Published : 25 Feb 2019 05:49 PM
Last Updated : 25 Feb 2019 05:49 PM
முகிலன் மாயமாகி உள்ளதாக கூறுவது பற்றி, அவரது குடும்பத்தினர் புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என, முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று சேலத்தில் செய்தியாளர்களிடம் முதல்வர் பழனிசாமி பேசியதாவது:
''சேலம் மாவட்டத்தில் மட்டும் 18,000 சுய உதவிக் குழுக்களுக்கு ஏற்கெனவே, 500 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்காக இன்னும் 41,000 கோடி ரூபாய் கடனாக வழங்கவுள்ளோம். எங்களது கூட்டணி மெகா கூட்டணி. ஒவ்வொரு தேர்தலிலும் கூட்டணி மாறி, மாறி அமைகிறது. பாமக ஏற்கெனவே திமுகவுடனும் கூட்டணி வைத்துள்ளது, அதிமுகவுடன் கூட்டணி வைத்திருக்கிறது. கூட்டணி என்பது வேறு; கொள்கை என்பது வேறு.
தமிழகத்தில் அதிமுக ஆட்சி சிறப்பாகச் செயல்படுகிறது. தமிழகத்தில் எங்களது வேட்பாளர்கள் அதிக இடங்களில் வெற்றி பெறுவார்கள். பாஜக, பாமக உடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை முடிந்துள்ளது. மேலும், பல்வேறு கட்சிகளுடன் பேசி வருகிறோம். நாடாளுமன்றத் தேர்தலில் தினகரன் எத்தனை இடங்களிலும் போட்டியிடலாம். அவரது கட்சி பெரிய கட்சி அல்லவா; இதுவரை அவரது கட்சியைப் பதிவு செய்தாரா இல்லையா என்று கூட தெரியவில்லை. அவர் 534 தொகுதிகளிலும் போட்டியிட்டாலும் எங்களுக்கு கவலையில்லை.
தொடர்ந்து கூட்டணி குறித்து கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பாமகவுக்கு 7 இடங்களும், பாஜகவுக்கு 5 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. அதிமுக எத்தனை இடங்களில் போட்டியிடுவது என்பது பேச்சுவார்த்தைக்குப் பின்னரே தெரியும். எங்களது கூட்டணி மெகா கூட்டணி, அனைத்து தொகுதிகளிலும் எங்களது கூட்டணி வெற்றி பெறும். மத்தியில் வலுவான கூட்டணி அமைந்தால் தான் வளர்ச்சிப் பணிகள் செய்து தர முடியும்.
கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் 37 இடங்களில் அதிமுக வெற்றி பெற்று, இந்தியாவிலேயே மூன்றாவது பெரிய கட்சியாக உள்ளது.
இந்த நாடாளுமன்றத் தேர்தலிலும், 2021-ம் ஆண்டு வரும் சட்டப்பேரவை தேர்தலிலும், இடைத்தேர்தலிலும் அதிமுகவே வெற்றி பெறும். எட்டு வழி விரைவுச்சாலை தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் எதுவும் கூற முடியாது.
ஸ்டெர்லைட்டுக்கு எதிராகப் போராடிய முகிலன் மாயமாகி உள்ளதாக கூறுவது பற்றி, அவரது குடும்பத்தினர் புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். தனிப்பட்ட நபருக்காக அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று குற்றம் சாட்டக்கூடாது''.
இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT