Published : 07 Feb 2019 10:21 AM
Last Updated : 07 Feb 2019 10:21 AM
தமிழர்களின் உணர்வோடு ஒன்றிவிட்ட இட்லியும், தோசையும் இப்போது உலகெங்கும் பிரபல உணவாகிவிட்டன.
`வெட் கிரைண்டர்` இல்லை யென்றால் இட்லி, தோசை வகைகள் ஏது? வெட் கிரைண்டர்களைப் பொறுத்தவரை 99 சதவீதம் கோவையில் தான் உற்பத்தியாகின்றன. கோவையின் அடையாளங்களில் ஒன்றான வெட்கிரைண்டரில் வாழ்க்கையைத் தொடங்கியுள்ளார் கோவை வெட் கிரைண்டர்கள் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் சாஸ்தா எம்.ராஜா(50).
கோவை கணபதியைச் சேர்ந்த இவரை சந்தித்தோம். "அப்பா கே.பி.முருகேசன். சேலத்துல உரம், பூச்சிக்கொல்லி மருந்துனு விவசாய இடுபொருட்களை வித்துக்கிட்டிருந்தாரு. அம்மா தனலட்சுமிக்கு சொந்த ஊர் கோவை. அதனால, நான் பிறந்தது, படித்ததெல்லாம் கோவையில்தான். கோயம்புத்தூர் பெர்க்ஸ் ஸ்கூல்ல படிச்சேன். பள்ளிக்கூடம் படிக்கும்போது, ராஜீவ்காந்தி பிரதமராக இருந்தப்ப நாடு முழுவதும் நவோதயா பள்ளிகளை தொடங்கினாரு. ஆனா, தமிழகத்துல கடும் எதிர்ப்பு. அப்ப, நவோதயா பள்ளிகளைத் திறக்கணுமுன்னு நான் போராடினேன். இதனால, படிப்புல கவனம் செலுத்த முடியல.
அப்பா வேலை விஷயமா கோவைக்கு வரும்போதெல்லாம், வெட்கிரைண்டர், மோட்டார் பம்ப்செட் வாங்கிட்டு வாங்கனு பலரும் சொல்லுவாங்க. இதனால், நாமளே ஏன் வெட்கிரைண்டர், பம்ப்செட் தயாரிக்க கம்பெனி ஆரம்பிக்கக்கூடாதுனு அப்பா நெனச்சாரு. கோவை படேல் சாலையில வெட்கிரைண்டர், பம்ப்செட் தயாரிக்கற கம்பெனி தொடங்கினாரு.
10-வதில் தொடங்கிய பட்டறை
நான் அப்ப 6-வது படிச்சிக்கிட்டிருந்தேன். தினமும் கம்பெனிக்கு வந்து, அங்க வேலை செய்யறவங்களோட சேர்ந்து, நானும் வேலை செஞ்சேன். 10-வது படிக்கும்போது ரூ.10 ஆயிரம் முதலீடுபோட்டு, வெட் கிரைண்டருக்கு கல்லு கடையற லேத் பட்டறைய தொடங்கினேன். காலையில பட்டறைக்கு வந்து வேலை கொடுத்துட்டு, ஸ்கூலுக்குப் போயிடுவேன். மதியம் சைக்கிள்ல வேகமா பட்டறைக்கு வந்து, கல்லு கடையறவங்களுக்கு உதவுவேன். அப்புறம் திரும்பவும் ஸ்கூலுக்குப் போயிட்டு, மாலையில வந்துடுவேன்.
இப்படியே போனதால பிளஸ் 2 டிஸ்கன்டினியூ செஞ்சிட்டு, முழு நேரமாக பட்டறையிலேயே இருக்க ஆரம்பிச்சேன். என்னோட 18 வயசுலேயே 50 பேரை வெச்சி வேலை வாங்கினேன். அப்புறம், வெட் கிரைண்டர் ஸ்பேர்-ங்கள தயாரிக்க ஆரம்பிச்சேன். 1989-ல ராஜா இன்ஜினீயரிங் வொர்க்ஸ்-ங்கற பேர்ல வெட்கிரைண்டர் ஸ்பேர் பார்ட்ஸ் தயாரிச்சு, பல நிறுவனங்களுக்கும் சப்ளை செஞ்சேன். அதுக்கப்புறம் `சாஸ்தா`ங்கற பேர்ல வெட்கிரைண்டர் உற்பத்தியில ஈடுபட்டேன்.
இந்தியாவிலேயே கோயம்புத்தூர்ல மட்டும்தான் அதிக அளவிலான வெட்கிரைண்டர் கள தயாரிக்கிறோம். இதுக்காக, கோவை நகருக்கு புவிசார் குறியீடும் கிடச்சிருக்கு. கோயம்புத்தூர் சுத்துவட்டாரத்துல மட்டும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு வெட்கிரைண்டர் கம்பெனிங்க இருக்கு. நேரடியா 50 ஆயிரம் பேரும், மறைமுகமாக 70 ஆயிரம் பேரும் வேலை செய்யறாங்க.
பாப்பநாயக்கன்பாளையம், பழையூர் , நல்லாம்பாளையம், ஆவாரம்பாளையம், ரத்தினபுரி, காளப்பட்டி, தண்ணீர்பந்தல், கணபதி, பீளமேடு பகுதிகள்ல நிறைய வெட்கிரைண்டர் கம்பெனிங்க செயல்படுது. மாசத்துக்கு சுமார் 40 ஆயிரம் வெட் கிரைண்டர் தயாரிச்சி, தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா, வட மாநிலங்களுக்கும், துபாய், ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, வளைகுடா நாடுகளுக்கும் அனுப்பிவைக்கிறோம்.
வெட் கிரைண்டர்கள் சங்கம்
1995-ல கோயம்புத்தூர்ல இருக்கற வெட்கிரைண்டர் தயாரிப்பாளர்களா சேர்த்து, கோவை வெட் கிரைண்டர்கள் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர்கள் சங்கத்தை (கௌமா) தொடங்கினோம். நான் கொஞ்சம் அரசியல் சார்ந்து இருந்ததால, சங்கத்துல எந்தப் பொறுப்பும் வேணாமுன்னு சொல்லிட்டேன். உறுப்பினரா மட்டும் இருந்தேன்.
ஆரம்பத்துல வெட் கிரைண்டர்களுக்கு 5 பர்சென்ட் `வாட்` வரி மட்டும்தான் விதிச்சாங்க. இந்த நிலையில, 2017-ல ஜிஎஸ்டி அமல்படுத்துனாங்க. இதில வெட் கிரைண்டருக்கு 28 சதவீத வரி விதிச்சாங்க. இது வெட் கிரைண்டர் தொழிலுக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்துச்சி. பொதுவா எனக்கு போராட்ட குணம் அதிகம். அதனால, என்ன சங்கத் தலைவரா பொறுப்பேத்து, இந்தப் பிரச்சினைக்கு தீர்வுகாண வேணுமுன்னு கேட்டுக்கிட்டாங்க. அதனால தலைவரா பொறுப்பேத்தேன்.
தொடர்ந்து, மத்திய, மாநில அமைச்சருங்க, அதிகாரிங்கள சந்திச்சி, எங்கப் பிரச்சினைய விளக்கினோம். தொடர் போராட்டத்தால 28 பர்சென்டாக இருந்த ஜிஎஸ்டி-யை 12 பர்சென்டா குறைச்சாங்க. உள்ளீட்டு வரி, வெளியீட்டு வரி ரெண்டும் சமமா இருக்கறதால, வெட் கிரைண்டர் உற்பத்தியும், வியாபாரமும் இப்ப நல்லா இருக்கு. பின்னடைவு நீங்கி, மேம்பாட்ட நோக்கிப் பயணிக்குது.
சிறு நிறுவனங்களுக்கு கடனுதவி
ஆனாலும், எங்களுக்கு சில கோரிக்கைகள் இருக்குது. கடன் கொடுக்கறது சம்பந்தமான கொள்கைகளை மாத்தணும்.
நிபந்தனைகளை தளர்த்தணும். பெரிய நிறுவனங்களுக்கு கடன் கொடுக்கறதுல ஆர்வமா இருக்காங்க வங்கியாளர்கள். பெரிய நிறுவனங்கள் எப்படியாச்சும் முதலீட்டதிரட்டிக்குவாங்க. ஆனா, சிறு, குறு உற்பத்தியாளர்கள் புதுசா தொழில் தொடங்கவும், விரிவாக்கம் செய்யவும் வங்கிகளைத்தான் நம்பியிருக்காங்க. சிறு, குறு தொழில்களுக்கு 20 பர்சென்டா இருக்கற கடன் வரம்பை, 40 சதவீதமாக உயர்த்தணும். அப்ப, வெட் கிரைண்டர் தொழில் இன்னும் வேகமா முன்னேறும். நிறைய பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும்" என்றார் நம்பிக்கையுடன்.
"நீங்கள் சோலார் மின்சார சங்கத்திலும் பொறுப்பு வகிக்கிறீர்களே?" என்று கேட்டோம். "ஆமாங்க. அருப்புக்கோட்டையில 6 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் சோலார் பவர் பிளான்ட் நடத்தி வர்றேன். சுமார் 3000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்கள் கொண்ட தமிழ்நாடு சோலார் மின்சார உற்பத்தியாளர் சங்கத்துல மாநிலப் பொருளாளராக இருக்கேன். அதுமட்டுமில்ல, கரியாம்பாளையத்துல ரூ.10 கோடி முதலீட்டுல `டெக்னிக்கல் டெக்ஸ்டைல்` யூனிட்ட ஆரம்பிச்சிருக்கேன். இதுல, வாட்டர் ப்ரூஃப் மெத்தை, படுக்கை விரிப்பு எல்லாம் தயாரிக்கிறோம். குழந்தைகளுக்கு இது ரொம்ப பயனுள்ளதாக இருக்கும். அதுமட்டுமில்ல, குளிர் மிகுந்த மலைப் பகுதி, மழை நிறைந்த பகுதிகள்ல இருக்கற ராணுவத்துக்கும் இது தேவைப்படுது" என்றார் சாஸ்தா எம்.ராஜா.
உற்பத்தி, மார்க்கெட்டிங், நிர்வாகம், நிதி...
"இன்றைய காலகட்டத்தில் புதிதாக தொழில்தொடங்க இளைஞர்களிடையே பெரிய தயக்கம் உள்ளது. ஏன், தேவையின்றி `ரிஸ்க்` எடுக்க வேண்டும். ஏதாவது ஒரு வேலைக்குப் போய், சம்பளம் வாங்கிபிரச்சினையின்றி காலம் தள்ளலாம் எனக் கருதுகிறார்கள். இவர்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?" என்று சாஸ்தா எம்.ராஜாவிடம் கேட்டோம். "அது உண்மைதாங்க. ஆனா, சம்பளத்துக்கு வேலைக்குப் போனா பெரிய வளர்ச்சி இருக்காதுங்களே. சின்னதா ஆரம்பிச்ச பல தொழில்கள்தான் இன்னைக்கு பெரிய நிறுவனங்களாக வளர்ந்திருக்கு. அதுமட்டுமில்ல, நிறைய பேருக்கு வேலை கொடுக்கறோம்ங்கற திருப்தியும் இருக்கும். முதல்ல, தொழில தொடங்கறதுக்கு முன்னாடி உற்பத்தி, மார்க் கெட்டிங் தொடர்பாக ஆய்வு செய்யணும்.
குறைஞ்சது 33 பர்சென்ட் முதலீட்டையாவது கையில வெச்சிக்கிட்டு, மிச்சத்த கடன் வாங்கணும். 5 வருஷத்துக்கு சம்பளத்த மட்டும்தான் தொழில்ல இருந்து எடுத்துக்கணும். மீதிய கடன கட்டவும்,தொழில் விரிவாக்கத்துக்கும் பயன்படுத்த னும். சின்ன சின்ன பிரச்சினைங்க வரத்தான் செய்யும். பின்னடைவை பாத்து பயந்துடக்கூடாது. தொழிற்சாலையில எல்லா வேலையும் எடுத்துப்போட்டுச் செய்யணும். உற்பத்தி, மார்க்கெட்டிங், நிர்வாகம், நிதினு நாலு பிரிவையும் தெரிஞ்சிக்கிட்டோமுன்னா, வெற்றி நிச்சயம்" என்று சக்ஸஸ் ஃபார்முலாவை மறைக்காமல் கூறிவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT