Published : 22 Feb 2019 12:37 PM
Last Updated : 22 Feb 2019 12:37 PM
மதுரையில் தற்போது பிப்ரவரி மாதமே கோடையை மிஞ்சும் வகையில் வெயில் கொளுத்துவதால் மக்கள் வெப்பத்தை தாங்க முடியாமல் அவதியடைந்துள்ளனர்.
தமிழகத்தில் சென்னை, வேலூர், மதுரையில் கோடை காலம் மட்டுமில்லாது சாதாரண நாட்களிலும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். பொதுவாக மார்ச் முதல் மே வரையிலே கோடை காலம் இருக்கும். ஆனால், மதுரையில் கடந்த சில ஆண்டாக மார்ச் மாதம் தொடங்கும் வெயில் அக்டோபர் வரை நீடிக்கிறது.
ஆனால், இந்த ஆண்டு பிப்ரவரி மாதமே வழக்கத்திற்கு மாறாக வெயில் சுட்டெரிக்க ஆரம்பித்துள்ளது. சாலைகளில் கானல் நீர் தெரியும் அளவிற்கு வெயில் அனல் பறக்கிறது.
வாகனங்களில் செல்லும் பெண்கள் வெயிலில் இருந்து தப்பிக்க முகத்தையும், கைகளையும் துப்பட்டா, கையுறையால் மூடிக் கொண்டு செல்கின்றனர். ஆண்கள், ஹெல்மெட் போட்டியிருந்தாலும் தொடர்ந்து வெயிலில் வாகனங்களை ஓட்ட முடியவில்லை. வியர்த்துக் கொட்டி மயக்கம் ஏற்படுகிறது.
அதனால், வெயிலில் இருந்து தப்பிக்கவும், தொடர்ந்து வாகனங்களை ஓட்டவும், குளிர்பானங்கள் சாப்பிட வேண்டிய உள்ளது. அதனால், சாலையோரங்களில் கோடை காலத்தைப்போல் தர்பூசணி, மோர், ஜூஸ், ஜிகர்தண்டா விற்பனை களைகட்ட ஆரம்பித்துள்ளது.
மதுரை சாலைகள் மிக குறுகலாவும், நெரிசல் மிகுந்ததாகவும் உள்ளது. நிழல் தரும் மரங்கள் இல்லை. சாலையோரங்களில் கான்கீரிட் கட்டிடங்கள் இடைவெளி இல்லாமல் அதிகரித்துவிட்டன. வாகன வாகன ஓட்டிகள் ஒவ்வொரு போக்குவரத்து சிக்னலையும் கடக்க குறைந்தப்பட்சம் 10 முதல் 15 நிமிடங்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இந்த நேரத்தில் வாகன ஓட்டிகள் வியர்வையில் நனைந்து உடல் பிசுபிசுக்கிறது.
நகர்ப்புறங்களில் மோர், ஜூஸ், ஜிகர்தண்டா உள்ளிட்ட பல்வேறு வகை குளிர்பானங்கள் விற்பனை அதிகரித்துள்ளது. அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயிலை விட அதிகமாக கொளுத்தும் இந்த வெயிலுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் மக்கள் பகல் நேரங்களில் அலுவலகங்கள், வீடுகளில் முடங்கி விடுகின்றனர்.
தோலில் பல்வேறு சரும நோய்கள் ஏற்பட்டு குழந்தைகள், முதியவர்கள் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தோல் பாதிப்பு, கண் எரிச்சல் உள்ளிட்ட வெயில் பாதிப்பு நோய்களுக்கு சிகிச்சைக்கு வருவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மதியம் நேரம் சாலைகளில் கானல் நீர் தெரியும் வகையில் வெயில் மக்களை வாட்டி வதைக்கிறது. இரவில் வெயிலின் தாக்கத்தால் புழுக்கம் மக்களை தூங்க விடாமல் பெரும் அவஸ்த்தைப்படுத்துகிறது.
மதுரையில் கடந்த காலத்தில் சாலையின் இரு புறமும் மரங்கள் அடர்த்தியாக காணப்படும். தற்போது சாலை விரிவாக்கம், கான்கீரிட் கட்டிடங்கள் அதிகரிப்பு, நீர் நிலை ஆதாரங்கள் பராமரிப்பு இல்லாமை, வாகனங்களில் இருந்து வெளியே புகை போன்றவற்றால் மதுரையில் வெப்பமும் அதிகரிப்பிற்கு முக்கியக் காரணம் என்று அறிவியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
கடந்த ஆண்டை விட 2 டிகிரி கூடுதல்
காமராஜர் பல்கலை ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் துறை தலைவரும், முன்னாள் பெரியார் பல்கலை துணை வேந்தருமான முத்துசெழியன் கூறுகையில், ‘‘2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சராசரி மாத வெப்பநிலை 32 டிகிரியாக இருந்தது. அதிகப்பட்சமாக 34 டிகிரியை எட்டியது.
ஆனால், இந்த ஆண்டு 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முடிவதற்கு முன் சராசரி வெப்பநிலை 35 டிகிரியாக உள்ளது. கடந்த ஆண்டை விட 2 டிகிரி கூடுதலாக உள்ளது. அதிகபட்சமாக தற்போது 37 டிகிரி வரை வெப்பம் உள்ளது. இந்த வெப்பநிலை தொடர்ந்து மார்ச் மாதத்திற்கு 40 டிகிரியை எட்டும் என்று கணக்கீடப்பட்டுள்ளது.
இதற்குக் காரணம், கடந்த காலங்களை விட இந்த ஆண்டு சூரிய ஒளியில் இருந்து வரக்கூடிய புறஊதா கதிர்கள் தாக்கம் 4 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும், உறைப்பனி வெப்பம் குறைவாக இருப்பதால் வெப்பநிலை அதிகரித்துள்ளது. முன்பு தாமதமாக பொழுது விடியும். விரைவாக பொழுது அடைந்துவிடும்.
தற்போது அதிகாலையில் 5.30 மணிக்கெல்லாம் பொழுது விடிந்துவிடுகிறது. அதுபோல் 6.30 மணிக்கு மேல்தான் பொழுது அடைகிறது. அதனால், சூரிய வெளிச்சம் 8 மணி நேரம் என்பதற்கு பதிலாக சூரிய வெளச்சம், 12 மணி நேரம் வரை சூரிய வெளிச்சம்படுவதால் இயல்பாகவே பூமியின் வெப்பமும் அதிகரித்துள்ளது, ’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT