Published : 08 Feb 2019 11:00 AM
Last Updated : 08 Feb 2019 11:00 AM

உயிர்காக்கும் உன்னத சேவை- 108 எக்ஸ்பிரஸ் காரிடார்

பத்து நிமிஷத்துக்கு முன்னாலே கொண்டு வந்திருந்தா காப்பாத்தியிருக்கலாம்" மருத்துவமனையில் இந்த வார்த்தைகளை அடிக்கடி கேட்கலாம். விபத்தில் படுகாயம், மாரடைப்பு, விஷம் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்படும் நோயாளிகளை குறிப்பிட்ட நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டுசெல்வதை ‘கோல்டன் ஹவர்’ என்று சொல்வார்கள்.

மருத்துவர்களும், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களும் இந்த ‘கோல்டன் ஹவரின்’ முக்கியத்துவத்தை உணர்ந்தவர்கள்.  பெருகி வரும் வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தாண்டி, உயிருக்குப் போராடும் நோயாளியை உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டுசெல்வது ஒவ்வொரு ஆம்புலன்ஸ் ஓட்டுநரின் சாகசமாகவே தொடர்கிறது.

இந்த நிலையில், உயிர்களைப் பாதுகாக்க  108 ஆம்புலன்ஸ் சேவை, காவல் துறை மற்றும் பொதுமக்களோடு இணைந்து ‘108 எக்ஸ்பிரஸ் காரிடர்’ என்ற முயற்சியை முன்னெடுத்துள்ளார் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.பி. சக்திகணேசன். இதற்காக, காவல் அதிகாரிகள், 108 ஆம்புலன்ஸ் ஒருங்கிணைப்பாளர்கள், மருத்துவ அலுவலர்கள் என பலரையும் இணைத்து ‘108 எக்ஸ்பிரஸ் காரிடார் ' என்ற  வாட்ஸ்-அப் குழு உருவாக்கப்பட்டுள்ளது.

ஓரிடத்தில் விபத்து நேரிட்டவுடன், 108 ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வரும். தொடர்ந்து, விபத்து நடந்த பகுதிக்கு ஆம்புலன்ஸ் சென்று, நோயாளியை உடனடியாக மருத்துவமனையில் சேர்க்க இக்குழு உதவுகிறது. இதில் காவல் துறையின் பங்கு முக்கியமானது.

விபத்து நடந்த இடம், அவசர சிகிச்சைக்காக ஆம்புலன்ஸில் ஏற்றப்படும் நோயாளியின் பெயர், ஆம்புலன்ஸ் புறப்படும் இடம், சென்று சேரும் இடம் உள்ளிட்ட விவரங்களை  ஆம்புலன்ஸ் ஓட்டுநர்,  வாட்ஸ்-அப் குழுவில் பதிவு செய்வார். பாதிக்கப்பட்ட நபரை ஏற்றிக்கொண்டு ஆம்புலன்ஸ் வருவதை செல்போன் மூலம் அந்தப் பகுதி காவல் அதிகாரியிடம் தெரிவிப்பார்கள். போலீஸ் மைக் மூலமாக அனைவரும் அலர்ட் செய்யப்படுவார்கள். ஆம்புலன்ஸ் புறப்படும்  இடத்திலிருந்து, மருத்துவமனைக்குச் செல்லும் சாலைகளில் உள்ள போக்குவரத்து நெரிசல் ஒழுங்குபடுத்தப்படும்.

முக்கியமான சாலை சந்திப்புகள் மற்றும் போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதிகளில்,  ஆம்புலன்ஸ் வரும் முன்பாகவே, காவல் துறையினர் ஒலிபெருக்கி மூலம் ‘ஆம்புலன்ஸ்  வருகிறது’ என்ற அறிவிப்பை வெளியிடுவர்.  இதன்மூலம் குறிப்பிட்ட இடத்தில் உள்ள வாகன ஓட்டிகள், பாதசாரிகள் சாலையின் இடதுபுறம் ஒதுங்கி, வலதுபுறமாக 108 ஆம்புலன்ஸ் விரைந்து செல்ல ‘எக்ஸ்பிரஸ் ஃப்ரீ வே (express free way)' என்ற வழியை உருவாக்கித் தருகின்றனர். இதன் மூலம் குறிப்பிட்ட நேரத்தில் மருத்துவமனைக்குச் சென்று சேருவதால், நோயாளியின் உயிர் காக்கப்படுகிறது.

இதுகுறித்து காவல் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, "வழக்கமாக விஐபி-க்கள் வரும்போது, சாலை சந்திப்புகளில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதில் காவல் துறை ஈடுபடும். தற்போது, சாதாரண மனிதரின் உயிரைக் காப்பதற்காக இந்த திட்டத்தை எஸ்.பி. அறிமுகப்படுத்தியுள்ளார். ஈரோடு நகரின் பெரும்பாலான சாலைகள் பல்வேறு பணிகளுக்காக தோண்டப்பட்டுள்ள நிலையில், கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது.  இதற்கிடையே, ஒரு ஆம்புலன்ஸை விரைவாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சி அளவிட முடியாதது’ என்றார்.இந்த திட்டம் தொடங்கப்பட்ட பின், ஈரோடு அரசு மருத்துவமனைக்கு நோயாளியைக் கொண்டுசெல்லும் நேரம் ஈரோடு நகர்ப் பகுதிகளில் 12.35 நிமிடத்திலிருந்து 9.56 நிமிடமாகக் குறைந்துள்ளது. ஊரகப் பகுதிகளில் 15.18 நிமிடங்களிலிருந்து 13.23 நிமிடமாகக் குறைந்துள்ளது.

‘ஹலோ சீனியர்ஸ்’

இதேபோல, ஈரோடு மாவட்ட காவல் துறையின் மற்றொரு திட்டம் ‘ஹலோ சீனியர்ஸ்’.  பொங்கலின்போது தொடங்கப்பட்ட இத்திட்டம், முதியோருக்கு அரணாக இருந்து பாதுகாத்து வருகிறது. இதில், முதியோர் தங்களது புகார்கள் மற்றும் கோரிக்கைகளை தெரிவித்து உதவி பெற 96558 88100 என்ற பிரத்யேக எண் ஒதுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு மற்றும் இதர உதவிகளுக்காக இந்த எண்ணில் தொடர்புகொள்ளும் முதியோருக்கு உதவ,  காவல் துறையினர் தயாராக உள்ளனர்.

மாவட்டத்தில் உள்ள 36 காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் 8,281 முதியோர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. முதியோர்களின் இருப்பிடம் தொடர்பான தகவல்கள் தனி பதிவேடுகள் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. முதியோரிடருந்து பெறப்படும் கோரிக்கைகள், அவற்றின் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளை முறையாகப் பதிவு செய்யும் வகையில் திட்டத்தை வடிவமைத்துள்ள எஸ்.பி. சக்திகணேசன், இந்தப் பிரிவை தனது நேரடிக் கண்காணிப்பில் வைத்து, நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வருகிறார்.ஹாலோ சீனியர்ஸ் திட்டத்தில் இதுவரை 100-க்கும் மேற்பட்ட அழைப்புகள், கோரிக்கைகள்வந்துள்ளன. குடும்பத் தகராறு, சொத்து தகராறு,திருட்டு, ஏமாற்றுதல் என பல்வேறு கோரிக்கைகளை எதிர்கொள்ளும் காவல் துறையினர், அதற்கான தீர்வுகளை உடனுக்குடன் தருகின்றனர். வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் இதில் புகார் அளித்துள்ளனர் என்பது, திட்டத்தின் தேவையை வெளிப்படுத்துகிறது.

காவல் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, "விழுப்புரம் மாவட்டத்திலிருந்து மருத்துவ உதவி கோரியும், கரூர் மாவட்டத்திலிருந்து விதவை உதவித்தொகை கோரியும்கூட அழைப்புகள் வந்தன. அந்தந்த துறை அலுவலர்களை அணுகி, முதியோரின் குறைகளைத் தெரிவித்து, உரிய தீர்வு காணப்பட்டுள்ளது. கடும் பணிகளுக்கு இடையே, முதியோரின் கோரிக்கைகளைத் தீர்த்துவைத்து, அவர்களிடம் வாழ்த்து பெறும்போது மனம் நிறைவடைகிறது" என்றார். இது தவிர, ஈரோடு மாவட்ட காவல் நிலையங்களில் மனுக்களை பெற வரவேற்பாளர்கள், புகார் அளிக்க வருவோருடன் வரும் குழந்தைகள் விளையாட தனி பகுதி, பொம்மைகள், மாற்றுத் திறனாளிகள் வருவதற்கு தனி சரிவு பாதை, கிராம மக்களுக்கான பிரத்தியேக “காவல் சேவை உங்கள் வாயிலில்” என்ற திட்டம் ஆகியவை மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

5 நாளில் 100-க்கும் மேற்பட்ட அழைப்புகள்

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன் கூறும்போது, "மக்களுக்கும், காவல்துறைக்கு மிடையே உள்ள இடைவெளியைக் குறைக்க, காவல் துறைத் தலைவரின் அறிவுரையின்பேரில், பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. ஒருநாள் நான் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸ் வாகனம் சிக்கியிருந்ததைத் பார்த்தேன். உடனே, எனது காரிலிருந்த சைரனை ஒலிக்கவிட்டு, போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்தி, 108 ஆம்புலன்ஸுக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்தேன். ஒவ்வொரு முறையும் நானே களமிறங்க முடியாதே? எனவேதான், ‘108 எக்ஸ்பிரஸ் காரிடார்’ திட்டத்தைக் கொண்டுவந்தோம். ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், பொதுமக்கள் ஒத்துழைப்போடு இந்த திட்டம் வெற்றி பெற்றுள்ளது. இதேபோல, பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ளும் முதியோர், காவல் நிலையங்களை அணுகுவதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன. எனவே, அவர்களை நாமே அணுகலாமே என்ற நோக்கில் ‘ஹலோ சீனியர்ஸ்’ திட்டம் கொண்டு வந்தோம். 15 நாளில் 100-க்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்ததன் மூலம், முதியோருக்கு காவல் துறையின் தேவை இருப்பது தெரியவந்துள்ளது. இதற்குக் கிடைத்த பாராட்டுகள் முழுவதும், ஆத்மார்த்தமாக பணியாற்றி வரும் ஒட்டுமொத்த காவல் துறையினருக்கு உரியது" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x