Last Updated : 05 Feb, 2019 12:46 PM

 

Published : 05 Feb 2019 12:46 PM
Last Updated : 05 Feb 2019 12:46 PM

நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்களின் செயல்பாடு எப்படி?- புள்ளி விவரங்களுடன் சுவாரஸ்ய தகவல்கள்

2014-ம் ஆண்டு முதல் மத்தியில் பதவியில் இருந்து வரும் பாஜக அரசின் பதவிக்காலம் விரைவில் முடிவடைகிறது. புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 39 எம்.பி.க்களின் பதவிகாலமும் விரைவில் முடிவடைய இருக்கிறது.

எம்.பி.க்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்து, , பிரைம் பாயிண்ட் பவுண்டேசன் எனும் தன்னார்வத் தொண்டு நிறுவனமும், 'பிரிசென்ஸ்' இணையதளப் பத்திரிகையும் ஒருங்கிணைந்து ஆண்டுதோறும் ‘சன்சத் ரத்னா’ விருது வழங்கி வருகிறது.

ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் ஆலோசனையின்படி நாடாளுமன்றத்தில் சிறப்பாக பணியாற்றி வரும் எம்.பி.களுக்கு ‘சன்சத் ரத்னா’விருது கடந்த 2010-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் சென்னையில் வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான விழா சமீபத்தில் சென்னையில் நடந்து முடிந்திருக்கிறது. நாடாளுமன்றத்தில் சிறப்புடன் பணியாற்றிய எம்.பி.க்களுக்கு 'சன்சத் ரத்னா' விருதுகளை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வழங்கி கவுரவித்தார்.

விரைவில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தைச் சேர்ந்த மக்களவை எம்.பி.க்களின் பணிகள் உள்ளிட்ட விவரங்கள் குறித்து அவர்கள் ஆய்வு செய்த பணிகள் குறித்து தெரிந்து கொள்ள பிரைம் பாயிண்ட் பவுண்டேஷனின் நிறுவனர் சீனிவாசனை ‘இந்து தமிழ்’ சார்பாக தொடர்பு கொண்டோம். அவர் அளித்த பதில்கள் வருமாறு:

கடந்த 5 ஆண்டுகளில் நமது நாடாளுமன்றத்தில் எம்.பி.க்களின் பணி குறித்து?

எம்.பி.க்களின் பணிகள் என்பது மிகவும் மாறுபட்டது. நமது அரசியல் சட்டம் இதனை தெளிவுபடுத்தியுள்ளது. தொகுதிக்கு வேண்டிய திட்டங்களை பெற்று தருவது மட்டுமே நாடாளுமன்ற உறுப்பினரின் பணியாக சிலர் எண்ணுகின்றனர். அதிலும் சாலைகள், தெருவிளக்கு, பென்ஷன் தொகை போன்ற தொகுதி மக்களின் குறைகளை கவனிப்பவரே எம்.பி.யாக பார்க்கப்படுகிறார். ஆனால் உண்மையில் அவர்களின் பணி மிகபெரியது, விரிவானது.

நாடாளுமன்றத்தில் தனது தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துவது, சட்டங்கள் இயற்றுவது, நாட்டின் நிதி சார்ந்த செயல்பாடுகளுக்கு ஒப்புதல் அளித்தல், அரசு நிர்வாகம் சரியாக செயல்படுகிறதா என்பதை கண்காணித்தல் என அவரது பணிகள் அமைந்துள்ளன.

ஆனால் நமது நாடாளுமன்ற ஜனநாயகமே அரசியல் கட்சிகளை சார்ந்து தானே இயங்குகிறது? அதனை தாண்டி எம்.பி.க்களால் செயல்பட முடியுமா?

திறன்பட செயல்படும் ஒரு எம்.பி நாடாளுமன்றத்தில் பல்வேறு வகையில் பணியாற்றி தனது பங்களிப்பபை செலுத்த முடியும்.  நமது நாடாளுமன்ற முறையை பொறுத்தவரை கட்சி சார்ந்தே இயங்குவது உண்மை தான். கட்சியின் கொள்கை, கோட்பாடு, திட்டங்கள், இலக்கு இவற்றுடன் எம்.பி.க்கள் முரண்பட முடியாது. ஒரு திட்டம் அல்லது கொள்கை முடிவுகளில் கட்சியின் முடிவுக்கு மாறாக எம்.பி என்ற முறையில் தனிப்பட்ட எண்ணங்கள் இருக்கலாம். ஆனால் அவற்றை நாடாளுமன்றத்தில் அந்த எம்.பி.யால் தெரிவிக்க முடியாது.

அதனால் தான் விரும்பு விஷயங்களை எம்.பி.க்களால் தனிநபர் மசோதாவாக கொண்டு வர முடியும். இவ்வாறு கொண்டு வரப்பட்ட பல நல்ல தனிநபர் மசோதாக்கள் பின்னர் பொது மசோதாவாக மாற்றப்பட்டு சட்டங்களாக இயற்றப்பட்டன. இவை அனைத்துக்கும் தனிப்பட்ட சில எம்.பி.க்களின் முயற்சியே காரணம்.

உதாரணமாக லோக்பால் சட்டம், நில எடுப்புச் சட்டம், குப்பை அள்ளுவோர் நலன் மசோதா, மூன்றாம் பாலினத்தவர் மசோதா என பல மசோதாக்கள் தனிநபர் மசோதக்களாக கொண்டு வரப்பட்டவையே. எம்.பி.க்கள் தனிப்பட்ட முறையில் எடுத்த முயற்சிகள் இன்று பெரிய சட்டத்தையே உருவாக்க காரணமாக அமைந்துள்ளன.

இதை தவிர வேறு எந்த வகையில் ஒரு எம்.பி என்பவர் தனது தனிப்பட்ட பங்களிப்பை நாடாளுமன்றத்தில் செலுத்த முடியும்?

நமது நாடாளுமன்றத்தில் அனைத்து பிரச்சினைகளையும் விரிவாகவும், ஆழ்ந்தும் பேசுவதற்காக அமைக்கப்பட்டது தான் நிலைக்குழுக்கள். பல்வேறு துறை சார்ந்த 24 நிலைக்குழுக்கள் உள்ளன. மக்களவை சார்ந்து 16-ம், மாநிலங்களவை 8-ம் நிலைக்குழுக்கள் உள்ளன. ஒவ்வொரு குழுவிலும் மொத்தம் தலா 30 எம்.பி.க்கள் உறுப்பினர்களாக இருப்பார்கள். இவர்களில் மக்களவை எம்.பி.க்கள் 20 பேரும், மாநிலங்களவை எம்.பி.க்கள் 10 பேரும் இடம் பெறுவர்.

நிதி விவகாரங்கள் உட்பட முக்கிய துறை சார்ந்த விவகாரங்களை விவாதிப்பதற்காக நிலைக்குழுக்கள் அமைக்கப்படுகின்றன.

இதில் நிதி மற்றும் பொது கணக்குகுழுக்களின் தலைவராக எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்கள் இருப்பது நமது மரபாக உள்ளது. புதிய திட்டங்கள், சட்டங்கள் கொண்டு வரப்படும்போது அந்தந்த துறை சார்ந்தவர்களை அழைத்து நேரடியாக நாடாளுமன்றத்தால் விசாரிக்க முடியாது. ஆனால் நிலைக்குழுக்களுக்கு அந்த அதிகாரம் உள்ளது. அதனால் அந்த பிரச்சினை குறித்து ஆழமாக விவாதித்து நிலைக்குழு நாடாளுமன்றத்துக்கு பரிந்துரைகளை அனுப்ப முடியும்.

இதுபோன்ற ஏராளமான பரிந்துரைகளை நிலைக்குழுக்கள் அனுப்பியுள்ளன. இவற்றிலும் எம்.பி.க்களின் செயல்பாடுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. கட்சி எண்ணங்களுக்கு மாறுபட்டு திட்டங்களின் முக்கியத்துவம் கருதி எம்.பி.க்கள் விவாதித்து கருத்து தெரிவிக்க முடியும்.

இதில் எம்.பிக்கள் பங்கேற்பதன் மூலம் அவர்கள் துறை சார்ந்த நிலைமை அறிந்து கொண்டு மேலும் திறன் பட செயல்பட முடியும். பல கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஒன்றாக கூடி விவாதிக்கும் மனநிலை கட்சிகளை கடந்து ஜனநாயக கடமையை ஆற்ற ஏதுவாக இருக்கும்.

தமிழக எம்.பி.க்களின் செயல்பாடுகள் குறித்து?

சன்சத் ரத்னா விருது தொடங்கப்பட்டது முதல் ஒவ்வொரு நாடாளுமன்றத்திலும் தமிழக எம்.பி.க்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்துள்ளோம். மகாராஷ்டிரா, கேரளா போலவே தமிழக எம்.பி.க்களின் பங்களிப்பு நாடாளுமன்றத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனாலும் பங்கேற்பு ஆழமானதாகவும், தரமானதாகவும் இருந்ததா என்ற கேள்வி எழுகிறது.

மகாராஷ்டிரா, கேரளா போன்ற மாநில எம்.பி.க்கள் தனிநபர் மசோதாக்களை அதிகமாக கொண்டு வந்துள்ளனர். ஆனால் தமிழகத்தில் இருந்து ஒருவர் கூட தனிநபர் மசோதாவை கொண்டு வராதது ஏமாற்றமளிக்கிறது. தமிழகம் சார்ந்த பல்வேறு பிரச்சினைகள் உள்ளபோதிலும் இது தொடர்பாக தனிநபர் மசோதாவாக கொண்டு வந்து தமிழகத்தின் குரலை ஒழிக்கச் செய்து இருக்கலாம்.

நாங்கள் ஒவ்வொரு ஆண்டும் விருது வழங்கும்போதும், மகாராஷ்டிராவே முதலிடம் பிடிக்கிறது. இந்த ஆண்டும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த 6 எம்.பி.க்கள் விருது பெற்றுள்ளனர். இடத்தை தமிழகம் பிடிக்க வேண்டும் என்பது தான் எங்கள் எண்ணம்.

தமிழக எம்.பி.க்களின் செயல்பாடுகள் (அட்டவணை)

தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் 2014-ம் ஆண்டு தேர்தலில் அதிமுக 37 இடங்களில் வென்றது. பாமக சார்பில் தர்மபுரி தொகுதியில் அன்புமணியும், பாஜக சார்பில் கன்னியாகுமரி தொகுதியில் தற்போதைய மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனும் வெற்றி பெற்றனர்.

எம்.பி.க்கள்தொகுதிவிவாதம்

தனிநபர்

மசோதா

கேள்விமொத்தம் 

வருகைப்

பதிவு

 

விஜய குமார்

மத்திய

சென்னை

63088094378%
ராதாகிருஷ்ணன்விருதுநகர்12088089274%
ஜெயவர்த்தன்தென்சென்னை56077583185%
சுந்தரம்நாமக்கல்81072580684%
வெங்கடேஷ் பாபுவட சென்னை58069875680%
வேணுகோபால்திருவள்ளூர்68063770586%

கோபால

கிருஷ்ணன்

நீலகிரி35053357185%
பரசுராமன்தஞ்சாவூர்77056764470%
நாகராஜன்கோவை24058060479%
அருண்மொழிதேவன்கடலூர்38053157185%
ஹரிஅரக்கோணம்55051256789%
ஏழுமலைஆரணி72049156388%
செந்தில் நாதன்சிவகங்கை43051355669%
மரகதம்காஞ்சிபுரம்40050954983%
செங்குட்டுவன் வேலூர்36049753378%
உதயகுமார்திண்டுக்கல்50047152185%
சத்யபாமாதிருப்பூர்63045151487%
அசோக்குமார்கிருஷ்ணகிரி85041550089%
குமார்திருச்சி37046249980%
ராமசந்திரன்ஸ்ரீபெரும்புதூர்26045648272%
மகேந்திரன்பொள்ளாச்சி41043547683%

கோபால

கிருஷ்ணன்

மதுரை27043145880%
வனரோஜாதிருவண்ணாமலை45039343877%
பாரதி மோகன்மயிலாடுதுறை49031636584%
பார்த்திபன்தேனி23033936281%
கோபால்நாகை35031935479%
சந்திரகாசிசிதம்பரம்22030833078%

ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி

 

தூத்துக்குடி20029031081%
வசந்திதென்காசி19026628575%
ராஜேந்திரன்விழுப்புரம்17026628386%
மருதராஜாபெரம்பலூர்18024926771%
அன்வர் ராஜாராமநாதபுரம்36021224873%
காமராஜ்கள்ளக்குறிச்சி37021024787%
பன்னீர்செல்வம்சேலம்21015717870%
பிரபாகரன்நெல்லை13013414782%
செல்வகுமார சின்னையன்ஈரோடு2409712174%
அன்புமணிதர்மபுரி110516247%
தம்பித்துரைகரூர்310134458%
பொன் ராதாகிருஷ்ணன்கன்னியாகுமரி-----

 

(2014 முதல் 2019-ம் ஆண்டு குளிர்கால கூட்டத்தொடர் வரையிலான புள்ளி விவரங்கள்)

(தகவல்: prs india பிரதமர், அமைச்சர்கள் நீங்கலாக)

தமிழக எம்.பி.க்களின் செயல்பாடுகள் மேம்பட வேண்டிய விஷயங்கள் என்ன?

பல மாநிலங்களைச் சேர்ந்த எம்.பி.க்கள் தனிநபர் மசோதா முதல் தங்கள் பங்களிப்பை ஆழமாகவும், சிறப்பாகவும் பதிவு செய்து வருகின்றனர். ஆனால் தமிழக எம்.பி.க்கள் எண்ணிக்கை அளவில் பங்களிப்பு இருந்தபோதிலும் அது தரமானதாக இருக்க வேண்டும். தமிழக எம்.பி.க்கள் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களை விடவும் நாடாளுமன்றத்தில் சிறந்த பங்களிப்பை செலுத்த வேண்டும். அதற்காக மக்களவைத் தேர்தலுக்கு பிறகு புதிய எம்.பி.க்களுக்கு எங்கள் அமைப்பின் சார்பில் பயிற்சி அளிக்கவும் நாங்கள் தயாராக உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x