Published : 16 Feb 2019 10:23 AM
Last Updated : 16 Feb 2019 10:23 AM

போலீஸாரின் தற்கொலையை தடுக்க மன நல ஆலோசனை: நாட்டில் முதல் முறையாக தமிழகத்தில் அறிமுகம்

பணி நெருக்கடியால் போலீஸாரின் தற்கொலையை தடுக்க தமிழக காவல்துறையில் ‘நிறைவு வாழ்வு’ என்ற மனநல ஆலோசனைத் திட்டம் இந்தியாவிலே முதல் முறையாக தமிழகத்தில் தொடங்கப் பட்டுள்ளது.

தமிழக காவல்துறையில் பணிச் சுமையால் மன அழுத்தம் அதிகமாகி போலீஸார் தற்கொலை செய்வது அதிகரித்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 441 போலீஸார் தற்கொலை செய்துள்ளனர். சில நாட்களுக்கு முன் மயிலாடுதுறை தலைமைக்காவலர் மாமணி (45), மதுரை பட்டாலியன் தலைமைக்காவலர் ராமர் (29) ஆகியோர் தற்கொலை செய்து கொண்டனர்.

இதற்குத் தீர்வு காணும் வகையில் தமிழக அரசு ரூ.10 கோடியில் போலீஸாருக்கான ‘நிறைவு வாழ்வு திட்டம்’ தொடங்கியுள்ளது. இதில், பெங்களூரு நிமான்ஸ் மருத்துவமனையின் மன நல ஆலோசகர்கள் மேற்பார்வையில், தமிழக போலீஸாருக்கு மன நலப்பயிற்சி வழங்கப்படுகிறது.

கடைநிலை போலீஸார் முதல் காவல் உதவி ஆணையர் வரை மன நலப் பயிற்சி வழங்கப்படுவதோடு, அவர்களது குடும்பத்தினருக்கும் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் சுமார் 5 லட்சம் பேருக்கு இந்தப் பயிற்சியை வழங்கத் திட்டமிடப் பட்டுள்ளது.

இதுகுறித்து நலவாழ்வுத் திட்ட மாநில ஒருங்கிணைப்பாளர் (Nodal officer) மனநல மருத்துவர் ராமசுப்பிரமணியன் கூறியது: ‘‘5 லட்சம் பேருக்கு ஒரு திட்டத்தில் மனநல ஆலோசனை, சிகிச்சை வழங்குவது தமிழகத் தில்தான் முதல்முறை. இதற் காக, 400 நிபுணத்துவம் பெற்ற பயிற்சியாளர்கள் தேர்வு செய்யப் பட்டு பெங்களூருவில் நிமான்ஸ் மருத்துவமனையில் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த 400 பேரும்தான் தற்போது தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்ட போலீஸாருக்கும் மனநலப் பயிற் சியை வழங்குகின்றனர்.

வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வைத்து ஒரு அணிக்கு 40 போலீஸார் வீதம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பயிற்சி வழங்கப்படுகிறது. வெள்ளி, சனிக்கிழமைகளில் காவலர்களுக்கும், 3-வது நாள் காவல்துறையைச் சேர்ந்த அவர்கள் குடும்பத்தினருக்கும் இந்த மனநலப் பயிற்சி வழங்கப் படுகிறது.

இந்த ‘கவுன்சலிங் மூலம் காவலர்களின் மன அழுத்தம் குறைகிறது. அதனால் அவர் களின் வேலைத்திறன் மேம் பட்டு பொதுமக்களுடனான அணுகுமுறையும் மாறுகிறது. குடும்பத்தினரின் உடல், மன நலம் பாதுகாக்கப்படுகிறது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x