Published : 11 Feb 2019 11:43 AM
Last Updated : 11 Feb 2019 11:43 AM
காலையில `இந்து` பேப்பரும், காபி டம்ளரும் இல்லாம எங்களுக்குப் பொழுது விடியாது என பலரும் சொல்லக் கேட்டிருப்போம். நல்ல காபியைத் தேடி பல கிலோமீட்டர் சுற்றியலைந்தவர்களெல்லாம் உண்டு. காபி என்பது வயிற்றை நிரப்பும் பானம் மட்டுமல்ல. நல்ல ரசனையின் அடையாளம். தூக்கலான கசப்பும், மிதமான இனிப்பும்தான் நல்ல காபியின் அடையாளம். பித்தளை டபராவில் சூடாக நுரைத்துப் பொங்கும் காபியைப் குடித்த பின், நீண்டநேரம் நாக்கிலும், மனசிலும் தங்கியிருக்கும் அதன் ருசி. கும்பகோணம் டிகிரி காபிக்காகவே, வெளியூர்களில் இருந்தெல்லாம் அந்த ஊரைத் தேடிச் சென்றவர்கள் அதிகம். இப்போது, தமிழகத்தின் பல பகுதிகளிலும் `கும்பகோணம் டிகிரி காபி` என்ற விளம்பரத்துடன் காபிக் கடைகள் முளைத்துவருகின்றன.
தமிழகத்தைப் பொறுத்தவரை , காபி விளையும் பகுதிகளில் முதன்மையானது ஏற்காடு. கிழக்குத் தொடர்ச்சி மலையில், இயற்கை எழில்கொஞ்சும் சேர்வராயன் மலைத்தொடரில் கடல் மட்டத்திலிருந்து 5,300 அடி உயரத்தில் பரந்து விரிந்துள்ளது ஏற்காடு. இது சுற்றுலாத் தலமாக மட்டுமின்றி, இந்திய அளவில் காபி உற்பத்தியில் முக்கியப் பங்காற்றி வருகிறது.
ஏற்காட்டில் ஆண்டு முழுவதும் குளுமையான சீதோஷ்ண நிலை நிலவுவதால், காபி உற்பத்தி அமோகம். அரேபிக்கா, ரொபஸ்டா ஆகிய இரண்டு வகையான காபி பயிர் இங்கு விளைகிறது. அதிக அளவு அரேபிக்கா வகை காபிதான் விளைவிக்கப்படுகிறது. இங்கு விளையும் காபிக்கு, உலக அளவில் வர்த்தக வரவேற்பு அதிகம்.
கடந்த 2016-17-ல் ஏற்காட்டில் அரேபிக்கா 3,200 டன், ரொபஸ்டா 70 டன் உற்பத்தியானது. 2017-18-ல் அரேபிக்கா 3,110 டன்னும், ரொபஸ்டா 60 டன்னும் உற்பத்தியானது. காபி தோட்டத்தில் ஊடுபயிராக மிளகு வளர்க்கப்படுவதால், விவசாயிகள் இரட்டிப்பு லாபம் ஈட்டுகின்றனர்.
இந்தியாவில் பயிராகும் காபி, சர்வதேச அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தியாவில் ஆண்டுதோறும் 3 லட்சம் டன் காபி உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 2.20 லட்சம் டன் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்தியாவில், காபி ஏற்றுமதி மூலம் ஆண்டுக்கு சராசரியாக ரூ.2,500 கோடி அந்நிய செலாவணி ஈட்டப்படுகிறது. காபி தொழிலை மேம்படுத்த விவசாயிகளுக்கு மானியக் கடனுதவி திட்டம் மூலம், நவீனத் தொழில்நுட்ப உபகரணங்கள் வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
ஏற்காடு, சேர்வராயன் மலை, கொல்லிமலைப் பகுதிகளில் அதிக அளவு காபி விவசாயிகள் உள்ளனர். ஏற்காட்டில் 5100 ஹெக்டேர் பரப்பில் காபி பயிரிடப்பட்டுள்ளது. ஆண்டுக்கு சராசரியாக 3,000 முதல் 3,500 டன் வரை காபி உற்பத்தி செய்யப்படுகிறது.
காபி தோட்டத் தொழிலில் சுமார் 2,200 விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். கொல்லிமலையில் 736 ஹெக்டேர் பரப்பில் காபி விவசாயம் நடைபெறுகிறது. அங்கு, ஆண்டுக்கு சராசரியாக, 400 டன் முதல் 500 டன் வரை காபி உற்பத்தி செய்யப்படுகிறது. சேர்வராயன் மலை, கொல்லி மலைகளில் 5,836 ஹெக்டேரிலும், கல்வராயன் மலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருச்சி ஆகிய இடங்களில் 142 ஹெக்டேர் பரப்பிலும் காபி உற்பத்தி செய்யப்படுகிறது.
தற்போது காபி கிலோ ரூ.130 முதல் ரூ.140 வரை விற்பனை செய்யப்படுகிறது. உற்பத்தியைக் காட்டிலும், தேவை கூடுதலாக உள்ளதால் வரும் மாதங்களில் காபி விலை கிலோ ரூ.145 வரை உயரக்கூடும் என விவசாயிகள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். காபி தொழில் லாபகரமானதாக உள்ளதால், இத்தொழிலில் ஈடுபடும் விவசாயிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது.
மானிய கடனுதவி திட்டம்
காபி வாரிய முதுநிலை தொடர்பு அதிகாரி ஸ்ரீதேவி கூறும்போது, "காபி விவசாயிகளுக்கு வாரியம் மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. மறுநடவு செய்ய, கிணறு வெட்ட உதவப்படுகிறது. மானிய விலையில், நீர்ப்பாசனத்துக்குத் தேவையான உபகரணங்கள், களை எடுக்கும் இயந்திரம், குழி பறிக்கும் இயந்திரம், மர அறுப்புக் கருவி ஆகியவை மானியக் கடனுதவித் திட்டம் மூலம் வழங்கப்படுகின்றன. மார்ச் மாதம் வரை இந்த திட்டம் செயல்படுத்தப்படும். 25 ஏக்கருக்கு குறைவாக உள்ள காபி தோட்ட விவசாயிகள் மட்டுமே, மானிய கடனுதவித் திட்டத்துக்கு தகுதியுடையவர்கள்" என்றார்.
காபி பயிரிட்ட ஆட்சியர்...
சேலம் மாவட்டத்தின் ஆட்சியராக இருந்த காக்பர்ன் (1820-1829) சேர்வராயன் மலையில் குடியேறினர்.
இந்த மலைத்தொடரில் விளையக்கூடிய பயிர்கள் குறித்து ஆய்வு செய்த அவர், முதல்முதலாக வெளிநாட்டில் இருந்து கொண்டு வந்திருந்த காபி, ஆப்பிள், பியர்ஸ், லாக்குவட்ஸ் முதலியவற்றைப் பயிரிட்டு, சோதனைகளை நடத்தினார். இதில் காபி பயிர் மட்டுமே அமோக விளைச்சல் தந்தது. சிறந்த தட்பவெப்ப நிலை கொண்ட சேர்வராயன் மலைத்தொடர் முழுவதும் தற்போது காபி தோட்டங்களாக மாறி, விவசாயிகளுக்கு வருமானத்தை அளிக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT