Published : 15 Feb 2019 10:56 AM
Last Updated : 15 Feb 2019 10:56 AM
புதுச்சேரி துணைநிலை ஆளுநர்-அமைச்சரவை மோதல் நீடிப்பால் புதுச்சேரி மாநிலம் பின்னோக்கி செல்லத்தொடங்கியுள்ள சூழலில் ஹெல்மெட்டால் தர்ணா வரை சென்றுள்ளது. இருதரப்பும் புகார் தெரிவித்துள்ள சூழலில் மத்திய அரசு மவுனத்தை கலைக்க மக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.
புதுச்சேரியில் காங்கிரஸ் தேர்தலில் வென்ற நிலையில் துணைநிலை ஆளுநராக கிரண்பேடி நியமிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து நாராயணசாமி தலைமையில் அமைச்சரவை பொறுப்பேற்றது.
புதுச்சேரி மிகுந்த வளர்ச்சியடையும் என்று மக்கள் அதிக எதிர்பார்ப்பில் இருந்தனர். யாருக்கு அதிகாரம் என்ற போட்டியாலே புதுச்சேரி வளர்ச்சி பின்னோக்கி சென்றுள்ளது. கடந்த இரண்டரை ஆண்டுகளாக முக்கியத் திட்டங்கள் கூட முடக்கப்பட்ட சூழலே உள்ளது. புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்பதால் மக்களாட்சி எடுக்கும் முடிவை செயல்படுத்த முடியவில்லை இறுதி முடிவை ஆளுநர்தான் எடுக்க வேண்டும் என்பதால் அவர்தான் இறுதி கட்ட முடிவை எடுக்கிறார்.
அமைச்சரவை கூடி எடுக்கும் முடிவை கூட செயல்படுத்த முடியாத சூழல் உள்ளது. பல திட்டங்கள் முடங்கியுள்ளன. யூனியன் பிரதேச சட்டம் என்பது ஆரம்ப காலத்தில் இருந்தே உள்ளது. ஏற்கெனவே இருந்த ஆளுநர்கள் தங்களுக்குதான் அதிகாரம் என அமைச்சரவை திட்டங்களை தற்போது நடப்பது போல் யாரும் முடக்கியதில்லை என்றே பரவலான பேச்சு உள்ளது.
ஆளுநர் கிரண்பேடிக்கும் அமைச்சரவைக்கும் இடையே இடைவெளி அதிகரித்து இரட்டை அரசு செயல்படுவது வெளிப்படையானது. பல திட்டங்கள் செயல்படாததால் ஏராளமான மக்கள் வெளிப்படையாகவே பாதிக்கப்பட்டுள்ளனர். இரு தரப்பினர் மீதும் கடும் கோபத்திலும் உள்ளனர். இந்நிலையில் உச்சக்கட்டமாக கடந்த வாரம் நடந்த போக்குவரத்து வாரவிழாவின்போது ஹெல்மெட் விவகாரம் மேலும் பிரச்சினையின் உச்சக்கட்டத்துக்கு கொண்டு வந்தது.
ஹெல்மெட் பற்றி விழிப்புணர்வு இரு மாதங்கள் ஏற்படுத்தி அமல்படுத்தப்டும் என்று முதல்வர் சொல்ல ஆளுநர் கிரண்பேடியோ களத்தில் இறங்கி ஹெல்மெட் கட்டாயம் என உறுதிப்படுத்தினார். போலீஸாரையும் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டார். ஒரு கட்டத்தில் சாலையில் இறங்கி தெருவில் டூவீலரில் செல்வோரிடம் ஹெல்மெட் எங்கே என கேள்வி எழுப்ப தொடங்கி கையை பிடித்து இழுக்க தொடங்கியது மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்த மக்கள் பிரதிநிதிகளிடம் கேள்வி எழுப்ப தொடங்கினர்.
அதிமுக எம்எல்ஏக்கள் ஹெல்மெட்டை உடைத்து ஆளுநர் மீதான எதிர்ப்பை உறுதிப்படுத்தினர். கூட்டணி கட்சியான திமுக எம்எல்ஏ சிவா வெளிப்படையாக, புதுச்சேரியில் மக்களாட்சி நடக்கவில்லை. ஆளுநர் ஆட்சிதான் நடக்கிறது என்று வெளிப்படையாக தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து திமுக கட்சி தலைமை அனுமதி பெற்று ஆளுநர் மாளிகை முன்பு போராட்டம் நடத்த முடிவு எடுத்ததால் ஆளும்கட்சியான காங்கிரஸும் கட்சித்தலைமை அனுமதி பெற்று தர்ணாவில் கூட்டாக ஈடுபடதொடங்கியுள்ளனர். போராட்டத்துக்கு சிபிஐ, சிபிஎம், விசிக என பல கட்சிகளும் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் பங்கேற்க தொடங்கினர்.
ஆளுநர் மாளிகையில் தனது தனிசெயலரின் மகள் திருமணத்துக்கே செல்ல முடியாமலும் ராஜ்நிவாஸிலிருந்து வெளியே வர முடியாமல் இருப்பதை கிரண்பேடியே தெரிவிக்கும் நிலை உருவானது. ராஜ்நிவாஸ் வெளியே தர்ணாவில் முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அமர்ந்தபோதும் 21ம் தேதி சந்திப்பதாக நேரத்தை ஒதுக்கி கிரண்பேடி கடிதம் அனுப்ப, இப்போது சந்திக்க வரவேண்டியதுதானே என நாராயணசாமி பதில் அனுப்ப தொடர்ந்து நிலைமை இழுபறியானது.
தலைமைச்செயலர் அஸ்வினி குமார் நேரடியாக வந்து பேச, முக்கியமாக 39 கோரிக்கைகள் கொண்ட பட்டியலில் இலவச அரிசி ரேஷனில் தருவது, 10 ஆயிரம் ஆரசு சார்பு ஊழியர்களுக்கு ஊதியத்துக்கு அனுமதி, பஞ்சாலைகளை தொடர்ந்து இயக்குவது, ஹெல்மெட் விழிப்புணர்வு தொடர்பான 4 கோரிக்கை ஏற்றால் போதும் என முதல்வர் குறிப்பிட்டார்.
ஆனால், ஆளுநர் பதில் தரவில்லை. அடுத்தக்கட்டமாக மத்திய படை வரவழைக்கப்பட்டு அவர்களின் உதவியுடன் ராஜ்நிவாஸிலிருந்து புறப்பட்டு சென்னை சென்றார். பின்னர் டெல்லி சென்றுவிட்டு 20-ல் தான் திரும்புவதால் தர்ணா தொடர்கிறது. நிலைமை மேலும் சிக்கலாகி வரும் சூழலில் மக்கள்தான் தொடர் பாதிப்பில் உள்ளனர்.
மவுனத்தை கலைக்குமா மத்திய அரசு?
பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், "தமிழகத்தில் பல பணிகள் நடக்கையில் சிறிய மாநிலமான புதுச்சேரி மக்கள் பாதிப்பில் உள்ளோம். ஆளுநர், அமைச்சரவை தரப்பினர் தங்கள் புகார்களை மத்திய உள்துறையில் தெரிவித்துள்ளனர். தற்போது புதுச்சேரியில் நிலவும் சூழலின் அவசியத்தை உணர்ந்து அதை மத்திய அரசு போக்குவது அவசியம். மவுனத்தை மத்திய அரசு கலைக்க வேண்டும்" என்கின்றனர் கோபமாக.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT