Last Updated : 25 Feb, 2019 08:21 AM

 

Published : 25 Feb 2019 08:21 AM
Last Updated : 25 Feb 2019 08:21 AM

வனப்பகுதியில் நீர் நிலைகள் வறண்டதால் தவிக்கும் விலங்குகள்: தண்ணீர் தொட்டிகளை நிரப்பும் பணி தொடக்கம்

செங்கல்பட்டு மற்றும் திருப்போரூர் வனப்பகுதிகளில் உள்ள நீர் நிலைகள் மழையில்லாமல் வறண்டதால், வன விலங்குகளின் குடிநீர் தேவைக்காக, டேங்கர்களில் தண்ணீர் கொண்டு சென்று வனப்பகுதிகளில் உள்ள தண்ணீர் தொட்டிகளை நிரப்பும் பணிகளை வனத் துறை தொடங்கியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு பகுதியில் 7,285 ஏக்கர், திருப்போரூர் பகுதியில் 5,350 ஏக்கர் பரப்பளவில் வனப்பகுதிகள் மற்றும் மலைகள் அமைந்துள்ளன. இங்கு, சிறுத்தை, மான் இனங்கள், கழுதை புலி, நரி, மயில்உட்பட பல்வேறு விதமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. வன விலங்குகளுக்கு ஆபத்து ஏற்படாமல் இருப்பதற்காக, மேற்கண்ட வனப்பகுதிகளில் வனத் துறையினர் சுழற்சிமுறையில் ரோந்துப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் பருவமழை பெய்வது பெரிதும் குறைந்துள்ளதால், கிராமப் பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் வறண்டு வனப் பகுதிகளிலும் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால், வன விலங்குகள் குடிநீருக்காக ஊருக்குள் புகுந்து கிராம மக்களை அச்சுறுத்தும் நிலை உள்ளதாக கூறப்படுகிறது.

வனப் பகுதிகளில் விலங்குகளின் தண்ணீர் தேவைக்காக கசிவுநீர் குட்டை மற்றும் குடிநீர் தொட்டிகளை வனத் துறை ஆங்காங்கே அமைத்துள்ளது. இந்நிலையில், நடப்பாண்டும் மழையளவு பெரிதும் குறைந்துள்ளதால் கசிவுநீர் குட்டைகள் உட்பட வனப் பகுதியின் நீர் நிலைகள் வறண்டு காணப்படுகின்றன.

இதனால், வனவிலங்குகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக, வனப்பகுதிகளில் உள்ள தண்ணீர் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணிகளை வனத் துறை தொடங்கியுள்ளது.

இதுகுறித்து, திருப்போரூர் வனச்சரகர் நரசிம்மன் கூறியதாவது:வனப் பகுதிகளிலும் மழையளவு குறைந்துள்ளதால் வனங்களில் உள்ள நீர்நிலைகள் வறண்டு காணப்படுகின்றன. அதனால், வன விலங்குகள் குடிநீருக்காக ஊருக்குள் புகும் நிலை ஏற்பட்டுள்ளது. வன விலங்குகளின் குடிநீர் தேவையை கருத்தில்கொண்டு வனப் பகுதிகளில் உள்ள தண்ணீர் தொட்டிகளை நிரப்பும் பணிகளை தொடங்கியுள்ளோம்.

செங்கல்பட்டு மற்றும் திருப்போரூரில் அடர்ந்த வனப் பகுதிகளின் நடுவே அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டிகளை, டிராக்டர் மூலம் டேங்கர்களில் தண்ணீர் கொண்டு சென்று நிரப்பி வருகிறோம். சுழற்சி முறையில் தொட்டிகளில் தண்ணீர் நிரப்ப திட்டமிட்டுள்ளோம். எனினும், மழை பெய்தால் மட்டுமே வன விலங்குகளின் தண்ணீர் தேவையை முழுமையாகப் பூர்த்திசெய்ய முடியும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x