Published : 04 Feb 2019 10:11 AM
Last Updated : 04 Feb 2019 10:11 AM
திருப்பூரில் 2-வது ஆண்டாக நடந்த ஜல்லிக்கட்டு போட்டியை பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆரவாரத்துடன் கண்டு ரசித்தனர்.
மாவட்ட நிர்வாகம் மற்றும் அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நலச் சங்கம் சார்பில், 2-வது ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி அலகுமலையில் நேற்று நடைபெற்றது. போட்டி தொடங்கும் முன்னரே பார்வையாளர்கள் மாடம் நிரம்பி வழிந்தது. திருப்பூர், ஈரோடு, கோவை, கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பலர் குடும்பங்களாக வந்து போட்டியை கண்டு ரசித்தனர்.
மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி வாசிக்க, மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதைத்தொடர்ந்து, கோயில் காளை அவிழ்த்துவிடப்பட்டது.
கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் பெரியய்யா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏ.கயல்விழி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் சு.குணசேகரன், ஏ.நடராஜன், கே.என்.விஜயகுமார், உ.தனியரசு, மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.பிரசன்ன ராமசாமி, திருப்பூர் உதவி ஆட்சியர் ஜே.ஷ்ரவண்குமார் மற்றும் விழாக்குழுவினர் கலந்துகொண்டனர்.
திருப்பூரில் புகழ்பெற்ற காங்கயம் காளைகள், மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, தேனி, ஈரோடு, சேலம், நாமக்கல் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 550-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள், 500 காளைகள் பங்கேற்றன. இதில் அவிழ்த்துவிடப்பட்ட காளைகளில், சுத்து மாடுகள் என அறிவிக்கப்பட்ட மணப்பாறை கருப்புசாமி கோயில் மாடு, மதுரை அண்ணா நகர் கோயில் மாடு, நாமக்கல் மாணிக்பாட்ஷா மாடு உள்ளிட்டவை வீரர்களை அருகில் நெருங்கவிடாமல் களத்தில் நின்று விளையாடின. மதுரை சூறாவளி சுரேஷ் மாடு, புதுக்கோட்டை சீனிவாசன் மாடு, வாகியம்பட்டி ஜெயக்குமார் மாடு, தேனியைச் சேர்ந்த ராஜா மாடு உள்ளிட்டவை வாடிவாசலில் இருந்து அதிவேகமாக சீறிப்பாய்ந்து சென்று வெற்றி பெற்றன. வெற்றி பெறுவதில் மாடுகளுக்கும், வீரர்களுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. மாடுபிடி வீரர்களுக்கும், மாட்டு உரிமையாளர்களுக்கும் மாறி, மாறி பரிசுகள் கிடைத்தன.
மாடுகள் முட்டி பலத்த காயமடைந்த மதுரையை சேர்ந்த சிலம்பரசன் (30), முத்துராஜா (24), உசிலம்பட்டியைச் சேர்ந்த இளங்கதிர் (27), சிவகங்கையைச் சேர்ந்த ராஜேஷ்குமார் (27) ஆகியோர் திருப்பூர், கோவை அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். லேசான காயமடைந்த வீரர்களுக்கு, மைதானத்துக்கு வெளியில் உடனுக்குடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. வீரர்கள், காளைகளின் உரிமையாளர்கள், பார்வையாளர்கள் என 45-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். வாடிவாசலில் மோதியதாலும், மைதானத்தின் பக்கவாட்டு பகுதிகளில் முட்டியதாலும் 8-க்கும் மேற்பட்ட காளைகளும் காயமடைந்தன.
வெற்றி பெற்ற காளைகள், வீரர்களுக்கு உடனுக்குடன் தங்க நாணயங்கள், அண்டா உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. மாடுகளையும், வீரர்களையும் ஊக்கப் படுத்தும் வகையில், அமைச்சர், சட்டப் பேரவை உறுப்பினர்கள் சார்பில் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டு போட்டியில் தனது காளையை களமிறக்கிய 100 வயது மூதாட்டிக்கு, மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின்பேரில் ரொக்கம், சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. நடுவர்களின் தீர்ப்பில் சர்ச்சைகள் எழும்போது, மாவட்ட ஆட்சியர் தலையிட்டு இறுதி முடிவுகளை அறிவித்தது அனைவரிடையே வரவேற்பைப் பெற்றது.
போட்டியின்போது, விதிமுறை களை மீறிய, மது அருந்தியதாக கருதப்பட்ட வீரர்கள் உடனுக்குடன் வெளியேற்றப்பட்டனர். காலை முதல் மாலை வரை சிறப்பாக மாடுகளை பிடித்த வீரர்கள் கணக்கெடுக்கப்பட்டு, இறுதி சுற்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சிறந்த வீரர்கள், காளைகள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
பரிசு மழை
8 மாடுகளை பிடித்து மதுரை மாவட்டம் மேட்டுப்பட்டியைச் சேர்ந்த கார்த்திக் முதலிடமும், 6 மாடுகளை பிடித்து கருப்பா யூரணியைச் சேர்ந்த கார்த்திக் 2-ம் இடமும், 5 மாடுகளை பிடித்து அலங்காநல்லூரைச் சேர்ந்த சக்திவேல், திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தைச் சேர்ந்த கார்த்திக்குமார் 3-வது இடத்தையும் பிடித்தனர். சிறந்த மாடுகளுக்கான் முதல் 3 இடங்களை சேலம் ஏத்தையூர் சாரதி மாடு, மதுரை பி.ஆர். மாடு, மதுரை அண்ணா நகர் மாடு ஆகியவை பிடித்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT