Published : 21 Feb 2019 03:52 PM
Last Updated : 21 Feb 2019 03:52 PM
புதுச்சேரியில் ஆளுங்கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்களை அணி மாற பேரம் பேசுவதாக சபாநாயகர் வைத்திலிங்கத்திடம் அளித்த புகாரையடுத்து அதன் மீது நடவடிக்கை எடுக்க சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை செய்து வருவதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவை சபாநாயகர் வைத்திலிங்கம் அறையில் புதன்கிழமை இரவு அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள் கந்தசாமி, நமச்சிவாயம், அரசு கொறடா அனந்தராமன், விஜயவேணி, தீப்பாய்ந்தான் உள்ளிட்ட காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இந்த அவசர ஆலோசனை கூட்டத்தில் நெட்டப்பாக்கம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் விஜயவேணி மற்றும் ஊசுடு சட்டப்பேரவை உறுப்பினர் தீப்பாய்ந்தான் ஆகியோர், அரசியல் அடிப்படை நிலையையே மாற்றக்கோரி எதிர்க்கட்சிகளைச் சார்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்ட வேறு சிலரும் தொடர்ந்து தொலைபேசி வாயிலாக தொல்லை தருவதாக கூறி, அது தொடர்பான தொலைபேசி உரையாடலையும் சபாநாயகர் வைத்திலிங்கத்திடம் அளித்து புகார் செய்தனர்.
இதுதொடர்பாக சபாநாயகர் வைத்திலிங்கம் செய்தியாளர்களிடம் இன்று (வியாழக்கிழமை) கூறுகையில், "அரசியல் சார்பின் அடிப்படை நிலையையே மாற்றக்கோரி தொடர் தொல்லையை எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் தருவதாக சட்டப்பேரவை உறுப்பினர் விஜயவேணி மற்றும் தீப்பாய்ந்தான் ஆகியோர் புகார் தெரிவித்துள்ளனர். அதன்மீது எந்தவகையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது தொடர்பாக சட்டவல்லுநர்களுடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
அதன்பின் சபாநாயகர் என்ற முறையில் என்னுடைய நடவடிக்கை இருக்கும்" என வைத்திலிங்கம் தெரிவித்தார். யார் தொல்லை கொடுத்தார்கள் என்று கூற மறுத்துவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT