Published : 26 Feb 2019 10:44 AM
Last Updated : 26 Feb 2019 10:44 AM
கோவை சூலூரிலிருந்து தெற்கே மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ளது காசிகவுண்டன்புதூர் கிராமம். இந்த ஊருக்கென இருக்கும் பிரபல்யம் நடிகர் சிவகுமார். வாலிப வயதிலேயே அழகன் முருகனாக சினிமாவில் அவதாரமெடுத்து, பல நூறு திரைப்படங்களில் நடித்து மாபெரும் பிரபல்யம் அடைந்திருந்தாலும், அவரது இடைவிடாத தேடலை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
சென்னையில் இருந்தாலும், கொங்கு மண்ணுடனும், மக்களுடனும் கலந்திருக்கிறார். கொங்கு மண்ணின் மொழியைப் பேசும் கிராமத்துவாசியாக, எழுத்தாளராக, புராண, இதிகாசக் கதைகளின் சொற்பொழிவாளராக... இன்னும் எத்தனையோ அவதாரங்கள் அவர் கலந்து கொள்ளும் வெவ்வேறு நிகழ்வுகளிலும் பரிணமிக்கிறது.
இயல், இசை, நாடகம் என அவர் எதற்குள் நுழைந்து வெளியே வந்தாலும், அவருக்குள் கிளர்ந்தெழும் ஓவியக் கலைஞன் எப்போதுமே விழித்துக் கொண்டேயிருக்கிறான்.
கோவையில் சமீபத்தில் நடந்த ஆர்.பி.பாஸ்கரனின் ஓவியக் கண்காட்சியில் கலந்து கொண்டவரிடம் “நவீன ஓவியங்கள் நம் மக்களுக்கு எளிதில் புரிபடுவதில்லையே ஏன்?” என்று கேட்டோம்.
“காலங்களில் அவள் வசந்தம்; கலைகளிலே அவள் ஓவியம் என ஓவியத்தின் சிறப்பைப் பற்றி கண்ணதாசன் சொல்லியிருக்கிறார். கலைகளில் ஓவியம் போன்ற சிறப்பான கலை எதுவுமில்லை. இந்திய வரலாற்றில் கி.மு. 6-ம் நூற்றாண்டு முதல் 2-ம் நூற்றாண்டு வரை அஜந்தா குகை ஓவியங்களும், எல்லோராவின் 36 சிற்பங்களும் உலக வரலாற்றில் அழியா இடம்பெற்றுள்ளன. அதற்குப் பிறகு பெரிய இடைவெளி.
ராஜராஜ சோழன் எல்லா கலைகளையும் வளர்த்துள்ளார். பிறகு, தஞ்சாவூர் சித்தன்னவாசல் ஓவியங்களை சொல்லலாம். அப்புறம் ஓவியங்கள் வளரவேயில்லை. 150 ஆண்டுகளுக்கு முன் நமக்கு இந்த ஓவியத்தைக் கொண்டுவந்தவர் ராஜா ரவிவர்மா. லட்சுமி, பார்வதி, சரஸ்வதி, முருகன், ராமன், ராவணன், சிவன் என நம் புராண பாத்திரங்களுக்கெல்லாம் வடிவம் கொடுத்தவர் அவர். அதிலிருந்துதான் இங்கே படிப்படியா வளர்ந்தது ஓவியக் கலை.
வெளிநாடுகளில் ஓவியத்துக்கு மறுமலர்ச்சி காலம் 16-ம் நூற்றாண்டுதான். அதற்கு முன்னால் பைபிள் ஓவியங்கள்தான். 1,577-ல் பீட்டர்பால் ரூபர்சன் என்பவர் இயேசுநாதரின் கை, கால்களில் ஆணி அடித்து, சிலுவையில் மாட்டும் ஓவியத்தை உயிரோட்டமாய் வரைந்துள்ளார். அது மிகத் தத்ரூபமா இருக்கும். என்னுடைய ஆசிரியரே அவர்தான்.
1606-ல் நெதர்லாந்தைச் சேர்ந்த ரம்ரன், ஓவியக் கலையில் சிறந்து விளங்கினார். 19 வயதில் ஸ்டுடியோ தொடங்கி, 21 வயதில் மாஸ்டராகிவிட்டார். போர்ட்ரெய்ட் பெயின்டிங் என்பது முகத்தை வரைவது. உலகத்திலேயே முகத்தை வரைந்ததில் சிறந்தவர் ரம்ரன்தான். அதற்குப் பிறகு புகைப்படக் கருவி வர, ஓவியக் கலைஞர்கள் பயந்துவிட்டனர்.
கொடைக்கானல் ஏரியில் ஒரு பலகை வைத்துக்கொண்டு, ஏரி, தண்ணீர், படகு, ஏரிக் கரையில் நடக்கும் குதிரையை மாதக் கணக்கில் வரைந்த சூழலில், ஒரு கேமரா அத்தனை காட்சிகளையும் நொடிப் பொழுதில் தத்ரூபமாய் படமெடுக்கும். இதனால், ஓவியக் கலைஞர்கள் கலங்கிப் போனார்கள்.
அப்போதுதான் `இம்ப்ரசிஸம்` ஸ்டைல் ஓவியத்தில் புகுந்தது. இந்த ஓவியத்தை அருகிலிருந்து பார்த்தால், புள்ளி, புள்ளியாகத் தெரியும். தொலைவிலிருந்து பார்த்தால் உருவம் தெரியும். இந்த இம்ப்ரசிஸம் ஸ்டைல் ஓவியத்தில், பிராடி மோனே, எட்வர்டு பேனேட், எட்வர் டெகாஸ், ஹால்கர்ட்டா போன்றவர்கள் 1830 முதல் 1850 வரை உலகப் பிரசித்திப் பெற்றவர்களாக இருந்தனர்.
1853-ல் எக்ஸ்பசலிஸம் ஓவிய ஸ்டைலை, வின்சென்ட் வேன்கோ பிரபலப்படுத்தினார். அவர் படம் வரையும்போது 24 வயது. நவீன பெயின்டிங்கில் உலகிலேயே முன்னோடி அவர்தான். 1881-ல் மேப்லோ பிகாஸோ வருகை. 91 ஆண்டுகள் வாழ்ந்த அவரை, பெயின்டர், ஸ்கப்லர், பிரின்ட் மேக்கர், ஸ்டேஜ் டிசைனர் எனலாம். கவிதை, நாடகம்கூட எழுதுவாராம்.
அந்த பிகாஸோவின் வழித்தோன்றல்கள்தான் இப்போதிருக்கிற நவீன ஓவியர்கள். இந்த பாஸ்கர், நான் எல்லாம் பிகாயஸோவோட 3, 4-வது தலைமுறை ஓவியர்கள்.
நவீன (மாடர்ன்) ஓவியங்கள் ஏன் நமக்குப் புரியலை என்றால், தமிழ்நாட்டில் இடைப்பட்ட காலத்தில் ஓவியக்கலை வளரவேயில்லை. எந்த ஒரு விஷயத்தை எடுத்தாலும் படிப்படியான வளர்ச்சி என்பது முக்கியம். நாம் இன்னும் கட்டை வண்டியில்தான் இருக்கிறோம். திடீரென ராக்கெட் விடும்போது எதுவும் புரிவதில்லை. இடைக்காலத்தில் ஓவியங்களுடன் பிணைப்பு இல்லாமல் இருந்த மக்களுக்கு, இந்த ஓவியங்களை புரிந்துகொள்ள முடியவில்லை” என்றார்.
கத்தரிகாய் வரைவதல்ல...
கோவையில் நடிகர் சிவகுமார் திறந்துவைத்த ஆர்.பி.பாஸ்கரனின் ஓவியங்கள் அத்தனையும் நவீன ஓவியங்கள்தான். அதில் அவர் 1969-ல் வரைந்த முருகு ‘வேல்’ ஓவியம், உலகளவில் அவருக்குப் பிரபல்யத்தைத் தேடித்தந்த `பூனை ஓவியம்` போன்றவற்றில் பார்வையாளர்கள் லயித்திருந்ததைக் காணமுடிந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக , இளையராஜாவின் கவிதை நூலுக்கு வரைந்த நவீன ஓவியங்களை தனிக் கூடத்திலே முழுமையாக காட்சிப்படுத்தியிருந்தார்.
சிவகுமாரும், பாஸ்கரும் சென்னை ஓவியக் கல்லூரியில் ஒருவருடம் முன்பின்னாக ஒன்றாகப் படித்தவர்கள். கும்பகோணம் ஓவியக் கல்லூரியில் 4 வருடம், சென்னை ஓவியக் கல்லூரியில் 4 வருடம் முதல்வராகவும் இருந்திருக்கிறார் பாஸ்கர். டெல்லி லலித் கலா அகடாமி தலைவராகவும் 2001முதல் 2007 வரை இருந்துள்ளார்.
“சிவகுமார் மட்டுமல்ல, ஓவியர்கள் ஆதிமூலம் தட்சிணாமூர்த்தி, ஹரிதாசன் என தமிழ்நாட்டின் தலைசிறந்த நவீன ஓவியர்கள், என்னோட ஒண்ணாப் படிச்சவங்கதான். மாடர்ன் ஆர்ட் தமிழ்நாட்டில் புரியாததற்கு காரணம் இங்குள்ள கல்வித்தரம்தான். இங்கே ஓவியப் பாடத்தை யார் சரியா சொல்லிக் கொடுக்கிறாங்க? ஓவியத்தின் சரித்திரத்தையாவது சொல்லித் தர்றாங்களா? ஓவியத்துக்கு அடிப்படை, கத்தரிக்காய் வரையறதில்லை. ஒரு மனிதனைப் பார்த்தா, அவன் முகம், கண், காது, மூக்கு, வாய், அதன் கோணல் எல்லாவற்றையும் கலையாக நேசிக்கத் தெரியணும். அதிலிருந்து ஒரு மனிதனை, மனிதனாகப் படைக்கக்கூடிய சக்தி வரணும். அதற்கான சிந்தனை இருந்தால்தான் ஓவியக்கலை சாத்தியமாகும்.
எனக்கு ஓவியம் வரக் காரணமாயிருந்தவர் என் தாய் மாமன் நமசிவாயம். ஸ்டுடியோ வச்சிருந்தார். எம்ஜிஆரை வச்சு விக்கிரமாதித்தன் படம் எடுத்தவர் அவரே. அவர்கிட்ட எட்டு வயசில பிரஸ் கழுவிகிட்டு இருந்தவன் நான். இன்று இன்டர்நெட் இருக்கு. ஓவியம் கத்துக்கிற வேலையை சுலபமாக்கியிருக்கு. ஆனா அதை பழகறதுக்கு அக்கறையும் நம்பிக்கையும் வேணும்.
என் மாணவர் ஞானம், கோவையில் ஓவியப் பயிற்சிப் பள்ளி நடத்தி வருகிறார். அதன் கிளையை சாய்பாபா காலனியில் தொடங்கியுள்ளார். அதை தொடங்கிவைக்க என்னை அழைத்தார். வெறுமனே அதை செய்வதுடன், இப்படியொரு ஓவியக் கண்காட்சியையும் ஏற்படுத்த கேட்டுக் கொண்டார்கள். செய்திருக்கிறேன். நான்கு நாட்களில் நிறைய மனிதர்கள் கண்டு ரசித்தனர். ஓவியக்கலை மக்கள் மத்தியில் உள்ளூர வேர்விட்டு நிற்கிறது என்பதை அறியும்போது மகிழ்ச்சியாக உள்ளது” என்றார் பாஸ்கர் பெருமிதத்துடன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT