Published : 14 Sep 2014 04:53 PM
Last Updated : 14 Sep 2014 04:53 PM

தமிழக மீனவர்கள் பிரச்சினையில் பாஜக-வின் இரட்டை நிலைப்பாடு ஏன்? - ஜெயலலிதா கேள்வி

மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்று தமிழக பாஜகவினர் கூறிவருகின்றனர். ஆனால் அதே கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் ஒருவர் மீனவர்களுக்கு எதிராக நடந்து கொள்கிறார். இந்த இரட்டை நிலைப்பாடு ஏன்? என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார்.

தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவிக்குப் போட்டியிடும் அந்தோனி கிரேஸி என்பவரை ஆதரித்து ஜெயலலிதா பிரச்சாரம் செய்த போது இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் பேச்சின் விவரம் வருமாறு:

மாநகராட்சி தேர்தலில், தேசிய கட்சிக்கு வாக்களிப்பதால் எந்தப் பயனும் ஏற்படாது. தேசிய கட்சிகளைப் பொறுத்தவரை தமிழ்நாட்டில் ஒரு தலைமை. டெல்லியில் ஒரு தலைமை. தமிழ்நாட்டில் ஒரு நிலைப்பாடு. டெல்லியில் ஒரு நிலைப்பாடு.

மீனவர்கள் நிறைந்த பகுதி தூத்துக்குடி. எனவே உதாரணத்திற்கு மீனவர் பிரச்சனையை எடுத்துக் கொள்வோம். தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து துன்புறுத்துவதும்; சிறை பிடிப்பதும்; அவர்களது படகுகளை பிடித்து வைத்துக் கொள்வதும் வாடிக்கையாக நடந்து கொண்டு வருகிறது. இந்தப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்று நான் பாரதப் பிரதமர் அவர்களை நேரிலும் கடிதங்கள் வாயிலாகவும் வற்புறுத்தி வருகிறேன். இதன் காரணமாக மீனவர்கள் விடுவிக்கப்படுகின்றனர்.

இந்தப் பிரச்சனையில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் நிலைப்பாடு என்ன? தமிழக மீனவர் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என்று, தமிழக பாரதிய ஜனதா கட்சியினர் கூறி வருகின்றனர். ஆனால் அதே கட்சியைச் சேர்ந்த மூத்தத் தலைவர் ஒருவர் தமிழக மீனவர்களுக்கு எதிராக நடந்து கொள்கிறார். தமிழக மீனவர்களின் படகுகளை திருப்பிக் கொடுக்க தான் தான் தடை போட்டதாக மார்தட்டிக் கொள்கிறார்.

இது குறித்து தமிழக பாரதிய ஜனதா கட்சி அவருக்கு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை. மத்திய அரசோ மவுனம் காக்கிறது. இப்படிப்பட்ட இரட்டை நிலைப்பாடு உடைய கட்சிக்கு வாக்களிப்பது என்பது, தமிழக மக்களுக்கு எந்த விதத்திலும் நண்மை பயக்காது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். எனவே பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களிப்பதால் உங்களுக்கு எந்தவிதமான நன்மையும் ஏற்படாது.

என்று பேசியுள்ளார் ஜெயலலிதா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x