதாவது:பட்டு நெசவின் ஆதாரமான இந்திய பட்டுநூலின் விலை கிலோ ரூ.3 ஆயரமாகவும், இறக்குமதி சீனா பட்டு நூல் ரூ.4 ஆயிரத்துக்கு குறைவாகவும் விலை சரிந்துள்ளது. இதனால் நெசவாளர்களின் கூலி உயர்ந்துள்ளது. பட்டுப்புடவைகளின் விலையும் ரூ.500 வரை குறைந்துள்ளது. பட்டுநூலின் விலை உயர்வு பாதிப்பில் இருந்து நெசவாளர்கள் தற்போது விடுபட்டுள்ளனர்.
ஜிஎஸ்டி அமலுக்கு வந்தபோது தொழிலில் சிறிய அளவு பாதிப்பு, குளறுபடி இருந்தது. தற்போது ஜிஎஸ்டியை முழுமையாக ஏற்றுக் கொண்டு தொழில் செய்வதால், நிம்மதியாகத் தொழில் செய்ய முடிகிறது.
சீனாவில் இருந்து பட்டுநூல் இறக்குமதி செய்யப்படுவதால் பெரும் தொகையை அந்நியச் செலாவணியாகக் கொடுக்க வேண்டிய நிலை இருந்தது. தற்போது அந்த நிலையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்திய பட்டுநூல் மஞ்சள் நிறத்திலும், சீனப்பட்டு நூல் வெள்ளை நிறத்தில் சற்று வலிமையாக இருக்கும். தற்போது பட்டுநூலை இறக்குமதி செய்வதற்கு பதிலாக, சீனாவில் இருந்து இயந்திரங்களை இறக்குமதி செய்து, 4 ஏ கிரேடு, 5ஏ கிரேடு தரம் கொண்ட சீன வெண்பட்டு நூல்களை இங்கேயே தயாரிக்க முடிகிறது. இதனால், நூலின் விலை குறைந்துள்ளது.
எங்கள் பகுதி நெசவாளர்கள் கோரா பை காட்டன் என ரகத்தை நெசவு செய்து, அதற்கு புவிசார் குறியீடு பெற்றுள்ளனர். அத்துடன் காஞ்சிபுரம், ஆரணி பட்டுக்கு இணையாக மென் பட்டு (சாப்ட் சில்க்) ரகத்தை அறிமுகம் செய்துள்ளோம். இந்த பட்டிற்கு மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது, என்றார்.
நெசவுத்தொழிலை பொறுத்தவரை குடும்பமாக சேர்ந்து செய்யும் தொழிலாகவே இருந்து வருகிறது. வாரத்திற்கு இரண்டு புடவை வரை நெய்ய முடியும் என்றாலும், டிசைன் உள்ளிட்ட தனித்தன்மை பெற்ற புடவைகளை நெய்யும் போது கூடுதல் வருவாய் கிடைக்கும் நிலை உள்ளது.
பட்டுநெசவில் தனியாரின் ஆதிக்கம் மேலோங்கி இருப்பதை நெசவாளர்கள் வரவேற்கின்றனர். அரசின் கூட்டுறவு சங்கங்கள் அரசியல்வாதிகளின் பிடியிலும், அதிகாரிகளின் ராஜ்யத்திலும் செயல்படுவதால், அரசின் எந்த உதவியும் தங்களுக்கு கிடைப்பதில்லை என்கிறார்கள் நெசவாளர்கள். இதுகுறித்து நெசவாளர்கள் கூறியதாவது;நெசவுத்தொழில் குறித்து தெரியாதவர்கள் கூட்டுறவு சங்க பொறுப்பு களுக்கு வருகின்றனர். பொதுமக்கள் விரும்பும் டிசைன், வண்ணக்கலவை போன்றவற்றை தனியார் துல்லியமாக கணித்து, அதன்படி சேலைகளை நெசவுக்கு கொடுக்கின்றனர். உடனுக்குடன் சேலைகள் தயாராகி விற்பனைக்கு சென்று விடும். ஆனால், கூட்டுறவு சங்கத்தில் ஒரு டிசைனிற்கு ஒப்புதல் வாங்கி, உற்பத்தி நிலைக்கு கொண்டு வருவதற்குள் சந்தையின் நிலவரமே மாறி விடும்.
கூட்டுறவு சங்கம் மூலம் நெய்யப்படும் பட்டுப்புடவைகள், கோ-ஆப்டெக்ஸ் மூலம் 30 சதவீத தள்ளுபடியில் விற்பனை செய்யப்பட வேண்டிய நிலையில் தான் உள்ளது. நெசவாளர்களுக்கு உரிய நேரத்தில் கூலியும் கிடைக்காது. நிரந்தமான வேலையையும் கூட்டுறவு சங்கங்களால் வழங்க முடிவதும் இல்லை.
அதே நேரத்தில் ஜவுளிக் கடைக்காரர் களுக்கும், நெசவாளர்களுக்கும் இடையே வணிகம் செய்யும் நிறுவனங்கள் தொழிலை மேம்படுத்துகின்றன. எந்த ஒரு நெசவாளரும் பிரபல ஜவுளிக்கடையில் நேரடியாக புடவையை விற்க முடியாது. அதுபோல ஜவுளிக்கடைக்காரர்களும் நெசவாளர்களை நேரடியாக அணுகுவது என்பது சாத்தியமானது அல்ல. இவர்கள் இருவருக்கும் பாலமாக விளங்கும் நிறுவனங்கள் (டிரேடர்ஸ்) கோடிக்கணக்கில் முதலீடு செய்து தொழிலை நடத்தி வருகின்றனர். பட்டுநூலில் தொடங்கி அனைத்து உபகரணங்களையும் நெசவாளர்களுக்கு வழங்கி, அவர்களின் வேலைக்கு உரிய நேரத்தில் கூலியும் இவர்கள் வழங்குகின்றனர். ஜவுளிக்கடைகளுக்கு கடனுக்கும் பட்டுப்புடவைகளைக் கொடுத்து தொழில் தொடர்ந்து நடத்த உதவுகின்றனர். எனவே, பட்டு நெசவுத்தொழில் வளரவும், நெசவாளர்களுக்கு நிரந்தர பணி கிடைக்கவும், கூட்டுறவு சங்கங்கள் மூலம் அரசு வழங்கும் சலுகைகளை, தனியார் மூலம் நெசவு செய்பவர்களுக்கும் வழங்க வேண்டும், என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT