Published : 01 Feb 2019 11:23 AM
Last Updated : 01 Feb 2019 11:23 AM
தோட்டத்து உணவகங்கள் என்ற பெயரில், மனமகிழ் மன்றங்களில் சட்டவிரோத செயல்கள் நடைபெறு வதைத் தடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
கொங்கு மண்டலத்தில் தொழில் வளம் மிக்க திருப்பூர் மாவட்டத்தில் எந்த அளவுக்கு தொழிலாளர்கள் உள்ளார்களோ, அதேபோல அதிகஅளவில் முதலாளிகளும் உள்ளனர். காலை முதல் கடின உழைப்பு, மாலைக்கு பிறகு ஓய்வு, நண்பர்களை சந்தித்து கலந்துரையாடுவது என்று பொழுதைக் கழிப்போர் ஏராளம்.
ஆனால், திருப்பூரை பொறுத்தவரை பொதுமக்கள் மாலை நேரங்களில் சந்தித்து அமர்ந்து பேசவோ, கூட்டாக கலந்துரையாடவோ பூங்காக்கள், சாலையோர நடைபாதை அமைப்புகள் பெரிய அளவில் இல்லை. இதன் காரணமாகவோ என்னவோ, திருப்பூர் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மனமகிழ் மன்றங்கள், தோட்டத்து உணவகங்கள், நாட்டு முறையிலான சமையல் செய்யும் அசைவ உணவு விடுதிகளின் எண்ணிக்கை புற்றீசல்போல் அதிகரித்து வருகிறது. ஓய்வு தேவை என்று விரும்புவோர், இதுபோன்ற இடங்களுக்கு சென்று பணத்தை செலவு செய்து பொழுதை கழித்துவருகின் றனர்.
ஆனால், இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, மேற்கண்ட இடங்களில் சிலர் சட்டவிரோத செயல்களை அரங்கேற்றி வருவதாக குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன. சில தினங்களுக்கு முன்பு, திருப்பூர் வீரபாண்டி பகுதியில் செயல்படும் அரசியல் கட்சி பிரமுகருக்கு சொந்தமான மனமகிழ் மன்றத்தில் சூதாட்டம் நடைபெறுவதாக தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், ஒருவரிடம் ரூ.3 ஆயிரம் பணத்தை மாநகர காவல் துறையினர் கொடுத்து உள்ளே அனுப்பியுள்ளனர். அவரது தகவலின்பேரில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவது உறுதி செய்யப்பட்டது. ரூ.1.8 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டதுடன், 47 பேர் கைதாகினர்.
இதுதொடர்பாக திருப்பூர் நுண்ணறிவு பிரிவு போலீஸார் ‘இந்து தமிழ்'நாளிதழிடம் கூறும்போது,
'மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட கோல்டன் நகர், பெருமாநல்லூர் சாலை, மண்ணரை, அனுப்பர்பாளையம், பெருமாநல்லூர் அருகே சில பகுதிகள், முதலிபாளையம் சாலை, விஜயாபுரம் ஆகிய பகுதிகளில் மனமகிழ் மன்றங்கள், இரவு நேர விடுதிகள் செயல்படுகின்றன.
டாஸ்மாக் பார் வைத்து நடத்துவோரே பெரும்பாலும் இதையும் செய்கின்றனர். உள்ளூர் போலீஸாரை சரிகட்டி விடுவதால், விவகாரம் வெளியில் வருவதில்லை. அரசியல் பிரமுகர்களைப் பிடித்து, நேரடியாக சென்னைக்கு சென்று அனுமதி பெற்று வருகின்றனர். மனமகிழ் மன்றங்களில் கேரம் போன்ற விளையாட்டுகளுடன், பணம் வைக்காமல் வெறும் சீட்டு விளையாட்டு என்று கூறி அனுமதி பெறுகின்றனர். அதிலும், உறுப்பினர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவதாக கூறுகின்றனர். ஆனால், விதிகளை யாரும் பின்பற்றுவதில்லை. பணப்புழக்கத்தை குறைத்துவிட்டு, துண்டு சீட்டு முறையை பின்பற்றுகின்றனர். இதனால் பெரிய அளவில் சூதாட்டம் நடைபெற்றாலும் பணம் சிக்குவதில்லை. இவர்கள் இப்படி என்றால், எந்தவித அனுமதியும் இல்லாமல் சிறு வீடுகளை வாடகைக்கு எடுத்தும் சூதாட்டம் நடைபெற்று வருகிறது.
புகார்களை மாநகர், மாவட்ட காவல் துறை தலைமை கவனத்துக்கு கொண்டு சென்றால், அரசியல் தலையீடுகளால் நடவடிக்கைகள் தவிர்க்கப்படுகின்றன' என்றனர். மூட நடவடிக்கை மாநகரக் காவல் ஆணையர் எஸ்.மனோகர் கூறும்போது, ‘மாநகரில்மட்டும் 15 மனமகிழ் மன்றங்கள் வரை செயல்படுகின்றன. பொதுவாக, இவர்கள் தங்களுக்கென நீதிமன்றத்தில் உத்தரவைப் பெற்று வைத்துள்ளனர். அதில், தாங்கள் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதில்லை. சோதனை என்ற பெயரில் போலீஸார் தொந்தரவு செய்வதாக நீதிமன்றத்தில் கூறியுள்ளனர். நீதிமன்றமும் பணம் வைத்து சூதாடுதல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்பாடுகள் நடைபெற்றால் மட்டும் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளது. அதன்பேரில், ஓர் இடத்தில் சோதனைக்கு செல்லும் முன்னர், பல கட்டங்களில் உறுதி செய்ய வேண்டியுள்ளது. இதற்கென தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் மன்றங்கள் மூடப்படும். ஏற்கெனவே, வீரபாண்டி பகுதியில் இதுபோன்ற மனமகிழ் மன்றத்தை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்றார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏ.கயல்விழியி டம் கேட்டபோது, ‘புறநகர் பகுதிகளில் இதுபோன்ற செயல்கள் நடப்பதை கண்காணித்து நடவடிக்கை எடுக்கிறோம். நேற்று முன்தினம் கிடைத்த தகவலின் அடிப்படையில், ஓர் இடத்தில் உடனடியாக ஆய்வு செய்யப்பட்டது. இதுதொடர்பாக, யார் வேண்டுமானாலும் காவல் துறைக்கு தகவல் அளிக்கலாம்' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT