Published : 22 Feb 2019 02:17 PM
Last Updated : 22 Feb 2019 02:17 PM

அதிமுக தலைமைக்கு அதிர்ச்சி கொடுத்த ஸ்டாலின்: விஜயகாந்துடன் சந்திப்பு

ஸ்டாலின் புதிய அஸ்திரத்தை கையில் எடுத்துள்ளார், பாமகவை விட்டுக் கொடுத்தது போல் தேமுதிகவை விட்டுக்கொடுக்க தயாராக இல்லாத ஸ்டாலின் திடீரென திமுக தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்ததன் மூலம் அதிமுகவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

கடந்த 2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் பொதுத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு பெரிதும் வரும் என எதிர்பார்க்கப்பட்ட தேமுதிக திடீரென பின்வாங்கியது, பழம் நழுவி பாலில் விழும் என திமுக தலைவர் கருணாநிதி நம்பிக்கையுடன் தெரிவித்திருந்தாலும் திமுகவில் உள்ள இரண்டாம் கட்ட தலைவர்களின் சிலரின் நடவடிக்கைகளால் வெறுப்புற்ற விஜயகாந்த் திமுக கூட்டணியை புறக்கணித்தார்.

இதை பயன்படுத்திய மக்கள் நல கூட்டணி அவரை தங்கள் கூட்டணிக்கு கொண்டு வந்தனர். தாம் கண்டிப்பாக சட்டப்பேரவைத் தேர்தலில் பெரிய அளவிலான வெற்றி பெறுவோம் என்று திமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் தவறாக கணித்து அதன் மூலம் கருணாநிதியின் எண்ணத்தையும் மீறி தேமுதிகவை புறக்கணித்தனர் என்று அப்போது அரசியல் விமர்சகர்களால் கருத்துக் கூறப்பட்டது.

இதன் விளைவு ஆட்சியை பிடிக்க வேண்டிய திமுக பல தொகுதிகளில் குறைவான வாக்குகளில் தோல்வியை சந்தித்தது. தேமுதிக திமுக கூட்டணியில் இருந்து இருந்தால் திமுக நிச்சயம் ஆட்சியை பிடித்து இருக்கும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இதனால் அதிமுக அதிக இடங்களை வென்று இரண்டாம் முறையாக ஆட்சியைப் பிடித்தது .

நமக்கு நாமே நடைபயணம் மூலம் மிகப்பெரிய நம்பிக்கையில் இருந்த மு.க.ஸ்டாலினுக்கு இது மிகப் பெரிய ஏமாற்றத்தை தந்தது. இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஜெயலலிதா இல்லாத அதிமுக அரசின் செயல்பாடுகள் மீது மக்கள் கொண்டுள்ள அவநம்பிக்கை மற்றும் மத்திய அரசின் மீதான மக்களின் கோபம் இவைகளை திமுக சாதகமாக பயன்படுத்த வாய்ப்பிருந்தது.

சமீபத்தில் தேசிய அளவிலான ஊடகங்கள் நடத்திய கருத்து கணிப்பில் தமிழகத்தில் திமுக அதிக இடங்களை வெல்லும் என்று கூறப்பட்டிருந்தது இவைகளை அடிப்படையாகக் கொண்டு கூட்டணி பேச்சுவார்த்தையில் திமுக தரப்பு மெத்தனமாக செயல்பட்டது. இதன் விளைவு அதிமுக முந்திக்கொண்டு பாமகவை தனது கூட்டணிக்குள் கொண்டு வந்தது.

பாமக மற்றும் பாஜகவுடன்  அதிமுக கூட்டணி அமைந்ததன் மூலம் திமுக அதிக இடங்களை கைப்பற்றும் என்ற நம்பிக்கை தகர்ந்தது. இது திமுக தலைமைக்கும் நன்றாக தெரிந்தது. இந்நிலையில் தேமுதிக அதிமுக கூட்டணிக்கு செல்லும் என்ற கணிப்பு கடந்த சில நாட்களாக மாறி வருகிறது. இதற்கு காரணம் தேமுதிக தலைவர் விஜயகாந்த் சில கண்டிஷன்களை போடுவதால் கூட்டணி பேச்சுவார்த்தை இழுபறி நீடிக்கிறது.

தேமுதிக, அதிமுகவை ஆதரித்து பிரச்சாரம் செய்யாது அதிமுக மேடையில் ஏறாது, என்ற நிபந்தனையும், அதிமுக தரப்பில் கோரிக்கையாக வைக்கப்பட்ட 21 சட்டப்பேரவைத் இடைத்தேர்தலில் தேமுதிக போட்டியிடாது என்பதற்கான உத்தரவாதம் அளிக்க தேமுதிக தரப்பு மறுத்து விட்டது.

தேமுதிக 21 சட்டப்பேரவை இடைத் தேர்தலில் தாங்கள் ஏற்கெனவே போட்டியிட்ட 8 தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறது மேற்கண்ட காரணங்களால் அதிமுக, தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை இழுபறியில் உள்ளது. இந்தமுறை தேமுதிகவை விட்டு விடக்கூடாது என்பதில் திமுக தலைவர் ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார்.

இதனை அடுத்து தேமுதிக தலைவர் விஜயகாந்தை காங்கிரஸ் மூத்த தலைவருமான திருநாவுக்கரசர் நேற்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது திருநாவுக்கரசரும் தனது சந்திப்பு ஒன்றும் மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று மழுப்ப விரும்பவில்லை தனது சந்திப்பில் அரசியல் இருந்தது என்று சூசகமாக தெரிவித்தார்.

தேமுதிக சார்பில் அதிக இடங்களும், 21 சட்டப்பேரவைத் தொகுதிகளில் சில தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில் தேமுதிகவுடன் கூட்டணி இல்லை என்கிற நிலைப்பாட்டை விட்டு இறங்கிய திமுக தலைவர் ஸ்டாலின் தேமுதிகவை திமுக கூட்டணிக்கு முயற்சியில் இறங்கியுள்ளார்.

இது அதிமுக தலைமைக்கு சற்று அதிர்ச்சியை கொடுத்துள்ளது என்பதாக பார்க்கப்படுகிறது. தேமுதிக தங்கள் கூட்டணியில் தான் உள்ளது என்று பாஜக தமிழக தலைவர் தமிழிசை மற்றும் மத்திய அமைச்சர் பொன். பொன் ராதாகிருஷ்ணன் போன்றவர்கள் கூறிவந்தாலும் திமுகவின் முயற்சி வெற்றி அடைந்துள்ளது என்று அரசியல் தரப்பில் கூறப்படுகிறது.

தேமுதிக தலைவர் விஜயகாந்தை தானே நேரில் சந்தித்து இதுகுறித்து பேசுவதற்காக இன்று திமுக தலைவர் ஸ்டாலின் விஜயகாந்தின் இல்லம் சென்றுள்ளார். இதன்மூலம் திமுக தேமுதிக கூட்டணி கூட்டணிக்கான கதவு திறக்கப் பட்டுள்ளது என்று அரசியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த 16-ம் தேதி அமெரிக்காவில் இருந்து சிகிச்சை முடிந்து சென்னை திரும்பிய விஜயகாந்தை ஸ்டாலின் நினைத்திருந்தால் சில நாட்களுக்குள் சந்தித்து இருக்கலாம் ஆனால் அப்படி சந்திக்காமல் இந்த நேரத்தில் கூட்டணி பிரச்சனை உள்ள இந்த நேரத்தில் திடீரென சந்திப்பதற்கு வெறும் உடல் நல விசாரிப்பு மட்டும் காரணமாக இருக்க வாய்ப்பே இல்லை. இந்த சந்திப்பின் பின்னணி திமுக கூட்டணி பக்கம் தேமுதிகவை கொண்டுவருவதே முக்கிய நோக்கம்.

அதில் திமுகவின் தலைவராக உள்ள ஸ்டாலினே நேரடியாக இறங்கி உள்ளார். மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் சாதுரியத்தை தற்போது ஸ்டாலின் கையில் எடுத்திருப்பது அதிமுக- பாஜக கூட்டணியினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது என்றே கூறலாம்.

சந்திப்பிற்கு பின்னர் உடல் நலம் விசாரிப்பு என்று ஸ்டாலின் கூறினாலும், கூட்டணிக்கு தேமுதிக வந்தால் ஏற்பீர்களா? என்ற கேள்விக்கு உங்கள் நல்ல எண்ணத்திற்கு நன்றி என ஸ்டாலின் பதிலளித்ததை திமுக தொண்டர்கள் உற்சாகமாக பார்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x