Published : 04 Feb 2019 10:37 AM
Last Updated : 04 Feb 2019 10:37 AM

பொதுமக்களின் தள்ளுமுள்ளால் ஜல்லிக்கட்டு மைதான தடுப்பு அரண்கள் உடைப்பு; செய்தியாளர்கள் மீது தாக்குதல்

பொதுமக்களின் தள்ளுமுள்ளு காரணமாக ஜல்லிக்கட்டு மைதான தடுப்பு அரண்கள் உடைக்கப்பட்டது பார்வையாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

திருப்பூர் மாவட்டம் அலகுமலையில் நேற்று நடந்த ஜல்லிக்கட்டு போட்டியை காண, பார்வையாளர் மாடத்தில் 20 ஆயிரம் பேர் அமர்ந்திருந்தனர். திருப்பூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து அதிகாலை முதலே பொதுமக்கள் கேலரியில் இடம்பிடிக்கத் தொடங்கினர். 5 மணிக்கு மேல் பொதுமக்கள் அதிகம் கூடியதால், கேலரியில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டனர்.

படம் பிடிப்பதற்காக அமைக்கப் பட்டிருந்த சிறிய கேலரியில் செய்தியாளர்களுக்கு இருக்கை கள் அமைக்கப்படாததால், மூன்று மணி நேரத்துக்கு மேல் நின்று கொண்டிருந்தனர். இதனால், அவர்களின் பின்புறம் இருந்த பார்வையாளர்கள் சத்தம் போடத் தொடங்கினர். இதுதொடர்பாக செய்தியாளர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் எழுந்தது. போலீஸாரும் அவர்களை கட்டுப்படுத்தத் தவறியதால், இருதரப்புக்கும் இடையே தொடர்ந்து பிரச்சினை எழுந்தது. இளைஞர்கள் சிலர் புகைப்படக்காரர்களை தாக்கியதையும் போலீஸார் தடுக்கவில்லை. சம்பவத்தின்போது செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் இல்லாத நிலையில், ஊழியர்கள் மட்டும் இருந்ததால் பத்திரிகையாளர்கள் அதிருப்தி அடைந்தனர்.

பொதுமக்கள் அதிருப்தி

அலகுமலை ஜல்லிக்கட்டு காளை உரிமையாளர்கள் சங்கம் சார்பில், ஆங்காங்கே ஏற்பாட்டாளர்கள் சோதனை செய்து, அனுமதிச் சீட்டு இருப்பவர் களை மட்டுமே உள்ளே விட்டனர். அப்போது பார்வையாளர்கள் பலர் திரண்டனர். ஏற்பாட்டாளர் ஒருவர் அரங்குக்கு வெளியே காத்திருந்தவரை தாக்கவே, அங்கு பிரச்சினை எழுந்தது. தகரத்தில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலிகளை உடைத்துக்கொண்டு பொதுமக்கள் உள்ளே நுழைந்தனர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டதுடன், தண்ணீர் பாட்டில்களை வீசி கடும் எதிர்ப்பையும் தெரிவித்தனர்.

இப்பிரச்சினையின் போது போதிய போலீஸார் அங்கு இல்லை. இருந்த போலீஸாரும் அவர்களை கட்டுப்படுத்தத் தவறினர். உள்ளே நுழைந்த இளைஞர்கள் திடீரென கேலரியின் பின்பக்கமாக ஏறியபோ தும் போலீஸார் தடுக்கவில்லை. இதனால், கேலரியில் அமர்ந்திருந்த பொதுமக்கள் அலறினர்.

போலீஸ் பற்றாக்குறை

திருப்பூர் மாவட்ட போலீஸார் 1300 பேரை ஜல்லிக்கட்டு பாதுகாப்பு பணிக்கு ஈடுபடுத்தியிருப்பதாக கூறப்பட்டிருந்தாலும், போலீஸார் பற்றாக்குறை இருந்தது. இதனால், போலீஸ் உயர் அலுவலர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். பார்வையாளர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கேலரி அமைக்காததே, பொதுமக்கள் தடுப்புகளை உடைத்துக்கொண்டு உள்ளே வர காரணம் என போலீஸார் தெரிவித்தனர்.

அறிவிக்கப்பட்ட பரிசுகள் வழங்கப்படவில்லையென மாடுபிடி வீரர்களும், மாட்டின் உரிமையாளர்களும் அதிருப்தி தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x