Published : 19 Feb 2019 10:26 AM
Last Updated : 19 Feb 2019 10:26 AM
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டுக்கான உப்பு உற்பத்தி பணிகள் தொடங்கியுள்ளன. ஆனால், இடையிடையே பெய்யும் மழை காரணமாக உப்பு உற்பத்தி தாமதமாவதாக உற்பத்தியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயம், மீன்பிடித் தொழில்களுக்கு அடுத்ததாக உப்புத் தொழில் உள்ளது. உப்பு உற்பத்தியில் குஜராத் மாநிலத்துக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி 2-வது இடத்தில் உள்ளது. இங்கு சுமார் 20 ஆயிரம் ஏக்கரில் உப்பளங்கள் அமைந்துள்ளன. இவற்றில் சுமார் 30 ஆயிரம் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆண்டுக்கு சராசரியாக 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.
ஆண்டு தோறும் ஜனவரி மாதம் உப்பு உற்பத்தி பணிகள் தொடங்கி அக்டோபர் மாதம் வரை நடைபெறும். ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று மாதங்களும் தான் உப்பு உற்பத்தி உச்சத்தை தொடும் காலம்.
பணிகள் தொடக்கம்
தூத்துக்குடி மாவட்டத்தில் வழக்கம் போல் இந்த ஆண்டும்ஜனவரி மாதம் உப்பு உற்பத்தியாளர்கள் தங்களது உப்பளங்களை சீரமைத்து உப்பு உற்பத்தி பணிகளை தொடங்கினர்.
ஆனால், ஜனவரி இறுதி வரை நீடித்த கடுமையான பனிப்பொழிவு மற்றும் இடையிடையே பெய்த பருவம் தப்பிய மழை காரணமாக உப்பு வாறும் பணியில் தாமதம் ஏற்பட்டது.
இதனால் பிப்ரவரி மாத ஆரம்பத்தில் தொடங்க வேண்டியஉப்பு உற்பத்தி இன்னும்முழுமையாக தொடங்கப்படவில்லை. ஒருசில பகுதிகளில் மட்டும் ஆரம்பக்கட்ட உப்பு வாறும் பணி தொடங்கியிருப்பதாக உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.
மழையால் தாமதம்
இது குறித்து தூத்துக்குடி சிறிய அளவு உப்பு உற்பத்தியாளர் சங்க செயலாளர் ஏஆர்ஏஎஸ். தனபாலன் கூறியதாவது:வழக்கமாக தூத்துக்குடியில் பிப்ரவரி மாத தொடக்கத்தில் உப்பு உற்பத்தி பணி தொடங்கப்பட்டு புதிய உப்பு வந்துவிடும். இந்த ஆண்டு கடந்த 9, 10-ம் தேதிகளில் பெய்த திடீர் மழை மற்றும் கடந்த 10 நாட்களுக்கு முன் பெய்த மழையால் உப்பு உற்பத்தி தாமதமாகியுள்ளது.
ஒரு சில உப்பளங்களை தவிர பெரும்பாலான பகுதிகளில் இன்னும் உப்பு உற்பத்தி பணி தொடங்கவில்லை.
எனது உப்பளத்தில் இந்த வாரம் உப்பு உற்பத்தியை தொடங்கலாம் என்று நினைத்திருந்தேன். திடீர் மழை காரணமாக தொடங்க முடியவில்லை. அடுத்த வாரம் தான் உப்பு உற்பத்தியை தொடங்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டும் இதேபோல் இடையிடையே மழை குறுக்கீடு செய்ததால் 60 சதவீதம் அளவுக்கு அதாவது சுமார் 15 லட்சம் டன் வரை மட்டுமே உப்பு உற்பத்தி செய்யப்பட்டது.
கையிருப்பு இல்லை
இந்த உப்பில் 90 சதவீதம் காலியாகி விட்டது. ஆங்காங்கே 10 சதவீதம் அளவுக்கு, அதாவது சுமார் 1.5 லட்சம் டன் அளவுக்கே உப்பு கையிருப்பில் உள்ளது. இது இந்த மாதம் கடைசி வரை போதுமானதாக இருக்கும். இம்மாத இறுதிக்குள் புதிய உப்பு உற்பத்தியாகி வந்துவிடும் என எதிர்பார்க்கிறோம்.
உப்பு கையிருப்பு குறைவாக இருப்பதால் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு விலை ஓரளவுக்கு திருப்திகரமாக உள்ளது. கடந்த ஆண்டு ஒரு டன் உப்பு அதிகபட்சமாக ரூ. 800 வரை தான் விலை போனது. இப்போது ஒரு டன் உப்பு ரூ. 800 முதல் ரூ.1500 வரை விலை போகிறது. ஆனால், விற்பனை செய்ய உப்பு இல்லை. வரும் நாட்களில் எதிர்பார்க்கும் அளவுக்கு உப்பு உற்பத்தி இருக்குமா என்பது சந்தேகமே. காலநிலை மாற்றம் காரணமாக பருவம் தப்பிய மழை அவ்வப்போது குறுக்கிடும் பட்சத்தில் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT