Last Updated : 02 Feb, 2019 08:49 PM

 

Published : 02 Feb 2019 08:49 PM
Last Updated : 02 Feb 2019 08:49 PM

மது போதையில் பைக்கில் சென்ற சிறைக் காவலர் மோதியதில் பெண் பரிதாப பலி

திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக புதுச்சேரி வகை மதுபாட்டில்களோடு காவல் உடையில் மது போதையில் ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சென்ற காவலர் மோதியதில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கடலூர் மத்திய சிறையில் காவலராகப் பணிபுரிபவர் அருள்ராஜ் (26). இவர் நேற்று கடலூரிலிருந்து விருத்தாசலம் நோக்கி காவல் உடையில் ஹெல்மெட் அணியாமல், பெண்ணாடத்தில் நடைபெறவுள்ள தனது நண்பரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பைக்கில் பயணித்துள்ளார்.

அப்போது விருத்தாசலம் அருகே புதுகூரைப்பேட்டையைச் சேர்ந்த ஜெயராமன் மனைவி ஆனந்தவள்ளி (35) என்பவர் நூறுநாள் வேலைதிட்டத்தின் கீழ் பணியை முடித்துவிட்டு கடலூர்-விருத்தாசலம் சாலை மார்க்கத்தில் சாலையோரம் நடந்து வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தார்.

பைக்கில் சென்ற அருள்ராஜ் எதிர்பாராதவிதமாக, ஆனந்தவள்ளி மீது மோதி விபத்துக்குள்ளானதில், ஆனந்தவள்ளி சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். இதையடுத்து அங்கிருந்து அருள்ராஜ் தப்பியோடி, விருத்தாசலம் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தார்.

இதையறிந்த புதுகூரைப்பேட்டை கிராம மக்கள் விருத்தாசலம் காவல் நிலையம் முன் திரண்டு, விபத்து ஏற்படுத்திய காவலர் மது அருந்திய நிலையில் பைக்கை ஒட்டிச் சென்றதோடு, காவலர் உடையில் புதுச்சேரி வகை மதுபாட்டில்களையும் எடுத்துக்கொண்டு பைக் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதால் அவர்  மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து விருத்தாசலம் காவல் ஆய்வாளர் ராஜதாமரைப் பாண்டியன், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரோடு பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து அவர்கள் சாலை மறியலைக் கைவிட்டனர். இதையடுத்து இறந்த ஆனந்தவள்ளியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

சிறைக்காவலர் சஸ்பெண்ட் செய்யப்படுவாரா?

ஹெல்மெட் அணியாமல் விபத்தில் சிக்கும் காவல்துறையினரை சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என தமிழக டிஜிபி நேற்று அறிவித்த நிலையில், சிறைக்காவலர் அருள்ராஜ், ஹெல்மெட் அணியாமலும், மது அருந்திய நிலையில் விபத்து ஏற்படுத்தியதில் பெண் உயிரிழந்திருப்பதால், அருள்ராஜ் சஸ்பெண்ட் செய்ய வாய்ப்புண்டு என சக காவலர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x