Published : 01 Apr 2014 11:16 AM
Last Updated : 01 Apr 2014 11:16 AM

சேது சமுத்திர திட்டத்தை ஜெ. எதிர்ப்பது ஏன்?- மு.க.ஸ்டாலின் கேள்வி

சேது சமுத்திர திட்டம் தேவை என 2004 நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில் அறிவித்த ஜெயலலிதா, தற்போது அத்திட்டத்தை எதிர்ப்பது ஏன் என திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

உடுமலைப்பேட்டை திமுக பொதுக்கூட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஸ்டாலின் பேசியது:

தமிழகத்தில் ஆளுங்கட்சி வேட்பாளர்களால் பல தொகுதிகளுக்குள் செல்ல முடியவில்லை. 3 ஆண்டுகளாக எந்தப் பணியும் நடைபெறவில்லை. அண்ணாவின் கனவுத் திட்டமான சேதுசமுத்திர திட்டத்துக்கு 150 ஆண்டு கால வரலாறு உண்டு. தமிழகத்துக்கு மட்டுமல்ல; அது, இந்தியாவுக்கு பயனளிக்கக்கூடிய திட்டம்.

சேது சமுத்திர திட்டத்தால், மீனவர்கள் வாழ்வதாரமும் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படும் என்று ராமநாதபுரத்தில் ஜெயலலிதா பேசியுள்ளார். 1991, 2001 சட்டமன்றத் தேர்தல்கள், 2004 நாடாளுமன்றத் தேர்தலில் சேது சமுத்திர திட்டம் தேவை என அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டின் ஒட்டுமொத்த தொழில்மேம்பாட்டுக்கு சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுப்பதாக 2004ல் தேர்தல் அறிக்கை வாயிலாக சொன்னவர் ஜெயலலிதா. தற்போது மாறுவதற்கு என்ன காரணம்? சேது சமுத்திர திட்டத்தை பாஜகவும் எதிர்க்கிறது. ஆக, பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் மறைமுகத்தொடர்பு உள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x