Published : 04 Feb 2019 10:26 AM
Last Updated : 04 Feb 2019 10:26 AM
இந்தியாவின் முதுகெலும்பான விவசாயத்துக்கு கிணறுகளும், ஆழ்குழாய்க் கிணறுகளும்தான் கைகொடுக் கின்றன. ஒரு காலத்தில் கிணறுகள் மட்டுமே இருந்தன. நவீன இயந்திரங்களின் வருகைக்குப் பின்னர் ஆழ்குழாய்க் கிணறுகள் பரவலாகின. கிணறு வெட்டுவதைக் காட்டிலும், ஆழ்குழாய்க் கிணறுகள் அமைப்பது எளிது, செலவும் குறைவு என்ற காரணத்தால் இவை விவசாயிகளிடையே பிரபலமாகின.
ஆழ்குழாய்க் கிணறு அமைக்கப் பயன்படுத்தும் `ரிக் வாகனங்கள்' என்றாலே திருச்செங்கோடுதான் நினைவுக்கு வரும். இந்த தொழிலை காலத்துக்கு ஏற்ப மாற்றிவருவதுடன், கடல் கடந்தும் விரிவுபடுத்தியுள்ளனர் இப்பகுதி ரிக் உரிமையாளர்கள். எனினும், `நான் டிரான்ஸ்போர்ட்` எனக் கூறி, பிற மாநிலங்களில் ரிக் வாகனத்தை இயக்கும்போது வரி வசூலிப்பதுபோன்ற நெருக்கடிகளால், பல்வேறு இடையூறுகளைச் சந்தித்து வருவதாக ரிக் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து சேலத்தைச் சேர்ந்த ரிக் வாகன நிறுவன மேலாளர் எஸ்.சிவக்குமார் கூறும்போது, "விவசாயத்துக்கு உற்ற நண்பனாகத் திகழ்பவை, ஆழ்குழாய்க் கிணறுகள் அமைக்கப் பயன்படுத்தப்படும் ரிக் வாகனங்கள் என்றால் அது மிகையில்லை. தமிழகம் முழுவதும் ரிக் வாகனத் தொழில் பரவலாக மேற்கொள்ளப்பட்டாலும், சேலம், நாமக்கல், தருமபுரி மாவட்டங்களில்தான் அதிகம். குறிப்பாக, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் ஏராளமானோர் ரிக் வாகனத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான ரிக் வாகனங்கள், வட மாநிலங்களில் இயக்கப்படுகின்றன.தமிழகத்தைப் பொறுத்தவரை, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் சுமார் 50 ஆயிரம் ரிக் வாகனங்கள் உள்ளன.பெரும் பாலானவை வெளி மாநிலங்களில் ஆழ்குழாய்க் கிணறுகள் அமைக்கும் பணிக்காக அனுப்பப்படுகின்றன.
ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், பிஹார், ஒடிசா, டெல்லி மற்றும் ஜம்மு-காஷ்மீர் மாநிலங்களுக்கு சேலம், நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த ரிக் வாகனங்கள் அதிக அளவில் அனுப்பிவைக்கப்படுகின்றன. இந்த நிலையில், கடல் கடந்து தென் ஆப்பிரிக்காவுக்கும் தமிழக ரிக் வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டு, அங்கு ஆழ்குழாய்க் கிணறு அமைக்கும் பணியில் ஈடுபடுகின்றன. கப்பல் மூலம் ரிக் வாகனங்கள் அந்த நாட்டுக்கு கொண்டுசெல்லப்படுகின்றன.
ரிக் வாகனங்களுக்கான வரி விதிப்பு மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது. பொதுவாக, `நான் டிரான்ஸ்போர்ட்` (போக்குவரத்துக்குப் பயன்படாத வாகனம்) என்ற பட்டியலில் வருகின்றன ரிக் வாகனங்கள். ஆண்டு வரி கட்டுவதன் மூலம் நாடு முழுவதும் ரிக் வாகனங்களை இயக்கலாம்.
ஆனால், வெளி மாநிலங்களில் ரிக் வாகனங்களை கொண்டுசெல்லும்போது, அந்த மாநிலத்துக்கு
உரிய வரி மற்றும் சாலை வரியை கட்டுமாறு வற்புறுத்துவதுடன், அபராதம் விதித்தல் போன்றவற்றிலும் அம்மாநில வட்டாரப் போக்குவரத்து துறையினர் மற்றும் காவல்துறையினர் மேற்கொள்கின்றனர். இதுபோன்ற பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாக நேரிடுகிறது.
இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் வகையில், பிற மாநிலங்களில் தமிழக ரிக் வாகனங்களை இயக்கும்போது, அம்மாநிலத்துக்குரிய வரி கட்டுமாறு வற்புறுத்துவதைத் தவிர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ரிக் வாகன உரிமையாளர் சங்கம் மூலம் பல ஆண்டுகளாக மத்திய, மாநில அரசுகளிடம் இந்தக் கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது.எனினும், இதுவரை உரிய நடவடிக்கை இல்லை" என்றார்.
திருச்செங்கோடு ரிக் உரிமையாளர்கள் சங்கச் செயலர் கே.ஏ.தனசேகர் கூறும்போது, "தேசிய அளவில் திருச்செங்கோட்டில்தான் ரிக் வாகனங்கள் அதிக அளவு உள்ளன. இப்பகுதியில் மட்டும் ஏறத்தாழ 15 ஆயிரம் ரிக் வாகனங்கள் உள்ளன. நாடு முழுவதும் மட்டுமின்றி இங்கிருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு ரிக் வண்டிகள் அனுப்பப்படுகின்றன. குறிப்பாக, ஆப்பிரிக்க நாடுகளில் அதிக அளவிலான திருச்செங்கோடு ரிக் வாகனங்கள் இயக்கப்படுகின்றன.
'சென்சார்' தொழில்நுட்பம்
தற்போது ரிக் வாகனங்களில் `சென்சார்` என்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இதனால், முன்பு ஒரு ரிக் வாகனத்துக்கு 20 ஆட்கள் வீதம் தேவைப்பட்ட சூழலில், தற்போது அதில் பாதியளவு தொழிலாளர்கள் இருந்தால்போதும். இதனால் ரிக் வாகனத் தொழில் வளர்ச்சியடைந்துள்ள போதிலும், டீசல் விலை உயர்வு இத்தொழிலை கடுமையாகப் பாதித்துள்ளது.
கடந்த 2 ஆண்டுகளாக தொழில் பின்னடைவை சந்தித்து வருகிறது. ஒரு மணி நேரம் ரிக் வாகனம் இயக்க 80-90 லிட்டர் டீசல் தேவைப்படுகிறது. இதனால், டீசலுக்கு மட்டும் கணிசமாக செலவாகிறது. டீசலின் நிலையற்ற விலையைக் காரணம்காட்டி, விவசாயிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்க முடியாது. எனவே, டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர வேண்டுமென்று தொடர்ந்து மத்திய, மாநிலஅரசுகளிடம் வலியுறுத்தி வருகிறோம். இதேபோல, ரிக் வாகனங்கள் 'நான் டிரான்ஸ்போர்ட்' வரம்புக்குள் வருகின்றன. தமிழகத்தில் ரிக் வாகனத்துக்கு ஆண்டுக்கு ரூ.3,500 வரி செலுத்தப்படுகிறது.
பிற மாநிலங்களில் வரி அதிகம். இந்த நிலையில், பிற மாநிலங்களுக்கு வாகனம் செல்லும்போது, அந்த மாநில வரியைச் செலுத்த வேண்டுமெனவும் நிர்ப்பந்திக்கப்படுகிறது. விவசாயம் சார்ந்த தொழிலுக்குப்பயன்படுத்தக் கூடியது என்ற அடிப்படையில்ரிக் வாகனத்துக்குபிற மாநிலங்களில் வரி வசூலிப்பதைக் கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது" என்றார்.
வேலுார் மாவட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலர் துரைசாமி கூறும்போது, "தமிழகத்தில் இருந்து செல்லும் ரிக் வாகனங்களுக்கு பிற மாநிலங்களில் வரி வசூலிக்கப்படுவது உண்மைதான். அதேபோல, பிற மாநில ரிக் வாகனங்கள் இங்கு வரும்போதும் வரி வசூலிக்கப்படுகிறது. ரிக் வாகனத்துக்கு உதவுவதற்காக கொண்டுசெல்லப்படும் லாரிக்கு (சப்போர்ட் லாரி), எந்த மாநில உரிமம் பெறப்பட்டுள்ளதோ, அங்குதான் இயக்க வேண்டும். மாறாக, வேறு மாநிலங்களில் இயக்கினால் வரி வசூலிக்கப்படும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT