Published : 12 Feb 2019 10:32 AM
Last Updated : 12 Feb 2019 10:32 AM
திருப்பூரில் எதிர்பார்க்கப் பட்டதைவிட பிரதமர் நரேந்திர மோடியின் நிகழ்ச்சியில் திரளாக மக்கள் பங்கேற்றது பல்வேறு தரப்பில் வியப்பையும், அக்கட்சியினர் மத்தியில் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம் திருப்பூரில் நடைபெற உள்ளது என்ற அறிவிப்பு பாஜக தரப்பில் இருந்து வெளியானதுமுதலே, அதுதொடர்பாக பல்வேறு கருத்துகள் அரசியல் கட்சியினர் மத்தியில் பேசப்பட்டது.
குறிப்பாக ஜிஎஸ்டி விதிப்பு, பணமதிப்பு நீக்கம், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை வகைப்படுத்துவதில் கொண்டு வரப்பட்ட மாற்றங்கள், ஏற்றுமதியாளர்களுக்கான சலுகைகள் குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளால், திருப்பூர் தொழில் நிறுவனங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன. மேலும், தொழில் துறையினருக்கு அளித்த வாக் குறுதிகளையும், பொதுமக்களுக்கு அளித்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றாததால், மத்திய அரசு மீது கடும் அதிருப்தி நிலவி வருகிறது. இதனால், பிரதமர் பங்கேற்கும் பொதுக்கூட்டத்துக்கு மக்களை திரட்டுவது பாஜகவினருக்கு சவாலாக இருக்கப்போகிறது என்று, பல்வேறு தரப்புகளிலும் பேசப்பட்டது.
கொங்கு மண்டலத்தில் அவர்களின் நிலை என்ன என்பது, இந்த கூட்டத்தின் வாயிலாக தெரிந்துவிடும் என்ற கருத்துகளும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன. கூட்டத்துக்கு முன்னதாக, மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் தமிழக காவல் துறை தரப்பிலுமே 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் பேர் வரை மட்டுமே கலந்துகொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டது.
வாக்கு சதவீதம் எவ்வளவு இருந்தாலும் திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, கரூர் உட்பட கொங்கு மாவட்டங்கள் 8-ல் இருந்தும் அவ்வளவுதான் கலந்து கொள்வார்கள்' என்றனர். ஆனால், நடந்தது என்னவோ வேறு. கணக்கிட்டதைவிட, பிரதமர் பங்கேற்ற கூட்டத்தில் 2 மடங்கு மக்கள் கூட்டம் அதிகமாக இருந்துள்ளது, காவல் துறை உட்பட அனைவருமே எதிர்பாராத விஷயமாக பார்க்கப்படுகிறது. இதுகுறித்து தமிழக காவல் துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளிடம் பேசும்போது, 'பின்னலாடை நிறுவனங்களில் பணிபுரியும் வட இந்திய தொழிலாளர்கள் வந்திருந்தாலும், 50 ஆயிரம் பேர் என்பது எதிர்பார்க்கப்பட்டதைவிட அதிகம். பெண்கள், தொழில் துறையினர், விவசாயிகள் என பலதரப்பட்டவர்களும் பங்கேற்றனர்' என்றனர்.
திருப்பூர் மக்கள் மட்டுமே
பாஜக திருப்பூர் கோட்ட பொறுப்பாளர் பாயிண்ட் மணி கூறும்போது, ‘நாங்கள் எப்போதும் இதுபோன்று பெரிய தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டங்களுக்கு, தமிழகம் முழுவதிலும் இருந்து கட்சித் தொண்டர்களை அழைத்து வரச் செய்வது வழக்கம். ஆனால், திருப்பூர் பொதுக்கூட்டத்துக்கு, சம்பந்தப்பட்ட பகுதிகளில் இருந்து மட்டுமே கட்சியினரை கலந்துகொள்ளச் செய்வது என முடிவு செய்யப்பட்டது. இதனால், திருப்பூர் மற்றும் அதை சார்ந்த மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். இது எங்களுக்கு உற்சாகத்தையும், எழுச்சியையும் கொடுத்துள்ளது' என்றார்.
உழைப்புக்கு வெற்றி
மாவட்ட தலைவர் ஆர்.சின்னசாமி கூறும்போது, ‘எம்.ஜி.ஆர். பங்கேற்கும் கூட்டத்தில் அவரைப் பார்க்க எப்படி மக்கள் கூடுவார்களோ, அதேபோல பிரதமர் மோடியைப் பார்க்க ஒவ்வொரு கிராமங்களில் இருந்தும் மக்கள் வந்துள்ளனர். இது எங்களின் கடும் உழைப்புக்கு கிடைத்த வெற்றி. எங்கள் கட்சியினருக்குள் புதிய உத்வேகத்தை அளித்துள்ளது. இது தேர்தலில் நிச்சயம் வெற்றிக்கு கைகொடுக்கும்' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT