Last Updated : 15 Feb, 2019 09:03 AM

 

Published : 15 Feb 2019 09:03 AM
Last Updated : 15 Feb 2019 09:03 AM

வச்ச குறி தப்பாது!- துப்பாக்கி சுடுதல் போட்டியில் சாதிக்கும் மாணவி

தேசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்றுள்ளார் கோவையைச் சேர்ந்த கல்லூரி மாணவி பி.வர்ஷா. இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (சாய்) சார்பில், மகராஷ்டிர மாநிலம் புனேவில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற 'கேலோ இந்தியா யூத் கேம்ஸ்' என்ற தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில், நாடு முழுதுவதுமிருந்து வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில், துப்பாக்கி சுடுதல் பிரிவில் தமிழகம் சார்பில் கலந்துகொண்ட கோவை பிஎஸ்ஜி கலை, அறிவியல் கல்லூரி மாணவி ஜி.வர்ஷா, தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

நின்றவாறு, முழங்காலிட்டவாறு, படுத்தவாறு துப்பாக்கி சுடும்,  3 பொசிஷன் 50 மீட்டர் ரைபிள் பிரிவில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். 2018-ல் கேரளாவில் நடைபெற்ற தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியிலும் 3 பதக்கங்கள் வென்று அசத்தியுள்ளார் இவர்.

"எனக்கு சொந்த ஊர் மதுரை. தந்தை கணேசன்,  சுயதொழில் செய்து வருகிறார். அம்மா செல்வி. கோவையில் எம்.காம். சர்வதேச வணிகம் படிப்பில் முதலாமாண்டு படித்து வருகிறேன்.  சிறு வயது முதலே துப்பாக்கி சுடுதலில் எனக்கு மிகுந்த ஆர்வம். 6-ம் வகுப்பு படிக்கும் போதே, மதுரை ரைபிள் கிளப்பில் உறுப்பினராகச் சேர்ந்து, பயிற்சி மேற்கொள்ளத் தொடங்கினேன்.

பயிற்சியாளர் தேவ் சங்கர், போட்டிகளில் கலந்துகொள்ளும் வகையில் என்னை தயார்படுத்தினார். கடந்த 2010-ல் சென்னையில் நடைபெற்ற மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றேன். அதுதான் நான் வென்ற முதல் பதக்கம்.

பள்ளிப் படிப்பைத் தொடர்ந்து, கல்லூரியில் சேர்ந்த பிறகும் இடைவிடாமல் பயிற்சி மேற்கொண்டு, தொடர்ச்சியாக போட்டிகளில் பங்கேற்று வருகிறேன். கேலோ இந்தியா போட்டியில் தங்கம் வென்றதுதான்  சமீபத்திய வெற்றி. இதுவரை மாவட்ட, மாநில, தேசியப் போட்டிகளில் தங்கம், வெள்ளி, வெண்கலம் என 150-க்கும் மேற்பட்ட பதக்கங்கள் வென்றுள்ளேன்.  சென்னையில் நடைபெறும் பயிற்சி முகாமில் பங்கேற்ற பிறகு, தேசிய மற்றும் சர்வதேச போட்டிக்கான தேர்வு போட்டிக்காக டெல்லி செல்ல விருக்கிறேன். அதில் 5, 6 நிலைகள் உள்ளன. திறனை அடிப்படையாகக் கொண்டு  தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்படும். அதில்,  முதல் 3 இடங்களைப் பெறுவோர் சர்வதேசப்  போட்டிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

தற்போது நான் சீனியர் பிரிவில் உள்ளேன். முதல் 3 இடங்களுக்கு கடுமையான போட்டி நிலவும். அதில் வெல்வதற்காக கடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன்.

இதற்கு முன் ஜூனியர் பிரிவில், 4, 5-வது  இடங்களைப் பிடித்ததால், சர்வதேச போட்டிக்குள் நுழையும் வாய்ப்பு தவறி விட்டது. இந்த முறை நிச்சயம் சர்வதேசப் போட்டியில் பங்கேற்க வேண்டுமென்ற லட்சியத்துடன், முயற்சித்து வருகிறேன்.

ஒலிம்பிக்  போட்டியில் பங்கேற்று, பதக்கம் வென்று, இந்தியாவுக்குப்  பெருமை சேர்க்க வேண்டுமென்பதே எனது லட்சியம்" என்றார் நம்பிக்கையுடன்.

சர்வதேச போட்டிக்கு தயார்

சென்னையில் நடைபெற்று வரும் முகாமில் பயிற்சி பெற்று வரும் ஜி.வர்ஷா, இதைத்தொடர்ந்து புதுடெல்லியில் நடைபெறும் தேசிய மற்றும் சர்வதேச போட்டிக்கான தேர்வு போட்டிக்கு தயாராக உள்ளார். நாடு முழுவதும் உள்ள துப்பாக்கி சுடும் வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் அப்போட்டியில் சாதித்து சர்வதேச போட்டியில் பங்கேற்று, பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்க்க வாழ்த்துவோம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x