Published : 12 Feb 2019 09:01 AM
Last Updated : 12 Feb 2019 09:01 AM
கஜா புயலால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் தென்னை உள்ளிட்ட 12 ஆயிரம் மரக்கன்றுகளை சென்னையில் உள்ள கடல்சார் தொழில்நுட்ப நிறுவன விஞ்ஞானிகள் வழங்கியுள்ளனர்.
கடந்த ஆண்டு வீசிய கஜா புயலால் டெல்டா மாவட்ட கிராமங்கள் சின்னாபின்னமாயின. லட்சக்கணக்கான தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தன. விவசாயிகளின் வாழ்வாதாரம் பறிபோனது. இத்துயரில் பங்கெடுத்துக்கொள்ளும் வகையில் சென்னையில் உள்ள தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவன விஞ்ஞானிகள், புயல் பாதித்த கிராமங்களில் தென்னை உள்ளிட்ட மரக்கன்றுகளை வழங்கி ஆதரவுக் கரம் நீட்டி வருகின்றனர்.
இது தொடர்பாக அந்நிறுவனவிஞ்ஞானியும், திட்ட இயக்குநருமான ஆர்.வெங்கடேசன் கூறியதாவது:
இந்நிறுவனம் கடல், அலை, காற்று, புயல் தொடர்பாக ஆய்வு செய்கிறது. அதனால் எங்கள் நிறுவன விஞ்ஞானிகள் 5 பேர் கொண்ட குழு புயல் பாதித்த டெல்டா மாவட்ட கிராமங்களை பார்வையிட்டது. அப்போது 82 வயது மூதாட்டி, 63 வயது மகள்ஆகியோர் கொண்ட குடும்பம் ஒன்றுதமக்கு வருவாய் தந்த 3தென்னை மரங்களும் புயலால் சாய்ந்துவிட்டதால், தற்போது நிர்கதியாய் நிற்கிறோம் எனக் கூறினர். அவர்களின் வேதனை மனதை பிசைந்தது. ஆராய்ச்சி பணிகளையும் தாண்டி, எங்களுக்கும் சமூக பொறுப்பு உண்டு என்ற அடிப்படையில், விவசாயிகளுக்கு உதவ திட்டமிட்டோம்.
இதற்காக சுமார் 10 ஆயிரம் மரக்கன்றுகளை வழங்க ‘பசுமைபுவி திட்டம்’ என்ற திட்டத்தை உருவாக்கினோம். அதன்அடிப்படையில், எங்கள் சொந்த செலவில் கடந்த டிசம்பர் 31-ம் தேதி தென்னை மரக்கன்றுகளைத் வழங்கத் தொடங்கினோம். கூடவே கொய்யா, மா உள்ளிட்ட மரக்கன்றுகளையும் வழங்கினோம். பல்வேறு பள்ளிகளுக்குச் சென்றுமாணவர்களுக்கும் மரக்கன்றுகளை வழங்கினோம்.
அவ்வாறு இதுவரை 10 கிராமங்களைச் சேர்ந்த 3 ஆயிரம் குடும்பங்கள், 2 ஆயிரம் மாணவர்கள் என 7,800 தென்னங்கன்றுகள் உட்பட மொத்தம் 12 ஆயிரம் மரக்கன்றுகளை வழங்கி இருக்கிறோம். இவற்றைக் கொண்டு 100 ஏக்கர் நிலத்தில் நடவு செய்ய முடியும்.
எங்கள் முயற்சியை கேள்விப்பட்டு தனி நபர்கள், பல்வேறு அமைப்புகள், நிறுவனங்கள், பள்ளிகள், அமெரிக்கா, ஸ்வீடன், ஓமன், நார்வே போன்ற நாடுகளில் உள்ள தமிழ் விஞ்ஞானிகளும் தங்களால் முடிந்த சிறு உதவிகளைச் செய்கின்றனர் அடுத்து வரும் நாட்களில் மேலும் 8 ஆயிரம் மரக்கன்றுகளை வழங்க இருக்கிறோம்.
மாணவர்களிடம் உரையாடும்போது,"நாங்களும் தமிழ் வழியில் அரசுப் பள்ளியில் பயின்றுதான் விஞ்ஞானிகளானோம். அதனால் அரசுப் பள்ளி மாணவர்கள் தாழ்வு மனப்பான்மையை ஒழித்து, படிப்பில் ஆர்வம் செலுத்த வேண்டும்" என்று ஊக்கமளித்தும் வருகிறோம். அவர்களுக்கு ஆங்கிலப் பேச்சுபயிற்சி அளிக்கவும் திட்டமிட்டிஇருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT