Last Updated : 27 Feb, 2019 07:20 PM

 

Published : 27 Feb 2019 07:20 PM
Last Updated : 27 Feb 2019 07:20 PM

தேமுதிக எங்கள் கூட்டணிக்கு வரவேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்: இல.கணேசன்

தேமுதிக எங்கள் கூட்டணிக்கு வரவேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். ஓரிரு நாட்களில் முடிவுக்கு வரும் என்று பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் தெரிவித்தார்.

புதுச்சேரியில் பாஜக-அதிமுக- பாமக கூட்டணியில் எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் இடம் பெற்று மக்களவைத் தேர்தலை சந்திக்க உள்ளது. இதையொட்டி இன்று மாலை புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்துக்கு ரங்கசாமி வந்தார். அவரை தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன், மாநிலத்தலைவர் சாமிநாதன் ஆகியோர் வரவேற்றனர்.

இதுதொடர்பாக ரங்கசாமி கூறுகையில், "இது மரியாதைநிமித்த சந்திப்பு" என்று குறிப்பிட்டார்.

முன்னதாக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் கூறுகையில், "தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலை அரசியலாக்க விரும்பவில்லை. இது தேசத்தின் பெருமை. வைகோ திமுகவை விமர்சித்ததை விடவா இதர கட்சிகள் விமர்சித்து விட்டனர். விமர்சனங்களில் கட்சிகள் வரம்பு மீறக்கூடாது. கடும் விமர்சனங்களை முன்வைத்து பிறகு கூட்டணி சேர்ந்தால் மக்கள் மத்தியில் சந்தர்ப்பவாதம் என்பதாக பேச்சு வருவதாக குறிப்பிடுகிறார்கள்.  ஒரே கொள்கை இருந்தால் எதற்கு தனித்தனி கட்சிகள் என்ற கேள்வி வரும்.

தற்போது கூட்டணி பற்றி வரும் விமர்சனங்கள் பொருத்தமற்றவை. மோடி பிரதமராக வர விரும்புவோர் ஒருபுறமும், மோடியை எதிர்ப்போர் மறுபுறமும் உள்ளனர். கூட்டணியில் தமிழகத்தில் என்னென்ன தொகுதிகள் ஒதுக்கீடு என்பது இன்னும் முடிவாகவில்லை. பேச்சு வார்த்தை நடக்கிறது. தேமுதிக எங்கள் கூட்டணிக்கு வரவேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். பேச்சுவார்த்தை ஓரிரு நாட்களில் முடிவடைந்து விடும்'' என்று இல.கணேசன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x