Last Updated : 26 Feb, 2019 07:42 PM

 

Published : 26 Feb 2019 07:42 PM
Last Updated : 26 Feb 2019 07:42 PM

அதிமுகவை வீழ்த்த நினைத்த பாமக, அவர்களுடனேயே கூட்டணி - இது நம்பிக்கை துரோகம்; கட்சியை விட்டு விலகிய நடிகர் ரஞ்சித் குமுறல்

அதிமுகவை வீழ்த்துவதே குறிக்கோள் என்று சொல்லிவந்த பாமக, இப்போது அதிமுகவுடன் கூட்டணி வைத்து, மக்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டது. ஆகவே நான் கட்சியில் இருந்தும் பதவியில் இருந்தும் விலகுகிறேன் என்று நடிகர் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

பாமகவின் மாநிலத் துணைப் பதவியில் இருந்தும் கட்சியில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார் நடிகர் ரஞ்சித்.

இதுகுறித்து ரஞ்சித் தெரிவித்ததாவது:

ராமதாஸ் ஐயா மீதும் அன்புமணி அண்ணன் மீதும் மிகப்பெரிய மரியாதையும் பாசமும் வைத்திருந்தேன். கட்சிக்குக் கட்டுப்பட்டு நடக்கவேண்டும் என்பது உண்மைதான். ஆனால் அதேசமயம், கட்சி செய்யும் எல்லாச் செயல்களையும் ஏற்றுக்கொள்ளமுடியாது. அதிமுக அரசு, கொள்ளையடிக்கிறது என்று போராடிய பாமக, டாஸ்மாக் ஒழிக்கப்படவேண்டும் என்று போராட்டங்கள் நடத்திய பாமக, தமிழகத்தில் நல்லதொரு மாற்றத்தைக் கொண்டு வரும் கட்சி என்று இளைஞர்களால் பார்க்கப்பட்ட பாமக கட்சி, நல்ல சிந்தனைகள் கொண்ட கட்சி என்ற நம்பிக்கையைப் பெற்ற பாமக, இப்போது அனைத்தையும் இழந்துவிட்டது.

எந்தக் கட்சியின் ஆட்சி இருக்ககூடாது என்றும் அதை வேரோடு சாய்க்கவேண்டும் என்றும் பாமக சொல்லிக்கொண்டிருந்ததோ, அதே அதிமுகவுடன் பாமக கூட்டு சேருவது எந்த விதத்தில் நியாயம்? இதை எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும்?

எட்டுவழிச் சாலைக்கு கிராமம் கிராமமாக, தெருத்தெருவாக, வீடுவீடாகச் சென்று கையெழுத்து வாங்கி வழக்கு போட்டிருக்கிறோமே, அதற்கெல்லாம் என்ன பதில் சொல்லப்போகிறது பாமக? குட்கா உள்ளிட்ட ஊழல் விஷயங்களைப் பட்டியலிட்டு, ஆளுநரிடம் போனமாதம் கொடுத்த புகார் இனி என்னாகும்? இதற்கெல்லாம் பாமக என்ன விளக்கம் சொன்னாலும் அதை நானும் சரி, தொண்டர்களும் சரி, மக்களும் சரி ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

மக்களுக்குத் துரோகம் செய்யும் இந்த ஆட்சியை வீழ்த்துவதற்கான ஆயுதமாக நாங்கள், பாமகவைப் பார்த்தோம். ஆனால் அந்த ஆயுதம், யார் குற்றவாளியோ அவர்களின் கையிலேயே அடமானமாக வைக்கப்பட்டுவிட்டது. எட்டு வருடங்களாக, தனித்து நின்றோம். மக்கள் ஓட்டுப் போடவில்லை என்று விளக்கம் சொல்லுகிறார்கள். அப்படியென்றால், எப்படியாவது ஜெயிக்கவேண்டும். ஓட்டுக்குப் பணம் கொடுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இப்படி ஜெயிப்பதற்காக கூட்டணி வைத்துக்கொண்ட பாமகவுக்கும் என்ன வித்தியாசம்?

இது எப்படி இருக்கிறது தெரியுமா? திருடனைப் பிடிக்க போலீஸ் ஓடிவந்துவிட்டு, அந்தத் திருடனிடமே, ‘என்னை உன் பைக்ல அங்கே கொண்டுபோய் விட்ருப்பா’ என்று சொல்லுவது மாதிரி இருக்கிறது. பாமகவை நம்பி வந்த இளைஞர்கள் இப்போது வெம்பிக் கிடக்கிறார்கள்.

நான் நேர்மையான அரசியல் நடத்துவதற்குத்தான் வந்தேன். மற்ற அரசியல்வாதிகளைப் போல நானில்லை.

இவ்வாறு ரஞ்சித் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x