Published : 20 Feb 2019 06:26 PM
Last Updated : 20 Feb 2019 06:26 PM

ஜெயலலிதாவின் ஆளுமையும் அதிமுக கூட்டணியும் ஒரு பார்வை

அதிமுகவின் செல்வாக்குமிக்க தலைவர் ஜெயலலிதா தமிழகத்தில் தனித்துவமிக்க தலைமையாக இருந்த அவரது ஆளுமையை அவரது எண்ணத்தை தற்போது அமைந்துள்ள அதிமுக கூட்டணி பிரதிபலிக்கிறதா? என்பது குறித்த அலசல்.

தமிழகத்தில் திமுகவில் செல்வாக்குமிக்க தலைவர்களில் ஒருவராக இருந்த எம்ஜிஆர் பின்னர் திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டு அதிமுகவைத் தொடங்கினார். அவரது ஆட்சிக் காலத்தில் அவர் பெற்ற வெற்றியைவிட 1982-ல் கட்சியில் இணைந்து எம்ஜிஆர் மறைவுக்குப் பின் பொறுப்புக்கு வந்த ஜெயலலிதா அதிக வெற்றியைப் பெற்றுத் தந்ததாக அதிமுகவினர் பெருமையாகப் பேசுவார்கள்.

ஜெயலலிதாவின் மீது மாற்றுக்கருத்து கொண்டோரும் அவரது விட்டுக்கொடுக்காத தன்மை, ஆளுமை குறித்து மெச்சத்தான் செய்வார்கள். 2014-ம் ஆண்டு நாடே மோடி அலையில் இருந்த நேரத்தில் மோடி அலை எங்கு வேண்டுமானாலும் அடிக்கலாம், ஆனால் தமிழகத்தைப் பொறுத்தவரை ‘மோடி அல்ல இந்த லேடி’ என தைரியமாக பொதுக்கூட்டத்தில் முழக்கமிட்டவர்.

மோடியுடன் நட்பிலிருந்தாலும் அதிமுகவை தனித்தே செயல்பட வைத்தார். கண்ணுக்கெட்டிய தூரம்வரை எதிரிகளே இல்ல என்று கூறியவர் அதை செயல்படுத்தும் விதத்தில் 2014, 2016 பொதுத்தேர்தல்களில் வென்றார். பாஜகவைப் பொறுத்தவரை ஜெயலலிதாவுடன் அனுசரித்துப் போகும் நிலையில்தான் இருந்தது.

மாநில அரசைப் பாதித்த திட்டங்களில் சமரசமில்லாமல் ஜெயலலிதா எதிர்த்தார். நீட், உதய் மின் திட்டம், உணவுப் பாதுகாப்பு மசோதா, ஜிஎஸ்டி போன்றவற்றில் ஜெயலலிதா சமரசம் செய்து கொள்ளவில்லை. அவரது மறைவுக்குப் பிறகே இவை நடைமுறைக்கு வந்தன. இன்றும் சாதாரண மக்கள் நீட் விவகாரத்தில் ‘ஜெயலலிதா இருந்திருந்தா நீட் வந்திருக்காது’ என்று கூறும் அளவுக்கு மக்கள் அவரது ஆளுமை மீது நம்பிக்கை வைத்திருந்தனர்.

தற்போது அதிமுக கூட்டணி அமைத்த விதம் பலராலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது. அதிமுக கூட்டணியில் பாஜகவைக்கூட ஏற்றுக்கொள்ளும் நபர்கள் பாமகவுடன் கூட்டணி என்பதை ஏற்றுக்கொள்ளாமல் விமர்சிக்கின்றனர்.

ஜெயலலிதாவை குற்றவாளி என விமர்சித்த பாமகவுடன் அதிமுக கூட்டு என்பதை ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிக்காது என டிடிவி தினகரன் பேட்டி அளித்திருந்தார்.

இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சரும், அமமுக நிர்வாகியுமான பழனியப்பனிடம் 'இந்து தமிழ் திசை' இணையதளம் சார்பில் கேட்டபோது அவர் கூறியதாவது:

அதிமுக -பாஜக - பாமக கூட்டணி பெரிய அளவில் பாராட்டப்படுகிறதே?

யார் பெருமையாகப் பேசுவது, பெருமையாக அவர்கள் மட்டுமே பேசிக்கொள்ளவேண்டும். ஜெயலலிதா அரசு என்று சொல்கிறார்கள். ஜெயலலிதா அரசு இப்படித்தான் நடந்ததா? ஜெ.அரசு பாஜகவை ஆதரித்ததா? மோடி அரசு கொண்டுவந்த திட்டங்களை ஏற்றுக்கொண்டதில்லை.

தமிழகத்தைப் பாதிக்கும், கேடு விளைவிக்கும் எந்த திட்டங்களையும் என்றுமே ஏற்றுக்கொண்டதில்லை. ஜெயலலிதா என்ன சொன்னார்? ஏற்கெனவே ஒரு கூட்டு வைத்துவிட்டேன், இனி உயிருள்ளவரை பாஜகவுடன் கூட்டு இல்லை என்று சொன்னார்.

அப்படி சொன்னவர் உயிரிழந்த பின்னர் இவர்கள் கூட்டு வைத்துக்கொள்கிறார்கள் என்றால் இவர்கள் எப்பேற்பட்ட ஆட்கள், சந்தர்ப்பவாதிகள் இவர்கள். பதவியைக் காப்பாற்றிக்கொள்ள எதையும் செய்யக்கூடியவர்கள் இவர்கள்.

பாமகவுடன் கூட்டணி வைத்துள்ளது குறித்து?

ஜெயலலிதா நினைவிடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்தவர்கள் பாமகவினர். ஜெ. குற்றவாளி. அவர் உயிருடன் இருந்தால் ஜெயிலில் இருந்திருப்பார் என்று சொன்ன பாமகவுடன் அதிமுகவினர் கூட்டு வைக்கிறார்கள். மக்கள் யாரும் இந்தக் கூட்டணியை வரவேற்கவில்லை என்கிறேன். இவர்களாக பேசிக்கொள்கிறார்கள்.

இவர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். மக்களின் மனநிலையே வேறாக இருக்கிறது. இவர்கள் மாடியில் இருந்து கீழே உள்ள மக்களை பார்க்கிறார்கள். இவர்களுக்கு தேர்தலில் தக்க பதிலடி கிடைக்கும்.

இவ்வாறு பழனியப்பன் பதிலளித்தார்.

ஒருவர்போல் மற்றவருக்கும் ஆளுமை இருக்கும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாதுதான். முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவருக்கு இருக்கும் நெருக்கடியை வைத்து இவ்வாறு முடிவுக்கு தள்ளப்பட்டிருந்தாலும் அதை ராஜ தந்திரம் என்பதாக மிகைப்படுத்துதலும் அதீதமாகவே எதிர் தரப்பினரால் விமர்சிக்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x