Published : 03 Feb 2019 11:14 AM
Last Updated : 03 Feb 2019 11:14 AM
தமிழகத்தில் பிரதானமாக விளங்கும் தென்னை விவசாயத்தைச் சார்ந்த மிக முக்கிய தொழிலாக கயிறுநார் உற்பத்தி உள்ளது. குடிசை வீடுகட்ட, பந்தல் அமைக்க, கால்நடைகளை கட்டி வைக்க, கோழிப் பண்ணைகளுக்குதேங்காய் நார் கயிறுகள் அதிகளவில் தேவைப்படுகிறது. மேலும், நாரின் கழிவில் இருந்து கிடைக்கும் பித்து மூலமாக மண்ணில்லா விவசாயத்துக்கு அதிகளவு வெளிநாட்டினர் பயன்படுத்தி வருகின்றனர். இத் தொழிலை மேம்படுத்துவதற்காக சேலம் மாவட்டத்தில் நங்கவள்ளியில் இயங்கும் காயர் போர்டு மற்றும் கயிறு குழுமம் மூலம், கயிறு உற்பத்தி மற்றும் வியாபாரத்துக்கு தேவையான அனைத்து வித அரசு ரீதியான உதவிகளும் செய்யப்படுகிறது.
சேலம் மாவட்டத்தில் நங்கவள்ளி, கே.ஆர்.தொப்பூர், தாரமங்கலம், மேச்சேரி, வீராணம், இரும்பாலை, சூரமங்கலம், ஆத்தூர் உள்பட மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கயிறு உற்பத்தி மற்றும் நார் மில்கள் இயங்கி வருகின்றன. தென்னை மட்டையில் இருந்து நாரை பிரித்தெடுத்து, இயந்திரம் மூலம் கயிறு உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த நார் கழிவில் இருந்து கிடைக்கும் பித்துவை (நார் துகள்கள்) கோழி பண்ணைகளிலும், மண்ணில்லா விவசாயத்துக்கும், விளைநிலங்களில் உரத்துடன் சேர்த்தும் பயன்படுத்தப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் இருந்து வட மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் கயிறு, நார் ஏற்றுமதி செய்யப்படுவதால், இத்தொழில் அமோகமாக நடந்து வருகிறது. தொழில் முனைவோர்கள் பலரும் கயிறு, நார் உற்பத்தி மற்றும் விற்பனையில் அதிகளவு ஆர்வமுடன் ஈடபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து சேலம் மாவட்டம் நங்கவள்ளியில் இயங்கும் கயிறு குழும நிர்வாக இயக்குநர் பாபு கூறியதாவது:தமிழக அரசு பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கையில் தீவிரம் காட்டி வரும் நிலையில், நைலான் கயிறு போன்றவற்றக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கு மாற்றாக தேங்காய் நார் கயிறுக்கு தேவை அதிகரித்துள்ளது. சேலம் மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கயிறு உற்பத்தி ஆலைகளும், 150-க்கும் மேற்பட்ட நார் மில்களும் இயங்கி வருகின்றன. கயிறு உற்பத்தி தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் கயிறு உற்பத்தி தொழிலில் சேலம் மாவட்டம் பிரதானமாக விளங்குகிறது. சர்வதேச அளவில் கயிற்றுக்கான தேவையில் 25 சதவீதம் மட்டுமே பூர்த்தி செய்யப்படுகிறது. 75 சதவீதம் தேவை பற்றாக்குறையாக உள்ளது. இங்கிருந்து வட மாநிலங்களுக்கு கயிறு அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும், நெதர்லாந்து, ஐரோப்பிய நாடுகளுக்கும் கயிறு ஏற்றுமதி செய்யப்படுகிது. கட்டுமானப் பணிகளுக்கு தேவைப்படும் சாரம் கட்டும் கயிறுகள் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. 25 கிலோ பண்டல் வரையில் தேவைக்கு ஏற்ப உற்பத்தி செய்து, விற்பனை செய்யப்படுகிறது.
மழை குறைவு காரணமாகவும், விவசாய நிலம் பற்றாக்குறையால் வெளிநாடுகளில் நாரில் இருந்து கிடைக்கும் பித்துகளை மண்ணில்லா விவசாயத்துக்கு அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். நம்மூரில் மாடி தோட்டத்துக்கு நார் பித்துகளை அதிகளவு வாங்குகின்றனர். கடந்த ஆண்டு கயிறு கிலோ 42 வரையில் விற்பனை செய்யப்பட்டது. தற்போது, வடமாநிலங்களில் பருவகால மாற்றத்தின் காரணமாக கயிறு வாங்குவது குறைந்துள்ளதால், தற்போது, கயிறு கிலோ ரூ.40 வரை விற்பனை செய்யப்படுகிறது. கயிறு உற்பத்தி தொழிலில் ஈடுபட விரும்புபவர்களுக்கு அவர்களின் முதலீடு, உற்பத்தி அளவு உள்ளிட்டவையை கொண்டு கடனுதவி மற்றும் 25 சதவீதம் வரை மானியம் வழங்கப்படுகிறது.
புதியதாக கயிறு உற்பத்தி தொழிலில் ஈடுபட விரும்புபவர்களுக்கு, கேரள மாநிலம் ஆலப்புழையில் பயிற்சி வழங்கப்படுகிறது. கயிறு தேவையின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், இத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு திருப்திகரமான வருவாய் கிடைக்கிறது. மூலப்பொருட்கள் விலை ஏற்றம்தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் கஜா புயல் தாக்கத்தின் காரணமாக தென்னை மரங்கள் சேதமடைந்தன. இதனால், மட்டை கிடைப்பது அரிதாகி விட்ட நிலையில், மூலப்பொருட்களின் விலை ஏற்றம் கண்டுள்ளது. கயிறு தேவை அதிகளவு உள்ள நிலையில், மூலப்பொருட்கள் பற்றாக்குறையால் வரும் மாதங்களில் கயிறு விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.எனவே, கயிறு உற்பத்தி தொழில் சார்ந்தவர்களுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும் சூழல் உருவாகும், என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT