Published : 23 Feb 2019 05:39 PM
Last Updated : 23 Feb 2019 05:39 PM

பந்திப்பூரில் வனத்தீ; பல ஏக்கர் காடு எரிந்து சாம்பல்: முதுமலையை மூட வலியுறுத்தல்

முதுமலையில் வறட்சி நிலவி வரும் நிலையில், பந்திப்பூரில் ஏற்பட்ட வனத்தீயால் பல ஏக்கர் வனம் எரிந்து நாசமானது. வறட்சி காரணமாக முதுமலையை மூட இயற்கை ஆர்வலர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் வறட்சி மேலோங்கி வருகிறது. வனங்களில் பசுமை குறைந்து, மரங்கள் காய்ந்து எலும்பு கூடுகளாக காட்சியளிக்கின்றன. வனங்களில் உள்ள நீராதாரங்களில் தண்ணீர் குறைந்து வன விலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி இடம் பெயர்ந்து வருகின்றன.

பந்திப்பூரில் வனத்தீ

இந்நிலையில், முதுமலையை ஒட்டியள்ள பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் இன்று (சனிக்கிழமை) திடீரென வனத்தீ ஏற்பட்டது. கடும் வறட்சி மற்றும் பலமாக வீசும் காற்றினால் தீ கட்டுக்குள் அடங்காமல் வேகமாக பரவியது.

பந்திப்பூர் புலிகள் காப்பக ஊழியர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இவர்களுக்கு உதவியாக முதுமலை புலிகள் காப்பகத்திலிருந்து 25 தீ தடுப்பு காவலர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இவர்களுடன் தீயணைப்பு துறையினரும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். வனத்தீ காரணமாக பல ஏக்கர் மரங்கள், புற்கள் மற்றும் தாவரங்கள் எரிந்து சாம்பலாகின.

முதுமலையை மூட வலியுறுத்தல்

வனங்களில் கடும் வறட்சி நிலவுவதாக விலங்குகள் தண்ணீர் தேடி அலைந்து வருகின்றன. காப்பகத்தில் சுற்றுலா பயணிகள் நடமாட்டம் உள்ளதால், அவை விலங்குகளுக்கு இடையூறு ஏற்படுவதால், முதுமலையை மூட வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

நீலகிரி இயற்கை சேவை அறக்கட்டளை (நெஸ்ட்) அறங்காவலர் எம்.சிவதாஸ் கூறும் போது, "முதுமலையில் உணவு மற்றும் தண்ணீர் இல்லை. தண்ணீர் தேடி யானைகள் நிலத்தில் துளையிட்டு தண்ணீரை தேடுகின்றன. இந்நிலையில், விலங்குகளின் தாகத்தை தீர்க்க வனத்துறையினர் குட்டைகளில் தண்ணீர் நிரப்பி வருகின்றனர்.

ஆனால், காப்பகத்தில் சுற்றுலா பயணிகள் நடமாட்டம் உள்ளதால், விலங்குகள் குட்டைகளில் தண்ணீர் குடிக்க காத்திருக்க வேண்டிய நிலையுள்ளது.

எனவே, முதுமலை காப்பகத்தை உடனடியாக மூட வேண்டும். கோடை மழை பெய்து பசுமை திரும்பியதும், மீண்டும் காப்பகத்தை திறக்கலாம். தற்போது முதுமலையில் யானைகள் நல வாழ்வு முகாம் தொடங்கியுள்ளதால், யானைகள் முழு ஓய்வில் உள்ளன. இதனால், முதுமலையை மூடுவது சரியான தருணமாகும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x