Published : 15 Feb 2019 09:05 AM
Last Updated : 15 Feb 2019 09:05 AM
தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்று ஜல்லிக்கட்டு. மதுரை மாவட்டம் அலங்காநல்லுாரில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டுப் போட்டி உலகப் பிரசித்தி பெற்றது. இதனாலேயே `மதுரைக்காரர்கள் வீரத்துக்கு சொந்தக்காரர்கள்` என மார்தட்டிக் கொள்வார்கள். மதுரையைத் தாண்டி திருச்சி, புதுக்கோட்டை, சேலம் மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்த நிலையில், ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான போராட்டத்துக்குப் பிறகு மாநிலம் முழுவதுமே போட்டிகள் நடைபெறுகின்றன. இந்த அடிப்படையில், கொங்கு மண்டலத்திலும் களைகட்டத் தொடங்கியுள்ளது ஜல்லிக்கட்டு.
பொதுவாக கொங்கு மண்டலத்தில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்புத் தொழில்கள் பிரதானமாக இருந்தபோதிலும், ஜல்லிக்கட்டுப் போட்டிகள் பெரிய அளவில் நடத்தப்படுவதில்லை. சேலம் மாவட்டம் தம்மம்பட்டி, கூலமேடு, நாமக்கல் மாவட்டம் அலங்காந்தம், பொட்டிரெட்டிப்பட்டி என சில இடங்களில் மட்டும் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. போட்டிக்கான தடை நீக்கத்துக்குப் பிறகு, நாமக்கல், ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களிலும் பல இடங்களில் போட்டிகள் நடைபெறத் தொடங்கியுள்ளன.
இதுகுறித்து நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வேம்பாகவுண்டம்புதுார் பகுதியைச் சேர்ந்த, தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவை நிர்வாகி எம்.சிவக்குமார் கூறும்போது, "வேம்பாகவுண்டம்புதுார் மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி வரும் 28-ம் தேதி ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த அனுமதி கோரி நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம். ஜல்லிக்கட்டுக்கு நடத்த தடைவிதித்தபோதுதான், போட்டி நடத்த வேண்டுமென்ற ஆர்வம் ஏற்பட்டது. எனவே, நீதிமன்றத் தடை நீக்கத்துக்குப் பின் போட்டிகளை நடத்தி வருகிறோம். தற்போது 3-ம் ஆண்டாக போட்டி நடத்த உள்ளோம். தமிழரின் வீர விளையாட்டை இனி தொடர்ந்து நடத்துவோம்" என்றார்.
தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தைச் சேர்ந்த சுற்றுலா மற்றும் கலாச்சார ஆய்வாளர் ஆர்.பிரணவகுமார் கூறும்போது, "கடந்த ஆண்டு நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் முதன்முறையாக ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்பட்டது. நடப்பாண்டு இரு இடங்களில் போட்டி நடத்த அனுமதி கோரப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையின்போது ஈரோட்டிலும் முதல்முறையாக போட்டி நடத்தப்பட்டு, 192 மாடுகள் களமிறங்கின. திருப்பூரிலும் 2வது ஆண்டாக ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கோவை செட்டிப்பாளையத்தில் நடந்த போட்டியில், 750 காளைகள் களமிறங்கின. நடப்பாண்டும் போட்டி நடைபெற உள்ளது.
நாமக்கல் மாவட்டத்திலும் முதன்முறையாக பல கிராமங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்படுகிறது.
ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த சமயத்தில், எருதாட்டம் நடத்தவும் தடை இருந்தது. ஜல்லிக்கட்டுக்கான தடை நீக்கப்பட்டவுடன், எருதாட்டமும் நடத்தப் படுகிறது. ஜல்லிக்கட்டுப் போட்டியால் வணிகமும் அதிகரித்துள்ளது. மொத்தத்தில், கொங்கு மண்டலத்திலும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் களைகட்டி வருவது மக்களை மகிழ்விப்பது மட்டுமின்றி, மாடுபிடி வீரர்களையும் புதிதாக உருவாக்கியுள்ளது.
நாங்களும் வீரத்தில் சளைத்தவர்கள் இல்லை என கொங்கு மண்டலத்தினரும் மார்தட்டச் செய்துள்ளது" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT