Last Updated : 17 Feb, 2019 10:01 AM

 

Published : 17 Feb 2019 10:01 AM
Last Updated : 17 Feb 2019 10:01 AM

மக்களவை தேர்தலில் தொடர்ந்து கணிசமான வாக்குகளைப் பெறுவதால் திருச்சியில் போட்டியிட ஆர்வம் காட்டும் அதிமுகவினர்: எம்.பி ப.குமார், வி.ஆர்.கார்த்திக் தொண்டைமான் உட்பட 26 பேர் விருப்ப மனு

திருச்சி மக்களவை தொகுதியில் அதிமுக வேட்பாளர்கள் தொடர்ந்து கணிசமான வாக்குகளைப் பெற்று வருவதால், வரும் மக்களை தேர்தலில் அதிமுக வேட்பாளராக போட்டியிட அதிமுகவினர் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த தொகுதியில் போட்டியிட தற்போதைய எம்.பி ப.குமார், முன்னாள் எம்எல்ஏ கார்த்திக் தொண்டைமான் உட்பட 26 பேர் விருப்ப மனு அளித்துள்ளனர்.

மக்களவைத் தேர்தல் நெருங்கி வருவதால் கூட்டணி அமைப்பது, சாதகமான தொகுதிகளை கேட்டுப் பெறுவது போன்ற பணிகளில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றன. இது ஒருபுறமிருக்க அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக, அக்கட்சி யினரிடமிருந்து தொகுதி வாரியாக விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. கடந்த பிப்.4-ம் தேதியிலிருந்து 14-ம் தேதி வரை சென்னையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியினர் விருப்ப மனுக்களை அளித்தனர்.

இதில் திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, திருவெறும் பூர், ஸ்ரீரங்கம், புதுக் கோட்டை, கந்தர்வக் கோட்டை ஆகிய 6 சட்டப்பேரவை தொகுதிகளை உள்ளடக்கிய திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து 26 பேர் விருப்ப மனுக்களை அளித்துள்ளனர். இவர்களில், தற்போதைய எம்.பி.யும், அதிமுக மாநகர் மாவட்டச் செயலாளருமான ப.குமார், மாநகர மாணவரணிச் செயலாளர் சி.கார்த்திகேயன், எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் பத்மநாபன், மகளிரணிச் செயலாளர் எஸ்.தமிழரசி உள்ளிட்டோரும் அடங்குவர்.

இதுதவிர, புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 2 சட்டப்பேரவை தொகுதிகள் திருச்சி மக்களவைத் தொகுதிக்குள் வருவதால், அந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் இத்தொகுதியில் போட்டியிட தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர். புதுக்கோட்டை முன்னாள் எம்எல்ஏ வி.ஆர்.கார்த்திக் தொண்டைமான், முன்னாள் நகர்மன்றத் தலைவர் ஆர்.ராஜசேகர், நகரச் செயலாளர் க.பாஸ்கர், கந்தர்வக்கோட்டை ஒன்றியச் செயலாளர் ரெங்கராஜ், குன்றாண்டார்கோவில் ஒன்றியச் செயலாளர் பால்ராஜ், கறம்பக்குடி ஒன்றியச் செயலாளர் சரவணன் உள்ளிட்டோரும் வேட்பாளராக போட்டியிட விருப்ப மனுக்களை அளித்துள்ளனர்.

இதுகுறித்து அதிமுக நிர்வா கிகள் கூறியபோது, “கூட்டணி கட்சிகளிடையே தொகுதி பங்கீடு முடிவடையவில்லை என்றாலும், பெரும்பாலும் திருச்சி தொகுதியில் அதிமுகவே மீண்டும் போட்டியிட வாய்ப்புள்ளது.

இங்கு, ஏற்கெனவே அதிமுக சார்பில் போட்டியிட்ட ப.குமார் கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் 4,58,478 வாக்குகளும்(46.39 சதவீதம்), 2009-ம் ஆண்டு தேர்தலில் 2,98,710 வாக்குகளும்(41.59 சதவீதம்) பெற்று வெற்றி பெற்றுள்ளார். அதற்கு முன்பு 2004-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்ட பரஞ்சோதி தோல்வியடைந்த போதிலும் 2,34,182 வாக்குகள்(33.07 சதவீதம்) பெற்றிருந்தார்.

அதேபோல, கடந்த சட்டப்பேரவை தேர்தல்களிலும் இங்குள்ள தொகுதிகளில் அதிமுகவுக்கு கணிசமான அளவு வாக்குகள் கிடைத்துள்ளன. அமமுகவால் அதிமுகவின் வாக்கு சதவீதத்தில் பெரிய பாதிப்பு ஏற் படாது. எனவே, பலமான கூட்டணி அமைந்தாலும், இல்லாவிட்டாலும் தற்போதுள்ள வாக்கு சதவீதத்துடன் நடுநிலையாளர்களின் ஆதரவை யும் பெற்றால், இத்தொகுதியில் மீண்டும் அதிமுக வெற்றி பெற வாய்ப்புள்ளது. இதன் காரணமாகவே, பலர் விருப்ப மனுக்களை அளித்துள்ளனர். இவர்களிடம் அதிமுக தலைமைக் கழகத்தால் நேர்காணல் நடத்தப் பட்டு, வேட்பாளர் இறுதி செய்யப்படுவார்” என்றனர்.

பெரம்பலூரை குறிவைக்கும் முன்னாள் அமைச்சர்கள்

திருச்சி மாவட்டத்திலுள்ள மண்ணச்சநல்லூர், முசிறி, லால்குடி, துறையூர், கரூர் மாவட்டத்திலுள்ள குளித்தலை, பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள பெரம்பலூர் ஆகிய 6 சட்டப்பேரவை தொகுதிகளை உள்ளடக்கி பெரம்பலூர் மக்களவைத் தொகுதி அமைந்துள்ளது. இங்கு அதிமுக வேட்பாளராக போட்டியிட தற்போதைய எம்.பி மருதைராஜா, திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்களான பரஞ்சோதி, என்.ஆர்.சிவபதி, கே.கே.பாலசுப்பிரமணியன், திருச்சி புறநகர் மாவட்ட முன்னாள் செயலாளர் பிரின்ஸ் தங்கவேலு, கரூர் மாவட்ட பொருளாளர் குளித்தலை கண்ணதாசன் உட்பட 15-க்கும் மேற்பட்டோர் விருப்ப மனுக்களை அளித்துள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x