Published : 14 Feb 2019 11:07 AM
Last Updated : 14 Feb 2019 11:07 AM
வெல்லம்... முன்பெல்லாம் எல்லோர் வீடுகளிலும் வெல்லம் பயன்பாடு தினமும் இருக்கும். வெள்ளை சர்க்கரையின் வருகைக்குப் பிறகு வெல்லத்தின் மவுசு கொஞ்சம் குறைந்தாலும், ஆரோக்கியத்தை நாடுவோர் வெல்லத்துக்கே முன்னுரிமை கொடுத்தனர்.அச்சு வெல்லம், உருண்டை வெல்லம் என வெவ்வேறு வடிவங்களில் தயாரிக்கப்படும் வெல்லத்தின் சுவை அலாதியானது. கடந்த சில ஆண்டுகளாக வெல்லத்தின் பயன்பாடு குறைந்திருந்த போதிலும், அண்மைக் காலமாக மீண்டும் மக்கள் வெல்லம் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பகுதியில் அதிக அளவில் வெல்லம் தயாரிக்கப்படுகிறது. ஜேடர்பாளையத்தைச் சேர்ந்த வெல்ல உற்பத்தியாளர் ஆர்.நடராஜன் கூறும்போது, "பொத்தனுார், பிலிக்கல்பாளையம், ஜேடர்பாளையம் உள்ளிட்ட காவிரிக் கரையோரப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது. இதை மையப்படுத்தி, வெல்லம் தயாரிக்கும் ஆலைகள் செயல்படுகின்றன. உருண்டை, அச்சு வெல்லம் 30 கிலோ மூட்டைகளாக கட்டப்பட்டு, பிலிக்கல்பாளையம் வெல்ல ஏல மண்டிக்கு கொண்டுசெல்லப்பட்டு, தேவையைப் பொறுத்து விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. வாரந்தோறும் புதன், சனிக்கிழமைகளில் வெல்ல மண்டி கூடும். பின்னர், சேலம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விற்பனைக்காக கொண்டுசெல்லப்படுகிறது. மேலும், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, கர்நாடக மாநிலங்களுக்கும் வெல்லம் அனுப்பிவைக்கப்படுகிறது.
இயற்கையான முறையில், தரமாக தயாரிக்கப்படும் ப.வேலூர் வெல்லத்துக்கு அதிக வரவேற்பு உள்ளது. அதேசமயம், வெல்லம் தயாரிப்பில் கலப்படம் உள்ளதாகக் கூறப்படும் புகாரும் உண்மைதான். அதிக லாபத்துக்காக சிலர் 90 சதவீதம் வெள்ளைச் சர்க்கரையும், 10 சதவீதம் கரும்பு பாலும் சேர்த்து வெல்லம் தயாரிக்கின்றனர். சிலர் ரசாயன உரத்தையும் கலந்துவிடுகின்றனர். சிலரது செயல்பாடுகளால், நேர்மையாக தொழில் செய்வோரும் பாதிக்கப்படுகின்றனர்.
அதேபோல, காவிரி ஆற்றில் கலக்கப்படும் சாயக்கழிவுகளால், அந்த தண்ணீரை விவசாயத்துக்குப் பயன்படுத்தும்போது மண்ணின் தன்மை மாறிவிடுகிறது. இங்கு விளைவிக்கப்படும் கரும்பில் எடுக்கப்படும் சாறும் தரம் குறைந்ததாக உள்ளது. அதிக விளைச்சலுக்காக யூரியாவைப் பயன்படுத்தும்போது, கரும்புச் சாறில் போதிய சர்க்கரை இருப்பதில்லை. சிலர் வெல்லத்தை உருண்டையாக பிடிப்பதற்காக சூப்பர் பாஸ்பேட்டை பயன்படுத்துவதால், உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்தப் பிரச்சினைகளுக்கு அரசு தீர்வுகாண வேண்டும். அதேசமயம், வெல்ல உற்பத்தியாளர்கள் சங்கம் தொடங்கி, கலப்படமின்றி வெல்லம் தயாரிப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.
ப.வேலுார் பகுதியில் 200 வெல்ல தயாரிப்பு ஆலைகள் உள்ளன. இதில் 150 மட்டுமே தற்போது செயல்படுகின்றன. கலப்பட பிரச்சினையால் பல ஆலைகள் மூடப்பட்டுவிட்டன. தற்போது சீசன் இல்லாததால், பிலிக்கல்பாளையம் வெல்ல மண்டிக்கு வரத்து பாதியாக குறைந்துள்ளது. ரேஷன் கடைகளில் சர்க்கரை வழங்குவதுபோல, வெல்லமும் விற்பனை செய்ய வேண்டும். முதல்கட்டமாக, ரேஷன்கார்டுகளுக்கு வழங்கப்படும் சர்க்கரையில், பாதியை வெல்லமாக வழங்க வேண்டும். இதனால், வெல்லத்துக்கு கட்டுப்படியான விலை கிடைப்பதுடன், வேலைவாய்ப்பும் அதிகரிக்கும். கரும்பு விவசாயமும் செழிக்கும்" என்றார்.
நாமக்கல் மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர் ஆ.புஷ்பராஜ் கூறும்போது, "வெல்லத்தில் 92 சதவீதம் இனிப்பு சுவை இருக்க வேண்டும். இதற்கு குறைந்தால், அது தரமற்ற வெல்லமாகும். இனிப்பை அதிகரிப்பதற்காக வெள்ளைச் சர்க்கரையை உற்பத்தியாளர்கள் பயன்படுத்துகின்றனர். இது தவறு என்பதால், தொடர் ஆய்வு மேற்கொண்டு, 76 மாதிரிகள் கிண்டியில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன. மேலும், 20 பேர் மீது வழக்கு தொடர்ந்து, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
கருப்பா இருந்தா அது ‘டூப்ளிகேட்’:
"கரும்பு பாலை காய்ச்சி, இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் வெல்லம் காவி நிறத்தில் இருக்கும். இதுதான் கலப்படமற்ற வெல்லம். வெல்லம் கருப்பு நிறமாக இருக்க, சுண்ணாம்பு கலக்கப்படுகிறது. இது உடலுக்கு கேடு தரும்" என்கின்றனர் வெல்ல உற்பத்தியாளர்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT